OUR CLIENTS
ஜிம்-2வில் அரங்கம்-பட்டியல் தயார் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஆயத்தம்!
ஜிம்-2வில் அரங்கம்-பட்டியல் தயார் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஆயத்தம்! Posted on 18-Jan-2019 ஜிம்-2வில் அரங்கம்-பட்டியல் தயார் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஆயத்தம்!

சென்னை, ஜன.18

ஜிம் - 2 எனும் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அரங்கம் அமைக்க உள்ள நிறுவனங்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழக அரசு சார்பில் வரும் 23, 24ல் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் அரங்குகள் அமைக்க உள்ள தொழில் நிறுவனங்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளது. 
இதுகுறித்து தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநாட்டில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்த அரங்குகள் அமைக்கப்படும். இதற்காக சென்னை வர்த்தக மையத்தில் 250 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில்140 அரங்குகள் பெரு நிறுவனங்களுக்கும் 110 அரங்குகள், சிறு, குறு நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அரங்குகள் அமைக்க உள்ள நிறுவனங்களின் பட்டியல், இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், சென்னை பெட்ரோலியம் நிறுவனம், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்கள் அரங்கு அமைக்க உள்ளன. இவை தவிர இந்த ஆண்டு விமானம் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் எல் அண்ட் டி நிறுவனம், லட்சுமி மெக்கானிக்கல், அண்ணா பல்கலையின் வானுார்தியல் துறை உள்ளிட்டவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக முதல் மாநாட்டில் ஒதுக்கப்பட்ட அரங்குகளின் அளவை விட அதிக இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்காவை சேர்ந்த போயிங் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு அரங்கு அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. டி.வி.எஸ்., போன்ற இந்திய தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சர்வதேசமுதலீட்டாளர் மாநாடு நடக்கும் இடத்திற்கு தடையில்லாமல் மின் விநியோகம் செய்ய மின் வாரியம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, செயின்ட் தாமஸ் மவுன்ட் மற்றும் ராமாபுரத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து வர்த்தக மையத்திற்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. அந்த மையத்திற்கு மட்டும் மின்சாரம் வழங்க மவுன்ட் துணை மின் நிலையத்தில் தனி வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் அந்த மின் நிலையத்தில் 25 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த பழைய மின் உபகரணங்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டு உள்ளன. போரூர், கிண்டி, கே.கே.நகரில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மவுன்ட் துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வருகிறது. இந்த மூன்று துணை மின் நிலையங்களில் ஒன்றில் மின் சப்ளை பாதித்தாலும் மற்ற இரண்டின் வழியாக தொடர்ந்து மவுன்ட் துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வரும். 
அங்கிருந்து வர்த்தக மையத்திற்கு மின்சாரம் செல்லும் இரண்டு வழித்தடங்கள் மற்றும் ராமாபுரத்தில் செல்லும் ஒரு வழித்தடத்தில் மின்சாரம் அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ஒன்றில் பிரச்னை ஏற்பட்டாலும் மற்ற வழித்தடங்களில் தடையில்லாமல் மின் விநியோகம் செய்யப்படும். மாநாடு நடக்கும் இடத்தில் ஊழியர்கள், பொறியாளர்கள் அடங்கிய 30 பேர் மின் வினநியோக பணிகளை கவனிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.
ஜிம் - 2 எனும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெறும் நிறுவனங்களுக்கு உதவ, துறை ரீதியாக அதிகாரிகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு அரசு தொடர்பான சந்தேகங்களை தீர்க்கவும் சம்பந்தப்பட்ட துறையை அணுகுவது எப்படி என வழிகாட்டவும் துறை ரீதியாக தகுதியான அதிகாரிகளை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் விண்ணப் பிக் கும் முறை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறுவது எப்படி? என்பது போன்ற தகவல்களை வழங்க அனைத்து துறைகளில் இருந்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான சுற்றறிக்கை அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label