OUR CLIENTS
ஊசுடு ஏரிக்கு பறவைகள் வருகை குறைந்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!
ஊசுடு ஏரிக்கு பறவைகள் வருகை குறைந்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை! Posted on 25-Jan-2019 ஊசுடு ஏரிக்கு பறவைகள் வருகை குறைந்தது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை!

புதுச்சேரி, ஜன.25-

ஊசுடு ஏரிக்கு பறவைகள் வருகை திடீரென குறைந்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஊசுடு ஏரி மிகப் பெரிய நீராதாரமாக திகழ்கிறது. 7.2 கிலோ மீட்டர் நீளமான கரையை கொண்ட இந்த ஏரியில், 54 கோடி கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.பறவைகள் தங்கி இனப் பெருக்கம் செய்வதற்கேற்ற இயற்கையான சூழல் நிலவும் ஊசுடு ஏரிக்கு, வெளிநாடுகளில் இருந்தும், நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பறவைகள் படையெடுக்கின்றன. புதுச்சேரி மற்றும் தமிழக அரசுகளால் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊசுடு ஏரியில், ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பது சிறப்பு அம்சமாகும். இங்கு, நவம்பர் மாதத்தில் ஆரம்பித்து, பிப்ரவரி வரை களை கட்டி விடும். ஆயிரக்கணக்கான பறவைகள் குவிந்து ரம்மியமான சூழல் நிலவும்.இந்நிலையில், ஊசுடு ஏரி அமைந்துள்ள பகுதியிலும், பாகூர், கோர்க்காடு ஏரிகளிலும், புதுச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் துளிர் இல்லங்கள் சார்பில், பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் உற்றுநோக்கல் நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதம் 13ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சியில் பறவைகளின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பறவைகளின் பங்களிப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுவதுடன் எவ்வளவு பறவைகள் வருகின்றன என, கணக்கெடுப்பும் நடத்தப்படுவது வழக்கம். வழக்கம்போல இந்த ஆண்டும், பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 
இந்த கணக்கெடுப்பில் ஊசுடு ஏரிக்கு வருகின்ற பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமாகி உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் லக்ஷ்மி நாராயணா மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் கழிவுகள் இந்த ஊசுடு ஏரியில் இரவு நேரங்களில் வீசப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆதாரமாக பலமுறை இந்த ஏரி நீர் மாசு அடைவதாக பலமுறை புகார் கொடுத்தும் புதுச்சேரி அரசு செவிமெடுக்கவில்லை, அதாவது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வந்தது. இப்போது இயற்கையே அழியும் அளவுக்கு மாறியுள்ளது. பறவைகள் மாசு காரணமாக வருகை தரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஊசுடு ஏரியை கண்காணிக்க புதுச்சேரி அரசு முழு முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
இதுகுறித்து, புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் செயலாளர் அருண் நாகலிங்கம் கூறியதாவது: கடந்தாண்டு நடந்த பறவைகள் கணக்கெடுப்பின்போது, 353 இனங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் கணக்கிடப்பட்டன. ஆனால், தற்போது நடந்த கணக்கெடுப்பில் 251 இனங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் மட்டுமே கண்டறியப்பட்டன. அதாவது, 102 இனங்களை சேர்ந்த பறவைகளை காண முடியவில்லை. ஊசுடு ஏரிக்கு வருகின்ற பறவைகளின் எண்ணிக்கை இந்தாண்டு குறைந்துள்ளது கவலையளிக்கிறது. பறவைகள் எண்ணிக்கை குறைவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருவதன் அறிகுறியாகும்.இவ்வாறு, அருண் நாகலிங்கம் கூறினார்.ஊசுடு ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் குறைந்தது, இதன் காரணமாக பறவைகளுக்கு உணவு அளிக்கும் வயல்களின் பரப்பளவு சுருங்கி வருவது, வேட்டையாடுவது அதிகரிப்பு, சுற்றுச்சூழல் மாசடைந்து வருவது போன்ற காரணங்களையும் பறவையியல் நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர்.

Label