OUR CLIENTS
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அதிக மாற்றம் இருக்காது: ‘டோனி எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்’ துணை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அதிக மாற்றம் இருக்காது: ‘டோனி எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்’ துணை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி Posted on 11-Jan-2019 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அதிக மாற்றம் இருக்காது: ‘டோனி எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்’ துணை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

சிட்னி:-

இந்திய அணி வீரர்களுக்கு டோனி வழிகாட்டியாக இருக்கிறார் என்றும், உலக கோப்பை போட்டியில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்த இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
களத்திலும், ஓய்வறையிலும் டோனி இருக்கும் போது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதை பல ஆண்டுகளாக நாங்கள் பார்த்து வருகிறோம். அவர் உடன் இருக்கும்போது, அணியில் உள்ள வீரர்களுக்கும் அமைதி வந்து விடும். அது மிகவும் முக்கியமானதாகும். இதே போல் விக்கெட் கீப்பிங் பணியை செய்வதால், யுக்திகளை வகுப்பதில் கேப்டனுக்கும் ஓரளவு உதவிகரமாக இருக்கிறார்.
டோனி பல ஆண்டுகள் அணியை வழிநடத்தியதுடன், வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர். அதனால் அவர் அணியில் அங்கம் வகிக்கும் போது, எப்போதும் உதவியாக இருக்கிறார். சொல்லப்போனால் வீரர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறார். பேட்டிங்கில் பின்வரிசையில் ஆடும் போது, ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது மிகவும் முக்கியம். இந்த வகையில் நிறைய ஆட்டங்களில் வெற்றியை தேடித்தந்துள்ளார். ஆட்டத்தின் போக்கு குறித்து அவரது தெளிவான சிந்தனையும், அறிவுரைகளும் அணிக்கு மிகவும் தேவையாகும்.
மேலும் இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கும் டோனி பக்கபலமாக இருக்கிறார். அதாவது விக்கெட் கீப்பராக இருப்பதால் பேட்ஸ்மேன் எந்த மாதிரி ஆட முயற்சிக்கிறார் என்பதை முன்கூட்டியே கணித்து பவுலர்களுக்கு தெரியப்படுத்தி, அதற்கு ஏற்ப பந்து வீச வைக்கிறார்.
குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் 2017-ம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்கள். வெளிநாட்டிலும் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். அவர்களது அபார பந்து வீச்சுக்கு, டோனியின் வழிகாட்டுதலும் முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை. கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் கூட அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை டோனி அளிக்கிறார். உலக கோப்பை போட்டியிலும் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று நம்புகிறேன்.
இந்த ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய அணி சவால் மிக்க அணியாகவே காணப்படுகிறது. இந்த பவுலர்கள் அதிகமான ஒரு நாள் போட்டிகளில் விளையாடியதில்லை. கடந்த முறை ஒரு நாள் போட்டித் தொடரில் இங்கு விளையாடிய போது இதே பவுலர்கள் ஆடவில்லை. அப்படி இருந்தும் அவர்கள் எங்களை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.
ஆஸ்திரேலிய அணியில் இன்னும் தரமான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதனால் அவர்களுக்கு நாங்கள் நெருக்கடி கொடுக்கும் வகையில் விளையாட வேண்டியது அவசியமாகும்.
அணியின் நம்பிக்கை இப்போது உயர்ந்த நிலையில் உள்ளது. அதே உத்வேகத்தை ஒரு நாள் தொடரிலும் தொடர வேண்டும்.

Label