OUR CLIENTS
பள்ளிகொண்டாவில் வாகன தணிக்கை என்று பணம் பறிக்கும் காவல் உதவி ஆய்வாளர்!
பள்ளிகொண்டாவில் வாகன தணிக்கை என்று பணம் பறிக்கும் காவல் உதவி ஆய்வாளர்! Posted on 22-Jan-2019 பள்ளிகொண்டாவில் வாகன தணிக்கை என்று பணம் பறிக்கும் காவல் உதவி ஆய்வாளர்!

வேலூர், ஜன.22-

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் வாகன தணிக்கை என்று சொல்லிக் கொண்டு மரத்தின் அருகில் நின்று கொண்டு அந்த வழியாகச் செல்வோரிடம் பணம் பறிக்கும் பணியில் காவல் உதவி ஆய்வாளர் அடிக்கடி ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பள்ளிகொண்டாவில் புகழ்பெற்ற பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில் உள்ளது. இந்த பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் ரவிக்குமார். இவர் பள்ளிகொண்டாவுக்கு பணியாற்ற வந்ததில் இருந்தே பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பல்வேறு வகையில் இடையூறு செய்து வருகிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இவர் தன்னுடன் பணியாற்றும் தலைமைக் காவலர்கள் யாரையாவது துணைக்கு அழைத்து கொண்டு வாகன தணிக்கை செய்ய ஆரம்பித்து விடுகிறார். இவர் செய்யும் வசூல் வேட்டைக்கு மறுபெயர்தான் வாகன தணிக்கையாகும். ஒரு வாகனத்துக்கு குறைந்தபட்சம் தலா ரூ.200 கறந்து கொண்டுதான் அனுப்புகிறார் இந்த கடமை தவறாத அதிகாரி ரவிக்குமார். தினமும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வசூலானதும்தான் இடத்தை காலி செய்கிறார் அந்த அதிகாரி. எந்த வாகனத்துக்கும் உரிய ரசீது வழங்குவது இல்லை. அனைத்தும் பாக்கெட்டுக்கு சென்றுவிடுகிறதாம். இதனால் இந்தபக்கம் (பள்ளிகொண்டா) வரவே வாகன ஓட்டிகள் அஞ்சுகின்ற பரிதாப நிலை நிலவுகிறது. 
சில நேரங்களில் வாகனங்களில் செல்வோரை கீழே பிடித்து தள்ளி மடக்கிப் பிடித்து அவர்களை இழுத்து வந்து மிரட்டி பணம் பறிப்பதும் நடந்தவண்ணம் உள்ளது. அப்படி அவர்கள் விழுந்து விலைமதிப்பில்லாத உயிரை இழந்தால் ரவிக்குமார் திருப்பித் தருவாரா?. திருச்சியில் நடந்த சம்பவத்துக்கு பிறகும் இதுபோன்ற காவல் அதிகாரிகள் இருக்கத்தான் செய்கின்றனர். இது காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பள்ளிகொண்டாவில் காவல் துறையினர் எப்படி பணியாற்றுகின்றனர் என்பது ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது எளிதில் புரிகிறதல்லவா?. இப்படி பலரையும் பாடாய் படுத்துகின்றனர்  சில காவல் துறையினர் என்று சொன்னால் அது மிகையாகாது. 
பணத்தை மட்டுமே குறியாக கொண்டு செயல்படும் இதுபோன்ற சில காவல் துறை அதிகாரிகளால் காவல் துறையின் நற்பெயருக்கு பொதுமக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுகிறது. பள்ளிகொண்டா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காவல் துறையினரை கண்டாலே ஒருவிதமான அருவெறுப்பாக பார்க்கும் பரிதாப நிலை நிலவி வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். காவல் துறை உங்கள் நண்பன் என்று காவல் நிலையத்தில் எழுதி வைத்து விட்டால் மட்டும் போதாதது. நடைமுறையில் அதை சாத்தியப்படுத்த பணியாற்ற வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. இதுபோன்ற களைகள் காவல் துறையில் நீடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். 
பொதுமக்களிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் பணம் பறிக்கும் செயலில் பள்ளிகொண்டா காவல் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மட்டும் செயல்படுவது அநாகரீகமாக உள்ளது என்று பலர் கூறி புலம்புகின்றனர். யாராக இருந்தாலும் அவர்களது வாகனத்தின் சாவியை பறித்து கொண்டு அவர்களை மணிக்கணக்கில் நிற்க வைத்து, காக்க வைத்து பணத்தை பறித்து கொண்ட பிறகுதான் அனுப்புவாராம் கடமைவீரன் ரவிக்குமார். இப்படிப்பட்ட காவல் துறை அதிகாரிகள் பள்ளிகொண்டாவுக்கு தேவைதானா?. ரவிக்குமார் போன்ற களைகளை அப்புறப்படுத்தினால் அப்பாவி பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்கின்றனர் சமூக ஆவர்வலர்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label