OUR CLIENTS
தமிழகத்தில் நீராதாரங்களை அதிகரிக்க காவிரி - பாலாறு இணைப்பு சாத்தியம் காவிரி வெள்ள நீரால் ஜீவநதியாக மாறும் பாலாறு
தமிழகத்தில் நீராதாரங்களை அதிகரிக்க காவிரி - பாலாறு இணைப்பு சாத்தியம் காவிரி வெள்ள நீரால் ஜீவநதியாக மாறும் பாலாறு Posted on 07-Jan-2019 தமிழகத்தில் நீராதாரங்களை அதிகரிக்க  காவிரி - பாலாறு இணைப்பு சாத்தியம்  காவிரி வெள்ள நீரால் ஜீவநதியாக மாறும் பாலாறு

சென்னை, ஜன.7-

தமிழகத்தின் குடிநீர் தேவைக்கு இப்போதுள்ளதை விட, 2050ம் ஆண்டில் கூடுதலாக 67 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. அதற்கேற்ற வகையில், அதற்கான நீர் ஆதாரத் திட்டங்களை செயல்படுத்த ஆய்வு செய்து வரும் தமிழக அரசு, புதிய நீர்த்தேக்கங்கள் கட்டவும், ஏரி, குளங்களை ஆழப்படுத்தவும் நதிகளை கால்வாய்கள் மூலம் இணைக்கவும் முடிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள், 14,098 ஏரிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் 250 டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இதைக் கொண்டு ஓரளவுக்கு நீர்பாசனம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.   மாநில நீர் மேலாண்மை முகமை மூலம் சமீபத்தில் செய்த ஆய்வில், வரும் 2050ம் ஆண்டில்  குடிநீர் தேவைக்காக கூடுதலாக 67 டிஎம்சி தண்ணீர்  தேவை அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  
தமிழகத்தில் பருவமழை மூலம் கிடைக்கும் நீரை முழுவதுமாக சேமிக்க விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏரிகளை இணைப்பதா அல்லது புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்குவதா என்பது குறித்து பொதுப்பணித் துறை தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் சென்னையில் ஓரத்தூர் - ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது.
காவிரி-பாலாறு இணைப்பு
இந்நிலையில் காவிரி - பாலாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.  கர்நாடகாவின் நந்தி துர்கம் என்ற மலையில் உற்பத்தியாகும் பாலாறு, 60 மைல் பாய்ந்து ஆந்திர மாநிலம், குப்பம் மாவட்டத்தில் நுழைந்து 30 மைல்கள் ஓடி,  தமிழகத்தின் எல்லையான வாணியம்பாடி அருகேயுள்ள புல்லூரில் தடம் பதிக்கிறது. அங்கிருந்து வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக 140 மைல்கள் ஓடி, கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.
கடந்த 1892ம் ஆண்டுக்கு முன்பு பேத்தமங்கலம் என்ற இடத்தில் பாலாற்றில் 15 அடி உயர தடுப்பணையை கர்நாடகா கட்டியது. இதையடுத்து, சென்னை ராஜதானி - மைசூர் இடையே 1892ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, பாலாற்றில் புதிய அணைகள் கட்டக்கூடாது. ஏற்கனவே உள்ள அணைகளின் உயரத்தை உயர்த்தக் கூடாது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி 1892க்கு பிறகு சேத்தமங்கலம் அணை உயரத்தை 30 அடியாக கர்நாடகா உயர்த்தியது. மேலும்,  பாலாற்றில் ராமாசாகர் என்ற புதிய அணையையும் கட்டி, பாலாற்று நீரை அதில் நிரப்பிக் கொண்டது.
ஆந்திர அரசும் 1892ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி குப்பம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 20 அடி உயரத்தில் 22 தடுப்பு அணைகளை (30 மைல்களுக்குள்) கட்டியது. இதனால், தமிழகத்திற்கு பாலாறு தண்ணீர் வருவது கானல் நீராக மாறியது.  1892ம் ஆண்டு ஒப்பந்தப்படி பாலாற்று நீரை கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், இதுவரையில் இந்த இரு மாநிலங்களும் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை வழங்கவில்லை.  பாலாறு கர்நாடகத்தில் 60 மைல் பாய்வதால் 25 சதவீதமும், ஆந்திராவில் 30 மைல் கடப்பதால் 25 சதவீதமும், தமிழ்நாட்டில் 140 மைல் கடப்பதால் 50 சதவீதமும் நீரை ஆண்டுதோறும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று  ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆண்டுதோறும் பாலாற்றில் குறைந்தபட்சம் 80 டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில் கர்நாடகம், ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களும் தலா 20 டிஎம்சி தண்ணீரும், தமிழகம் 40 டிஎம்சி தண்ணீர் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். ஆனால், இதன்படி இரு மாநிலங்களும் தண்ணீரை விடுவது இல்லை. 
இதுபோன்று விதிகளை மீறிசெயல்படுவதைகுறித்து,  நாடாளுமன்றத்தில் 1956ல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அரசு நிறைவேற்றிய சட்டத்தின்படி, மாநிலங்களுக்கு இடையே நதி நீர்பங்கீடு சரியாக நடக்காவிட்டால், அந்த நதியை தேசியமயமாக்க வேண்டும். அதை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து, நதி நீர் ஆணையம் அமைத்து, அந்த நதியின் நீரை மாநிலங்களுக்கு நியாயமான முறையில் பங்கிட்டு வழங்க வேண்டும். 
காவிரி ஆற்றின் குறுக்கே ஒகேனக்கல்லுக்கு மேற்கே 220 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையில் அணையை கட்டி, அதில், ஆண்டுதோறும் 720 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் 1960ல் ஒரு திட்டத்தை தயாரித்தது. ஆனால், அது இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்பதை பொதுப்பணித் துறை முன்னாள் தலைமை பொறியாளர் குப்புராஜ், கடந்த 2000ம் ஆண்டில் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.  
குப்புராஜ் கூறியதுபோல், புதிய அணையில் காவிரி வெள்ள நீரை நிரப்பலாம். இதில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்த பின்னர், தண்ணீரை கால்வாய் மூலம் பாலாற்றுக்கு கொண்டு சென்று ஆவாரங்குப்பத்திற்கு அருகே சேர்த்து விடலாம்.  புதிய அணையில் இருந்து காவிரி நீரை மின் மோட்டார்கள் மூலம் 10 மைலுக்கு அருகே உள்ள பென்னாகரம் கொண்டு சென்று, அங்கு உருவாக்கப்படும் ஏரியில் சேமிக்கலாம். பின்னர், பென்னாகரம் ஏரியில் இருந்து கால்வாய் மூலம் பாலக்கோடு, கிருஷ்ணகிரி, நாட்றம்பள்ளி வழியாக ஆவாரங்குப்பம் கொண்டு செல்லலாம். பென்னாகரத்தில் இருந்து ஆவாரங்குப்பம் அருகில் பாலாற்றில் நீர்தானாகவே சேர்ந்துவிடும். மற்றொரு கால்வாய் திட்டம் மூலம் நாட்றம்பள்ளியில் இருந்து வாணியம்பாடிக்கு கொண்டு சென்று பாலாற்றில் சேர்த்து விடலாம். இந்த இணைப்பு திட்டத்தின் மூலம் காவிரி வெள்ள நீரால் பாலாறு ஜீவநதியாக மாறும். 
இந்த இணைப்பு திட்டத்தால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களும், செங்கல்பட்டு முதல் பரங்கிமலை வரை உள்ள புறநகர் பகுதி மக்களும் பாசன வசதியும் குடிநீர் வசதியும் பெறுவார்கள். ஒன்றரை கோடி மக்கள் பயன் பெறுவார்கள். இந்த திட்டத்தை தமிழக அரசு பரிசீலனைக்கு எடுத்து அமல்படுத்தினால் வடமாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள். 

Label