OUR CLIENTS
பிரதமர் மோடி வருகை: சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு
பிரதமர் மோடி வருகை: சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு Posted on 25-Jan-2019 பிரதமர் மோடி வருகை: சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு

மதுரை, ஜன. 25-

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருவதையொட்டி சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை தோப்பூரில் மத்திய அரசின் சார்பில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 27) நடைபெற உள்ளது. மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.  பிரதமர் வருவதையடுத்து புதுதில்லியில் இருந்து பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் எஸ்பிஜி (சிறப்பு பாதுகாப்பு படை) ஐ.ஜி. எம்.பி.குப்தா, ஏஐஜி-க்கள் ஏவிஎஸ்.காலியர், பவன்குமார் லாட்வால் தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர் மதுரைக்கு வந்துள்ளனர்.
மேலும் என்எஸ்ஜி. (தேசிய பாதுகாப்புப்படை கமாண்டோக்கள்) அதிகாரிகளும் மதுரைக்கு வந்துள்ளனர். மதுரையில் முகாமிட்டுள்ள எஸ்பிஜி மற்றும் என்எஸ்ஜி அதிகாரிகள் மதுரை விமான நிலையம் மற்றும் விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை வியாழக்கிழமை பார்வையிட்டனர்.  பிரதமர் நரேந்திர மோடி வருகையை அடுத்து மதுரை மாநகர மற்றும் ஊரகக்காவல்துறை சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் மேடை வரை உள்ள பகுதிகளில் போலீஸார் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.  மேலும் விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கும் பகுதிகளில் உள்ள கட்டடங்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றிலும் போலீஸார் வியாழக்கிழமை முதல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மதுரை நகரில் தங்கும் விடுதிகளிலும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருக்கும்பட்சத்தில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Label