OUR CLIENTS
சத்துணவு மையங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் இரண்டு மாதங்களாக பொருட்கள் விநியோகம் திடீர் நிறுத்தம்!
சத்துணவு மையங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் இரண்டு மாதங்களாக பொருட்கள் விநியோகம் திடீர் நிறுத்தம்! Posted on 08-Jan-2019 சத்துணவு மையங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் இரண்டு மாதங்களாக பொருட்கள் விநியோகம் திடீர் நிறுத்தம்!

விருத்தாசலம், ஜன.8-

விருத்தாசலம் நுகர்பொருள் வாணிப கழக குடோனிலிருந்து சத்துணவு மையங்களுக்கு இரண்டு மாதங்களாக உணவு பொருட்கள் விநியோகம் செய்யாததால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், உப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன. அதன்படி, விருத்தாசலம் கிடங்கில் இருந்து விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர் வட்டாரங்களில் உள்ள 350க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இயங்கும் சத்துணவு மையங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. 
இதன் மூலம் இப்பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மதிய உணவு திட்டத்தில் பயனடைகின்றனர்.பொதுவாக மாதம்தோறும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த சத்துணவு மைய பொறுப்பாளர்கள் மூலம் வருகைப் பதிவேடு தயாரித்து, ஒன்றிய அலுவலகங்களுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்படும். அங்கு பட்டியலை சரிபார்த்து, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அறிக்கை வழங்கியதும், லாரிகள் மூலம் சத்துணவு மையங்களுக்கு பொருட்கள் வழங்கப்படும். 
இதற்காக 45 நாட்களுக்கு முன்னதாகவே சத்துணவு மைய பொறுப்பாளர்கள் பட்டியல் தருவதும், மாதம் தோறும் முதல் வாரத்திற்குள் பொருட்கள் சப்ளை செய்வதும் வழக்கம். இந்நிலையில், விருத்தாசலம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து நவம்பர், டிசம்பர் ஆகிய இரு மாதங்களாக பொருட்கள் சரிவர சப்ளை செய்யாததால், சத்துணவு மையங்களில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. 
இதனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால், அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்தும், தங்களது சொந்த பணத்தின் மூலமும் பொருட்களை வாங்கி உணவு சமைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.எனவே, விருத்தாசலம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து விருத்தாசலம், நல்லூர், கம்மாபுரம் ஒன்றிய அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சத்துணவு மைய பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், 'சத்துணவு மையங்களுக்கு பொருட்கள் அனுப்பாதது குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு கண்காணிப்பாளரிடம் கேட்டால், லாரி டெண்டரில் பிரச்னை மற்றும் அலுவலர்கள் சஸ்பெண்ட் என காரணம் கூறுகின்றனர். குறைந்த வருமானத்தில் பணிபுரியும் நாங்கள், சத்துணவு சாப்பிடும் ஏழை, எளிய மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, சொந்த பணத்தை செலவிட வேண்டிய அவலம் நீட்டிக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு உள்ளோம். தலைமைச் செயலகத்திற்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை என்றார்.

Label