OUR CLIENTS
வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!கல்குவாரி குட்டை தண்ணீரை பயன்படுத்த ஆய்வு..
வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!கல்குவாரி குட்டை தண்ணீரை பயன்படுத்த ஆய்வு.. Posted on 11-Jan-2019 வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!கல்குவாரி குட்டை தண்ணீரை பயன்படுத்த ஆய்வு..

வேலூர்  ஜன.11-

மழையின்மை  ஏரிகளில் நீர் இருப்புக் குறைவு  முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்மை உள்ளிட்ட காரணங்களால்  சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. விவசாயிகளும் நெல்லுக்கு மாற்றாக நிலக்கடலை  எள்  உளுந்து ஆகியவற்றைப் பயிர்செய்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால்  சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளும்  15 ஆண்டுகளுக்கு பிறகு  கடுமையான வறட்சியை சந்தித்துள்ளன. இதனால்  நடப்பாண்டில்  சென்னை மாநகரில்  குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நிலைமையை சமாளிக்க  அரசு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
சென்னை மாநகரின்  தினசரி குடிநீர் தேவை  85 கோடி லிட்டர். ஆனால்  தற்போது நாள் ஒன்றுக்கு  55 கோடி லிட்டர் நீர்  வினியோகம் செய்யப்படுவதாக  சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  ஆனால் உண்மையில்  45 கோடி லிட்டர் அளவிற்கு மட்டுமே தற்போது நீர் வினியோகம் ஆவதாக  உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்  தற்போதே நீர் வினியோக மையத்தில் இருந்து  கடைகோடியில் உள்ள பகுதிகளுக்கு குழாய் மூலமான குடிநீர் வினியோகம் இல்லை.  பூண்டி,  செம்பரம்பாக்கம்,  சோழவரம்,  புழல் ஆகிய நான்கு ஏரிகள் தான் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை  பூர்த்தி செய்து வருகின்றன.தற்போது  இந்த ஏரிகளின் நீர் இருப்பு  மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில், ஏரிகளின் நீர்இருப்பு 4,897 மில்லியன் கனஅடியாக இருந்தது. ஆனால், தற்போது 1,273 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளது.


வடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால்  15 ஆண்டுகளுக்கு பிறகு  நான்கு ஏரிகளிலும்  கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால்  நடப்பாண்டில்  சென்னையின் குடிநீர் தேவையை எவ்வாறு சமாளிப்பது என  சென்னை குடிநீர் வாரியம் விழிபிதுங்கி நிற்கிறது.நான்கு குடிநீர் ஏரிகளிலும் சேர்த்து தற்போது  1.37 டி.எம்.சி.  அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதைக்கொண்டு  தற்போதைய நீர் வினியோக அளவுப்படி கணக்கிட்டால் கூட  பிப்ரவரி இறுதி வரை மட்டுமே தாக்குபிடிக்கும். அதிர்ஷ்டவசமாக  தென்மேற்கு பருவ மழை  அளவுக்கு அதிகமாக கொட்டி தீர்த்ததால்  மேட்டூர் அணை நீர் மூலம்  வீராணம் ஏரியில் முழு கொள்ளளவு நிரம்பி உள்ளது. நீர்மட்டம் சரிவு இதில் இருந்து  ராட்சத குழாய் மூலம்  சென்னைக்கு தினமும்  12 கோடி லிட்டர் நீர் கொண்டு வரப்படுகிறது.
பாசனத்திற்கும்  குடிநீர் தேவைக்கும் தொடர்ந்து நீர் எடுக்கப்பட்டால்  வீராணம் ஏரியும்  இரண்டு மாதங்களில் சரிவை சந்திக்கும். இதனால்  ஏப்ரல் முதல் அடுத்த வடகிழக்கு பருவமழை காலம் வரை  நிலைமையை சமாளிக்க  மீஞ்சூர்,  நெம்மேலியில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை  வாரியம் பெரிதும் நம்பியுள்ளது. இந்த நிலையங்கள் மூலமாக மட்டும்  20 கோடி லிட்டர் குடிநீர்  தினமும் கிடைக்கும். இது சென்னையின் குடிநீர் தேவையை  நான்கில் ஒரு பங்கு தான் பூர்த்தி செய்யும். பருவ மழை பொய்த்ததால்  சென்னை  காஞ்சிபுரம்  திருவள்ளூர் மாவட்டங்களில்  நிலத்தடி நீர்மட்டமும் கடும் சரிவை சந்தித்துள்ளது.இதனால்  விவசாய கிணறுகளில் இருந்து  லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் நீர் எடுக்கும் திட்டமும் கைகொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. 
இவற்றை கருத்தில் கொண்டு  உள்ளூர் நீர் ஆதாரங்கள்  கல்குவாரி குட்டைகள்  சென்னையை சுற்றியுள்ள நீர் நிலைகள் ஆகியவற்றில் இருந்து  நீர் எடுப்பதற்கான முயற்சியில்  சென்னை குடிநீர் வாரியம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, குட்டை நீரின் தன்மையை ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளது.சென்னை மாநகராட்சியை ஒட்டி, பல்லாவரம் நகராட்சி உள்ளது. 42 வார்டுகளை உடைய இந்நகராட்சியில் பாலாறு மற்றும் மெட்ரோ வாட்டர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. பாலாறு திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர்; மெட்ரோ வாட்டர் மூலம் 10 - 12 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. இதை, கீழ்நிலை மற்றும் மேல்நிலை தொட்டிகளில் நிரப்பி வாரத்திற்கு ஒரு முறை வினியோகிக்கின்றனர். கோடை காலத்தில் இந்த அளவு குறைந்து விடுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் சிரமப்படுகின்றனர். அதுபோன்ற நேரத்தில், நகராட்சி மூலம், லாரி தண்ணீர் வினியோகித்தாலும், போதுமானதாக இல்லை.இப்பிரச்னையை கருத்தில் கொண்டு, செம்பரம்பாக்கம் குடிநீர் திட்டத்திற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால், நாள் ஒன்றுக்கு, 29 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இதற்கிடையில், பம்மல் - அனகாபுத்தூரை போல், கல்குவாரி குட்டை தண்ணீரை, குடிநீராக பயன்படுத்துவது குறித்து, பல்லாவரம் நகராட்சியில், அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.ஜமீன் பல்லாவரம், கச்சேரி மலை குட்டை, பழைய பல்லாவரம், திருநீர்மலை, திரிசூலம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குட்டைகளை, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், பிரகாஷ் சமீபத்தில் ஆய்வு செய்தார். ஓரளவு தீர்வு இந்த கல்குட்டைகளின் ஆழம், தண்ணீரின் தன்மை, குடிநீருக்கு ஏற்றதா ஆகியவை குறித்து ஆய்வு செய்ய அவர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கான ஆய்வு பணியை, அதிகாரிகள் துவங்கி உள்ளனர். கல்குவாரி நீரை சுத்திகரித்து வினியோகித்தால், பல்லாவரம் நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்.
தாம்பரம் கடப்பேரி, திருநீர்மலை, திரிசூலம், பல்லாவரத்தில், 10க்கும் மேற்பட்ட கல்குவாரி குட்டைகள் உள்ளன. இவை, ஒவ்வொன்றும், 100 - 150 அடி ஆழம் கொண்டவை. பல ஆண்டுகளாக, இந்த குட்டைகள், துணி துவைக்கவும், குளிப்பதற்கும் மட்டுமே பயன்படுகிறது. கோடை காலத்தில், இவற்றில் குளிக்கும் மாணவர்கள், தண்ணீரில் மூழ்கி இறப்பது, ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த குட்டைகளை ஒருங்கிணைத்து, தண்ணீரை சுத்திகரித்து, குடிநீராக பயன்படுத்தலாம். இதன்மூலம், புறநகர் நகராட்சிகளுக்கு, கோடை காலத்தில் போதிய குடிநீர் கிடைக்கும்.
இதைத்தவிர  தென்மேற்கு பருவ மழையால்  நிரம்பிய மேட்டூர்  பவானிசாகர் உள்ளிட்ட பெரிய அணைகளில் இருந்தும்  சென்னைக்கு நீர் கொண்டு வர  பொதுப்பணித் துறையுடன்  வாரியம் ஆலோசித்து வருகிறது.சென்னையில்  2003ம் ஆண்டு  வடகிழக்கு பருவ மழை கடுமையாக ஏமாற்றியது. இதனால்  2004ல்  குடிநீர் ஏரிகள் வரலாறு காணாத வறட்சியை சந்தித்தன. அந்த ஆண்டு  நான்கு ஏரிகளிலும் சேர்த்தே  வெறும்  0.26 டி.எம்.சி.  நீர் மட்டுமே இருந்தது. அந்த ஆண்டு  கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.அப்போது  திருவள்ளூர் மாவட்டம்  பெரியபாளையம்  எல்லாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகளில் தண்ணீர் எடுத்தனர். விவசாயக் கிணறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் லாரிகளால்  கீழ்பாக்கத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு  தண்ணீர் கொண்டு வரப்பட்டு  சுத்திகரிப்பு செய்து  சென்னை வாசிகளுக்கு வழங்கப்பட்டது. இருந்தும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. 
2016ல்  வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால்  2017 கோடையில்  கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது  கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்  வீராணம் ஏரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட விவசாயக் கிணறுகள் தான்  சென்னையை காப்பாற்றின. வீராணம் ஏரி  முழு கொள்ளளவை எட்டி உள்ளதால்  சென்னையின் குடிநீர் தேவைக்கு  அது ஓரளவு கை கொடுக்கும். கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் உதவும். கிருஷ்ணா நதி நீரையும்  கேட்டு பெற வேண்டும். இவற்றை கொண்டு  கோடையை சமாளிக்கலாம். கோடையில்  சென்னையில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. 
கை கொடுக்குமா கிருஷ்ணா நதிநீர்?
ஆந்திர அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி  ஆண்டுதோறும்  ஜனவரி முதல் ஏப்ரல் வரை  8 டி.எம்.சி. யும்  ஜூலை முதல் அக்டோபர் வரை  4 டி.எம்.சி. யும்  தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீர் வழங்க வேண்டும். ஆனால்  ஆந்திராவிலும்  வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால்  அங்கிருந்து எதிர்பார்க்கும் அளவு நீர் கிடைப்பது சிரமம். 2018ல் மட்டும்  6 டி.எம்.சி.  நீரை  ஆந்திரா வழங்கி உள்ளது.   இந்நிலையில் தமிழக பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர்கள் முரளீதரன், பக்தவத்சலம் தலைமையில் அதிகாரிகள் குழு ஐதராபாத் சென்று கிருஷ்ணா நதி மேலாண்மை வாரிய கூட்டத்தில் பங்கேற்றனர். கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியக்குழு தலைவர் ஆர்.கே. ஜெயின் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பொதுப் பணித்துறை உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் பற்றாக் குறையை சமாளிக்க சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினர். கிருஷ்ணா நீர் கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.  
இதற்கிடையில், வடகிழக்குப் பருவமழைக் காலத்திலும் போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மதுராந்தகம், செய்யூர் வட்டங்களில் விவசாயிகள் நெற்பயிருக்கான நாற்றுப் பாவியிருந்த நிலையில் போதிய மழை இல்லாததால் நாற்றங்காலில் மாட்டை மேயவிட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் வயலை உழுதுவிட்டு நெல்லுக்கு மாற்றாக நிலக்கடலை, உளுந்து, எள் ஆகிய தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களைப் பயிரிட்டு வருகின்றனர். நெல் பயிரிட முடியாமல் போனதால் காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சிக்கு உள்ளானதாக அறிவித்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே 2018 ஆம் ஆண்டின் மழையளவு இயல்பைவிட 24% சதவிகிதம் குறைந்ததாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். ஆனால் தனியார் நிறுவனங்களின் அதிகளவு நீர் உறிஞ்சலே, குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டிகின்றனர்.  எது எப்படி இருப்பினும் கொதிக்கும் வெயிலில் குடங்களை ஏந்தி, குடிநீருக்காக தெருவில் நிற்கும் சூழல் ஏற்படக் கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Label