OUR CLIENTS
ஆக்கிரமிப்பு பிடியில் மீண்டும் கூவம் நதி! கண்மூடியுள்ள பொதுப்பணித்துறை, மாநகராட்சி?
ஆக்கிரமிப்பு பிடியில் மீண்டும் கூவம் நதி! கண்மூடியுள்ள பொதுப்பணித்துறை, மாநகராட்சி? Posted on 09-Jan-2019 ஆக்கிரமிப்பு பிடியில் மீண்டும் கூவம் நதி! கண்மூடியுள்ள பொதுப்பணித்துறை, மாநகராட்சி?

சென்னை, ஜன.9-

கூவத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ள பகுதியில்  தனியார் கட்டுமான நிறுவனத்தினர்  குடியிருப்பு கட்டுமான பணிக்காக தோண்டிய மண்ணை  மலைபோல் குவித்து வைத்துள்ளதால் கூவம் மீண்டும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது.

சென்னை மாநகரத்தில் கடந்த 2015ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு, சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள்தான் காரணம் என கூறப்படுகிறது. நீதிமன்றமும் நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.  அதற்கான பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. அந்த வகையில் கூவம் மற்றும் அடையாறு நதி கரையோரங்களில் தனியார் வசம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமாரிக்கப்பட்டு வரும் நீர் வழிக்கால்வாய்களை மறுசீரமைப்பு செய்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காகவும், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும், நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் இருக்கும் பொதுமக்களுக்கும் நாவலூர், திருவொற்றியூர், எழில்நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 

கூவம் நதியை முழுமையாகச் சீரமைக்க  தமிழக அரசு  ரூ.3,800 கோடி மதிப்பில் ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்த சீரமைப்பு பணியின் போது  பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் மறுகுடியமர்வு செய்யவும்  ரூ.2,000 கோடி செலவிட தீர்மானிக்கப்பட்டது.  கூவம் மற்றும் அடையாறு நதி கரையோரங்களில் தனியார் வசம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 210.18 கோடி மதிப்பில் நிரந்தர தடுப்பு வேலிகள், பூங்காக்கள், நடைபாதைகள் அமைத்தல் மற்றும் பாலங்கள் அழகுபடுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை  சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை  ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சி  பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல துறைகள் ஒருங்கிணைந்து  இந்த சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றன. இதன்படி  கூவம் கரையில்  மதுரவாயல் கோல்டன் ஜார்ஜ் ரத்தினம் சாலை பாலம் துவங்கி  போர் நினைவு சின்னம் அருகே முகத்துவாரம் வரை  தொடர் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. மேலும்  ஆங்காங்கே இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா  மிதிவண்டி பாதை  மூலிகை செடிகள் சூழ்ந்த இயற்கை நடைபாதை ஆகியவை  சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட உள்ளன. 
சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கூவம் நதி மறுசீரமைப்ப பணி மேற்கொள்ளும் பொருட்டு, கூவம் நதியோரம் 14,257 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளார்கள் என கண்டறியப்பட்டு, 6,927 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர் வழிக்கால்வாய்கள் ஓரம் மொத்தம் 3,041 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளார்கள் என கண்டறியப்பட்டு, 1,671 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன. விரிவாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் வெள்ளத்தடுப்பு கட்டும் பணி மேற்கொள்ள நான்கு கால்வாய்களின் ஓரம் வசித்த 81 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளார்கள் என கண்டறியப்பட்டு, 81 குடும்பங்களும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன. கூவம் நதி, அடையாறு நதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நீர் வழிக் கால்வாய்களில் 26,837 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என கண்ட றியப்பட்டு, இதுவரை 12,813 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி மறுகுடியமர்வு செய்ய தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கூவம் ஆற்றில் தற்போது தெற்கு கூவம், மேற்கு கூவம் மற்றும் கிழக்கு கூவம் ஆகிய சாலையோரங்களில் 383 சிறு கடைகள் ஆக்கிரமிப்புகள் என கண்டறியப்பட்டு 287 சிறு கடை ஆக்கிரமிப்பாளார்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அருகில் புதியதாக உருவாக்கப்பட்ட ஆட்டோநகர் மனை பிரிவுகளில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 190 சிறு கடை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் துவக்கமாக  கூவம் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை  மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை மேற்கொண்டது. அதன் பின்  மதுரவாயல் முதல் முகத்துவாரம் வரை  மாநகராட்சி எல்லையான  23.1 கி.மீ. தூரம் கூவத்தில்  யாரும் அத்துமீறி நுழைய முடியாத வகையில்  பாதுகாப்பு வேலி அமைக்க  ரூ.35 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இந்த பணிகள் நடந்து வரும் நிலையில்  நெற்குன்றம் கூவம் கரையோரம்  தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. பல அடுக்கு கொண்ட  இந்த கட்டுமான பணிக்கு அடித்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.  இந்த கட்டுமான திட்டத்தில்  அடித்தளம் அமைக்க பள்ளம் தோண்டிய போது எடுக்கப்பட்ட மண்ணை  கூவத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலியை தாண்டி  ஆற்றுக்குள் மலைபோல் கொட்டி உள்ளனர். 
இதை  பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். கூவத்தில் இதற்கு முன்  கட்டட கழிவுகளை கொட்டிய பகுதிகளில் தான்  பிற்காலத்தில் ஆக்கிரமிப்புகளாக உருவாகின. அதே போல  தற்போது மண் குவியல் கொட்டி வைக்கப்பட்டுள்ள பகுதியிலும்  எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகள் உருவாக வழி பிறக்கும். கூவத்தில்  கட்டட கழிவுகள்  மண் குவியல் உள்ளிட்டவற்றை கொட்டும் தனியார் மீது  அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கூவம் நதி மறு சீரமைப்பு திட்டத்தில்  எங்களுக்கென சில பணிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுப்பது; மண்  கட்டட கழிவுகளை கொட்டுதல் போன்ற கூவத்தில் நடைபெறும் அத்துமீறல்களை தடுக்க வேண்டியது பொதுப்பணித்துறை தான்.  ஆற்றுக்குள் மண்  கட்டட கழிவுகளை இரவில் கொட்டிவிடுகின்றனர். ஆற்றுக்குள் மண் கொட்டிய தகவல் கிடைத்ததும்  'நோட்டீஸ்' வழங்கப்பட்டு உள்ளது. இரண்டு நாட்களில்  மண் குவியலை அகற்ற  சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

Label