OUR CLIENTS
தி.மு.க. ஆட்சிக்கு வர மக்கள் துணை நிற்க வேண்டும்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தி.மு.க. ஆட்சிக்கு வர மக்கள் துணை நிற்க வேண்டும்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் Posted on 14-Jan-2019 தி.மு.க. ஆட்சிக்கு வர மக்கள்  துணை நிற்க வேண்டும்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

திருப்போரூர், ஜன.14-

தி.மு.க. ஆட்சிக்கு வர மக்கள் துணை நிற்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருப்போரூரை அடுத்த இள்ளலூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில், ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்க போராடுவதற்காக தி.மு.க. தமிழ்நாடெங்கும் இந்த ஊராட்சிசபை கூட்டத்தின் மூலம் மக்களை நேரிடையாக சந்தித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி ஆட்சிக்கு மத்தியில் நடைபெறும் மோடி ஆட்சி முட்டுக்கொடுத்து காப்பாற்றி வருகிறது. இரண்டையும் அகற்றுவதுதான் நீங்கள் வைக்கப்போகும் முற்றுப் புள்ளி. அதற்கு மாற்றாக தி.மு.க. ஆட்சிக்குவர நீங்கள் செலுத்தும் வாக்குதான் நாட்டில் நல்லது நடப்பதற்கான தொடக்கப்புள்ளி.
மக்களை நேரிடையாக சந்திக்க தி.மு.க.வைத்தவிர எந்தக்கட்சியாலும் முடியாது. தி.மு.க. ஆட்சியில் இங்கு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்பு உருவாகி பயனடைந்தனர். ஆனால் இன்று வேலைவாய்ப்பு இல்லாமை தலைவிரித்தாடுகிறது. தொழிற்சாலைகள் தொடங்க கமி‌ஷன் கேட்பதால் பல நிறுவன முதலாளிகள் இங்கு வர பயப்படுகின்றனர். அவர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.
ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது அமைச்சர்களோ மற்றும் நிர்வாகிகளோ பார்க்கவில்லை அவருடைய உடல்நிலை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் கலைஞர் மருத்துவ மனையில் இருந்தபோது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வந்து அவரை பார்த்தனர். அதுவும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அந்த கட்சி அமைச்சர் ஒருவரே சொல்லியிருக்கிறார்.
மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் வரும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ பொதுமக்களுக்கும், இங்கு வந்துள்ள பெண்களுக்கும் நம்பிக்கை உள்ளது. இன்னும் 4 மாதத்தில் வரப்போகிற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது என மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சிதேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு தி.மு.க. தான் காரணம் என அ.தி.மு.க. சார்பில் பரப்பப்படுகிறது. உரிய இடஒதுக்கீடு அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை பார்த்துதான் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றினார்கள்.
தி.மு.க. ஆட்சியில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ, தலைநிமிர்ந்து நிற்க எண்ணற்ற மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி கடன் வழங்கப்பட்டது நானே முன்னின்று வழங்கியுள்ளேன். பா.ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மூலம் நுழைய முயற்சி செய்கிறது. மத்தியில் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இதுபற்றி சட்டமன்றத்திலும் தெரிவித்தோம். ஆனால் அ.தி.மு.க. கபடநாடகம் ஆடுகிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்வாடும் 7 பேரை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு என்ன ஆனது. ஆனால் தர்மபுரி பஸ் எரிப்பில் தண்டனைக் குள்ளானவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். மத்திய மாநிலத்தில் உள்ள இந்த 2 கட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து தி.மு.க. ஆட்சி மலர தொடக்கபுள்ளி வைக்க வேண்டும்.
ஊராட்சிசபை கூட்டத்தில் பேசிய அனைவரும் தங்கள் பகுதிக்கு பஸ்வசதி, மருத்துவமனை, புதிய பள்ளிக் கட்டிடம், சாலை வசதி, குடிநீர் மற்றும் ஆட்சிக்கு வந்தால் மது ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டனர்.
முன்னதாக அங்கு நிறுவப்பட்ட புதிய கொடிக் கம்பத்தில் தி.மு.க. கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்தார். இதில் காஞ்சி வடக்கு மாவட்டசெயலாளர் தா.மோ.அன்பரசன், ஒன்றியசெயலாளர்கள் இதயவர்மன், சேகர், படப்பை மனோகரன், நகரசெயலாளர் தேவராஜ், மற்றும் தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Label