OUR CLIENTS
விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த அரசு ஏற்பாடு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த அரசு ஏற்பாடு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு Posted on 11-Jan-2019 விவசாயிகளின் வருமானத்தை  இருமடங்காக உயர்த்த அரசு ஏற்பாடு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை, ஜன.11-

தமிழக விவசாய உற்பத்திப் பொருள்களை பதப்படுத்தி தரம் உயர்த்தப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்வதற்கான உணவுப் பூங்காக்கள் 10 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன.

இவற்றின்மூலம் தமிழ்நாடு விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த வழிவகை செய்யப்படுகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று தெரிவித்தார்.
சென்னையில் நபார்டு வங்கியின் மாநில வங்கிக் கடன் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்புரை ஆற்றினார். முதலமைச்சர் பழனிசாமியின் உரை விவரத்தின் சுருக்கம் வருமாறு: பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற பொருட்கள் தன்மை மாறாமல் விநியோகம் செய்வதற்கான உட்கட்டமைப்பு  வசதிகளை ஏற்படுத்தி, அறுவடைக்கு  பிந்தைய சேதத்தைத் தவிர்க்கவும், நுகர்வோருக்கு ஆண்டு முழுவதும் தரமான பொருட்கள் நல்ல விலைக்கு கிடைப்பதை உறுதி செய்யுவும் விநியோகத் தொடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பெரிய மற்றும் மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள் 10 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டங்களின் மூலம் விவசாய உற்பத்தி அதிகரிப்பதுடன், விவசாயி களின் வருமானமும் இரு மடங்காக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.
நபார்டு வங்கியின் மாநில வங்கிக் கடன் கருத்தரங்கில் 2019-20ஆம் ஆண்டில், தமிழ்நாட்டு மக்களுக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 900 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்குவதற்கான திட்ட கையேட்டினை வெளியிடுவதில், நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  இத்தொகையில் 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண் பெருமக்களுக்காகவும், வேளாண் சார்ந்த தொழில் களுக்காகவும் ஒதுக்கி யிருப்பதை அறிவதில் ஒரு விவசாயி என்ற முறையில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த குழுக்கள் நிலுவையின்றி வங்கியில் பெற்ற கடனை திரும்பி செலுத்தி வருகிறது என்று நபார்டு வங்கி கூறியிருப்பது, விவசாயி களின் பொறுப்புணர்வைக் காட்டுகிறது.  அதற்காக விவசாயப் பெருமக்களை நான் மனதார பாராட்டுகிறேன். மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடனுதவி பெறுவதற்கு நபார்டு வங்கி முக்கிய பங்காற்றியுள்ளது.  பெண்களின் முகத்தில் மலர்ச்சியும், அவர்களின் வாழ்வில் வளர்ச்சியும் நபார்டு வங்கி ஏற்படுத்தி யுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. 
1.1.2019 முதல் தமிழ்நாட்டில் ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியக்கூடிய 14 பிளாஸ்டிக் பொருட்களை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது.  இதனால் பொது மக்களிடையே மாற்று பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இம்மாற்றுப் பொருட்களை அதிக அளவில் தயாரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் தாராளமாக கடனுதவி வழங்கவேண்டும் என்று அன்புடன் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த தொழில் நிறுவனங்களுக்கு, வேறு தொழில்கள் தொடங்குவதற்கும் கடனுதவி அளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த வருடம் தமிழ்நாட்டிலுள்ள 2 லட்சத்து 72 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்  அதாவது  சென்ற ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு  கடன் வழங்க வங்கிகள் திட்டமிட்டிருப்பது, ஏழை பெண்களின் வாழ்வு மேலும் ஒளிர  வழிவகை செய்யும்.
சென்ற வருடம் 30 நாட்களுக்கு மேல் காவேரியில் தொடர்ந்து வெள்ள நீர் வெளியேற்றப்பட்ட காரணத்தால், 182 ஆண்டுகள் பழமையான அணைக்கட்டின் மதகுகள் சேதமடைந்தன.  புதிய நீரொழுங்கி அமைக்கும் திட்டத்திற்கு 387.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  இதற்கென நபார்டு வங்கி 368 கோடி ரூபாய் கடனுதவி வழங்க திட்டமிட்டுள்ளது. வழக்கமாக நபார்டு வங்கியால் தமிழ்நாட்டிற்கென ஒதுக்கீடு செய்யப்படும் நிதி ஒதுக்கீட்டினை காட்டிலும், இந்தத் தொகை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.  இது தமிழ்நாட்டின் மீது இந்த வங்கி கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது.
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்து விவசாயி களையும், மீனவர் களையும் பாதுகாப்பதற்காக பசுமை பருவக்கால நிதியிலிருந்து நபார்டு வங்கியின் உதவியுடன் 12 திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக நபார்டு வங்கி தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கடனுதவி அளித்து வருகிறது.  இனி வரும் காலங்களிலும், மக்கள் நலனுக்காக செயல் படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக அளவில் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி அளிக்க நபார்டு வங்கியை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  
 இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண் பெருமக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் வங்கிக் கடன் கொடுத்தல், கடன் பெறும் வழிமுறைகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக் காக விருது பெறும் வங்கிகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தன் பணிகளை நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கையாள்வதற்கான விருது பெறுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  சிறந்த முறையில் பணியாற்றி முன்மாதிரி வேளாண்மை விற்பனைக் குழுக்கள் விருதினைப் பெற்ற வேளாண்மை உற்பத்தி குழுக்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண் பெருமக்கள் உட்பட இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. சண்முகம், இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் டாக்டர் கே. பாலு, நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் திருமதி பத்மா ரகுநாதன் மற்றும் நபார்டு வங்கியின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Label