OUR CLIENTS
இரண்டு மாதங்களாக தண்ணீர் வராதததால் ஆத்திரம் பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சியில் முற்றுகை!
இரண்டு மாதங்களாக தண்ணீர் வராதததால் ஆத்திரம் பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சியில் முற்றுகை! Posted on 25-Jan-2019 இரண்டு மாதங்களாக தண்ணீர் வராதததால் ஆத்திரம் பெண்கள் காலி குடங்களுடன் நகராட்சியில் முற்றுகை!

வேலூர், ஜன.25-

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 17வது   வார்டுக்கு உட்பட்ட ரகமதாபாத் பகுதியில் அனைத்து இடங்களிலும் நகராட்சி குழாய்களில் கடந்த இரண்டு மாதமாக தண்ணீர் வராமலும், டிராக்டர் வாயிலாக  நகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்யாததால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100க்கும் அதிகமான பெண்கள் காலி குடங்களுடன்  நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல மணி நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் இல்லாததால் அங்கு பாதுகாப்பிற்கு இருந்த பேர்ணாம்பட்டு நகர காவல் துணை ஆய்வாளர் சிலம்பரசன் தர்ணா செய்தவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதி சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 
கோடைகாலம் தொடங்கும் முன்னரே தண்ணீர் பிரச்சனை தலை தூக்கியுள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் பேர்ணாம்பட்டு பகுதியில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாலும் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் அல்லல்படும் நிலை உள்ளதால் நகராட்சி வழங்கும் குடிநீர்குழாயில் கடந்த இரண்டு மாதமாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர், நகராட்சி அதிகாரிகளும் மெத்தனம் காட்டுவதால் குடிநீர் பிரச்சனைக்கு விடிவு கிடைகுமா? என ரகமதாபாத் மக்கள் புலம்பித்தீர்க்கிகின்றனர்.
இதேபோன்று வேலூர் மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள டிட்டர்லைன் பகுதியில் புதியதாக குடிநீர்க் குழாய்கள் பதித்துள்ளனர் பின்னர் வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்பட்டும் தண்ணீர் குழாய்களில் வருவதில்லை, அந்த குழாய்களில் வெறும் காற்றுதான் வருகிறது என்றால்  பார்த்து கொள்ளுங்கள். இதற்கு பின்னணி காரணம் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய்களில் ஆங்காங்கே உடைப்புகள் உள்ளதாக பொதுமக்கள் தெள்ளத்தெளிவாக புகார் கூறுகின்றனர். ஆனால் மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் கூறுவதை காது கொடுத்து கேட்பது இல்லை. அவர்கள் ஏதோ கடமைக்காக செவிடன் காதில் சங்கு ஊதிய சங்கு போன்று பணியாற்றி வருகின்றனர். 
நிலத்தடியில் தண்ணீர் கசிந்தாலோ, குடிநீர்குழாய் உடைப்பு ஏற்பட்டாலோ அதை கண்டறியும் சிறப்பு வாகனம் பழைய மாநகராட்சி அலுவலகத்தின் உள்ளே ஓட்டை உடைசல்களுடன் ஓரங்கட்டப்பட்டுள்ளது தனிக்கதை. (பல லட்சங்கள் கொடுத்து வாங்கப்பட்ட அந்த வாகனம் பயன்படுத்தாதது ஏன் என்ற கேள்விக்கு மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன்தான் பதிலளிக்க வேண்டும்). கடந்த நான்கு மாதங்களாக இதுதான் நிலைமை. இந்த நிலைமை தொடர்ந்து இருந்து வருவது வருத்தத்துக்கு உரியது ஆகும். இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் பலமுறை இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரிடம் நேரிலும், தொலைபேசியிலும், எழுத்து மூலமாகவும் புகார் மனு அளித்தும் ஒருவித பலனும் இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி பொதுவேலைகளில் ஈடுபடுவோர் இப்படி பொதுமக்களை அலைகழிப்பது நன்றாக இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் முறைமன்றத்தில் புகார் மனு அளிக்க பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். விரைவில் வேலூர் டிட்டர்லைன் பகுதிவாசிகளும் காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக தெரிவித்துள்ளனர். அதற்குள்ளாவது மாநகராட்சி அலுவலர்கள் விழித்து கொண்டு டிட்டர்லைன் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label