OUR CLIENTS
வாகை சூட உதவுமா வாகையடி முனை கூட்டம்?
வாகை சூட உதவுமா வாகையடி முனை கூட்டம்? Posted on 22-Jan-2019 வாகை சூட உதவுமா வாகையடி முனை கூட்டம்?

வாகையடிமுனையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், நெல்லை பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை, சோர்ந்து கிடந்த தொண்டர்களிடையே உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அதிகரித்திருக்கிறது.
அதிமுக பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு அந்தக் கட்சியில் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உருவாகின. அதிமுக உடைந்து டிடிவி. தினகரன் அணி உருவானபோது, திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலராக இருந்த பாப்புலர் முத்தையா, அந்த அணிக்குத் தாவியதால், நீண்ட நாள்களாக மாவட்ட செயலர் இல்லாமல் செயல்பாடின்றி முடங்கிக் கிடந்தது அதிமுக. அதே நேரத்தில் அமமுகவின் செயல்பாடு தீவிரமாக இருந்தது. பொதுக்கூட்டம், புதிதாக தொண்டர்கள் இணைப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் அமமுகவினர் தீவிரம் காட்டினர். வ.உ.சி. பிறந்த நாள் விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் அமமுகவின் துணைப் பொதுச்செயலர் டிடிவி. தினகரனும் கலந்துகொண்டார். நெல்லை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும் சந்தித்தார். இதனால் அமமுகவினர் உற்சாகமடைந்தனர்.
ஒருபுறம் அமமுக தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், அதிமுக மாநகர் மாவட்ட செயலர் பதவிக்கு மூத்த நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவியதால், புதிய மாவட்ட செயலரை நியமிப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இதனால் தொண்டர்களும் சோர்வடைந்தனர். ஒரு கட்டத்தில் மாவட்ட செயலர் இல்லாததால், அதிமுகவினர் உற்சாகம் இழந்திருப்பதை உணர்ந்த அதிமுக தலைமை, தச்சை என்.கணேசராஜாவை மாவட்ட செயலராக நியமித்தது. அனைவரையும் அரவணைத்துச் செல்பவரான கணேசராஜாவின் வருகைக்குப் பிறகு பொதுக்கூட்டம், கட்சி நிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பித்தன.
இந்த நிலையில் திருநெல்வேலி வாகையடி முனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.20) நடைபெற்ற கூட்டத்தில் தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை, அதன் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
வாகையடி முனை என்ற பெயருக்குள்ளேயே வெற்றி அடங்கியிருப்பதால், அங்கு பொதுக்கூட்டத்தில் பேசுவதையும், பிரசாரம் செய்வதையும் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, தொண்டர்களும் விரும்புகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரும் இந்த வாகையடி முனையில் பிரசாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கடைசியாக 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாகையடி முனையில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.
வாகையடி முனையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பேச, வியந்து போனார்கள் தொண்டர்கள். திருநெல்வேலியில் அவர் முதல்முறையாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதால், அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சாதனைகளை சுட்டிக் காட்டியதோடு, தனது அரசின் சாதனைகளையும் கடகடவென அடுக்கினார். பின்னர் திமுக மீதும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்த எடப்பாடி கே.பழனிசாமி, கூலிப்படையினருக்கு திமுக வக்காலத்து வாங்குகிறது; துணை போகிறது என குற்றம்சாட்டினார். அதோடு நிற்காமல், கூலிப்படையினரை ஜாமீனில் எடுத்தவர்கள், திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை மாநகரின் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் உள்ள புகைப்படங்களையும் ஆதாரமாக வெளியிட்டபோது, அது அதிமுக தொண்டர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கொடநாடு விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை சாதாரணமாக விடமாட்டோம். இதில் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என எடப்பாடி சூளுரைத்தபோது, அங்கு கூடியிருந்த தொண்டர்களின் கரகோஷத்தில் அதிர்ந்தது இரு ரதவீதிகளும்.
திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீதோ, டிடிவி. தினகரன் மீதோ எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. கொடநாடு விவகாரம் பற்றி பேசியபோதுகூட, அது ஒரு தனியார் குடும்பத்துக்கு சொந்தமானது; அது உங்களுக்கே தெரியும் என்றுதான் பேசினாரே தவிர, யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. ஒருவேளை தினகரனையோ, அமமுகவையோ போட்டியாக அவர் நினைக்கவில்லையா? அல்லது தனக்கு ஒரே எதிரி திமுக மட்டும்தான் என நினைக்கிறாரா? இல்லை, அமமுகவினர் அதிமுகவோடு நிச்சயம் இணையக்கூடும் என்ற நம்பிக்கையில் பேசவில்லையா என்பதே அனைவருடைய கேள்வியாகவும் இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சோர்ந்து கிடந்த அதிமுக தொண்டர்கள் எடப்பாடியின் வருகையாலும், எழுச்சி உரையாலும் புதிய உத்வேகமும், நம்பிக்கையும் பெற்றிருக்கிறார்கள். விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஒரே இடத்தில் எடப்பாடி சந்தித்திருப்பது கட்சியை வலுப்படுத்தும், நெல்லை மாவட்டத்தில் அதிமுகவின் வாக்கு வங்கியை பலப்படுத்தும் என அக்கட்சியினர் நம்புகிறார்கள். எடப்பாடி பங்கேற்ற வாகையடி முனை கூட்டம், மக்களவைத் தேர்தலில் நெல்லை, தென்காசி தொகுதிகளின் வெற்றிக்கு அச்சாரமாக அமையுமா என்பதற்கு மே மாதத்தில் விடை தெரிந்துவிடும்.

Label