OUR CLIENTS
எட்டயபுரம் சந்தையில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு விற்பனையான ஆடுகள்
எட்டயபுரம் சந்தையில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு விற்பனையான ஆடுகள் Posted on 14-Jan-2019 எட்டயபுரம் சந்தையில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு விற்பனையான ஆடுகள்

எட்டயபுரம், ஜன.14-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் சந்தையில் ஒரு நாள் மட்டும் ரூ.6 கோடி வரை ஆட்டு வியாபாரம் நடந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

எட்டயபுரத்தில் ஆட்டுச்சந்தை இயங்கி வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த ஆட்டுச்சந்தைக்கு ஆடு வளர்ப்போரும், வியாபாரிகளும் ஆடுகளை விற்க, வாங்க கூடுவார்கள். கிராமப்புறங்களில் வளரும் ஆடுகள் இங்கு கொண்டு வரப்படுவதால், நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ. 1 கோடி வரை விற்பனை நடைபெறும்.
ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை அதிகமாக நடக்கும். அப்போது ஏராளமானோர் ஆடுகளை விற்பனை செய்ய கொண்டு வருவதுண்டு. இதனால் சுமார் ரூ. 2 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறும். இந்நிலையில் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை, அதற்கு மறுநாள் கரிநாளுக்காக ஆடுகள் விற்பனை அதிகமாக நடைபெறும். இதற்காக நேற்று முன்தினம் எட்டயபுரம் சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
அதிகாலை 5 மணி முதலேயே வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் திரண்டிருந்தனர். பால்குடி மாறா குட்டி ஆடு ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. வளர்ந்த ஆடுகள் கிலோ ரூ. 500 என ரூ.3 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் ரூ. 6 கோடி வரை ஆட்டு வியாபாரம் நடந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவில்பட்டியை சேர்ந்த வியாபாரி கருப்பசாமி கூறுகையில், வழக்கமாக ஆடுகளின் எடையை கணக்கிட்டு தான் கிலோவுக்கு இவ்வளவு என வாங்குவோம். இந்தாண்டு கிலோ ரூ.500 வரை வாங்குகிறோம். வழக்கத்தை விட அதிகளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன, என்றார்.
ஆட்டு சந்தையையொட்டி வெட்டு அரிவாள், கிடா அறுக்கும் சூரி கத்தி, தொரட்டி கத்தி, பண்ண அரிவாள் விற்பனையும் நடந்தது. வெட்டு அரிவாள் ரூ.450, பண்ண அரிவாள், தொரட்டி ஆகியவை தலா ரூ.150, தகட்டு கத்தி ரூ.30, சூரி கத்தி ரூ.350 என விற்பனை செய்யப்படுவதாக தென்காசியை சேர்ந்த வியாபாரி கோபால் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வி.மாயி கூறும்போது, சிலம்பாட்ட கம்பு ரூ.120 முதல் 140, வேலிக்கருவை வெட்டும் கம்பு ரூ.70 முதல் 150, ஆட்டுக்கு குழை அறுக்கும் கம்பு ரூ. 250 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்கிறேன். பொங்கல் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நேற்று முன்தினமே இங்கு வந்துவிட்டோம். விற்பனையும் நன்றாக இருந்தது, என்றார்.

Label