OUR CLIENTS
வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் தொடர் மெத்தனம்!
வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் தொடர் மெத்தனம்! Posted on 28-Jan-2019 வேலூர் மாநகராட்சி  அலுவலர்கள் தொடர் மெத்தனம்!

வேலூர், ஜன.28-

இணையதளம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கியுள்ள வேலூர் மாநகராட்சி அலுவலர்கள். இதனால் பொதுமக்கள் மாநகராட்சியின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள முடியாமல் திண்டாடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 1866ல் உருவாக்கப்பட்ட நகர மேம்பாட்டு சட்டம் 1865ன் படி ஆகஸ்டு 1, 2008  முதல் வேலூர் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் 9வது மாநகராட்சியாக  வேலூர் மாநகராட்சி உதயமானது.   வேலூர் மாநகராட்சியில் வேலூர், ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை ஆகிய நான்கு நகராட்சிகளும், சத்துவாச்சாரி, தாராபடவேடு, மேல்விஷாரம் ஆகிய 3ம் நிலை நகராட்சிகளும், 8 பேரூராட்சிகள், 61 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் மாநகராட்சிக்குஎன  இணையதளம் செயல்பட்டது. www.vellorecorp.tn.gov.in என்ற  இணையதளம் இயங்கிவந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக இணையதளம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக வேலூர் மாநகராட்சியின் இப்போதைய வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக உள்ள கார்த்திகேயன் செயல்பட்டார். பின்னர் அதிமுகவை சேர்ந்த கார்த்தியாயினி வேலூர் மாநகராட்சியின் மேயராக செயல்பட்டார். இந்நிலையில் மாநகராட்சியின் செயல்பாடுகள் என்னவென்று பொதுமக்கள் யாருக்கும் தெரியாத வண்ணம் காலத்தை கடத்தி விட்டு கார்த்தியாயினியும் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைந்து கொண்டார். 
2015 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்டது.  அதற்காக முதற்கட்டமாக நாடு முழுவதும் 98 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகத் தரம் உயர்த்தப்பட உள்ளன. இதனடிப்படையில் தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகத் தரம் உயர்த்தப்படும் என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்தார். 
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற  பல்வேறு  திட்டங்கள் கொண்டுவரப்பட்டு அதை அமல்படுத்தவும், முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில் வேலூர் மாநகராட்சியின் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் இருக்கும் இணையதளத்தை மீண்டும் செயல்படவைக்க ஏன் வேலூர் மாநகராட்சி முன்வரவில்லை என பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர். 
தமிழகத்தில் மொத்தம் வேலூர் உட்பட 12  மாநகராட்சிகள் உள்ளன. பிற மாநகராட்சிகள் முறையாக இணையதளம் கொண்டு செயல்படுகின்றன. இணையதளத்தில் டெண்டர் விவரங்கள் அதன் மதிப்பீடு உட்பட அனைத்துவிவரங்களும் உள்ளன. அதேபோன்று அதிகாரிகளின் பெயர்கள், தொடர்பு எண், பணிவிவரம் உள்ளிட்ட விவரங்களும் உள்ளன.  இதனால் பொதுமக்கள் அலுவலர்களை எளிதாக தொடர்புகொள்ள  ஏதுவாக உள்ளன. அதுமட்டுமில்லாமல் மாநகராட்சியின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடன் இருக்கும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் விவரங்கள் குறிப்பிட்டுள்ளன. சொத்துவரி, குடிநீர்வரி போன்றவற்றையும் அதன் கணக்கீடு தொகையும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் எளிதாக பொதுமக்கள் புரிந்துகொள்ள முடிகின்றது. பிறப்பு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் என அனைத்து மாநகராட்சி வேலைகளையும் ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு வெளிப்படைதன்மையுடன் எளிதாக  புரியும் வகையிலும் பயன்படும் வகையிலும் இணையதளம் முக்கிய பங்கு வகிக்கின்றது.  இவ்வாறு இருக்கையில் வேலூர் மாநகராட்சி இணையதளம் குறித்து எவ்வத நடவடிக்கை மேற்கொள்ளதாது கேலிக்கூத்தாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 
 மாநகராட்சியின் செயல்பாடுகள் என்ன பணிகள் நடக்கின்றன. வேலூர் மாநகராட்சியின் ஆணையர், மண்டல அலுவலர்கள் முதல் அனைத்து அலுவலர்கள் வரையில் அவர்கள் வகிக்கும் பொறுப்புகள், டெண்டர் விடப்படும் பணிகள், யார் யார் டெண்டர் எடுத்துள்ளனர், என்னென்ன பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 
பணிகளின் மொத்த மதிப்பு, என்னென்ன பணிகள் எந்த நிலையில் இருக்கிறது போன்ற விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் இங்கோ நிலைமையோ தலைகீழாக உள்ளது. தமிழகத்தில் உள்ள பிந மாநகராட்சிகளில் இணையதளம் செயல்படும்போது வேலூர் மாநகராட்சியின் இணையதளம் மட்டுமே செயல்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இருந்த எந்த மாநகராட்சி ஆணையரும் கண்டுகொள்ளவில்லை. ஆர்வமாக அந்த இணையதளம் மீண்டும் செயல்படுவதற்கு உண்டான பணிகளை மேற்கொள்ளவில்லை. இப்போதுள்ள மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனும் அதே பாணியில்தான் கடமைக்கு பணியாற்றி வருகிறார். 
அதிகாரிகள் தங்களது பாக்கெட் நிரம்பினால் போதும், எந்த இணையதளம் வேலை செய்தால் என்ன, வேலை செய்யாமல் போனால் என்ன என்று அவரவர் வேலைகளை பார்த்து வருகின்றனர். மாநகராட்சியில் பணியாற்றும் ஆணையர் முதல் மண்டல அலுவலர்கள், பணியாளர்கள் வரை யாரும் இதில் அக்கரை செலுத்தவில்லை. இணையதளம் செயல்பட்டால் போதும், மாநகராட்சியின் தில்லுமுல்லுகள் வெளியில் வெட்டவெளிச்சமாக தெரிய ஆரம்பித்து விடும். இதனால் அந்த இணையதளத்தை செயல்பட ஆவண செய்யாமல் மௌனம் காத்து வருகின்றனர் மாநகராட்சி அலுவலர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
வேலூர் மாநகராட்சியின் செயல்பாடுகள் மிகவும் மோசமானதாக மாறி வருகிறது. அன்பளிப்பு இல்லாமல் வேலூர் மாநகராட்சியில் அணுவும் அசையாது. நிலைமை அப்படி இருக்கிறது. மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் எடுக்கும் பணிக்கு ஏற்றவாறு தனியாக சதவீதம் பிரித்து மாநகராட்சி அலுவலர்களுக்கு முதலிலேயே கொடுத்து விட வேண்டுமாம். இப்படி எழுதப்படாத சட்டம் இன்று வரை அமலில் தொடர்ந்து இருந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தாலாவது மாமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் போன்றோர் பணியாற்றுவர். 
ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் போனதால் மாநகராட்சி அலுவலர்கள் காட்டில் கன மழை பெய்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். எங்கு இதெல்லாம் வெளியில் தெரிந்து விடப் போகிறது என்று சுதாரித்து கொண்ட மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் இணையதளத்தை செயல்பட விடாமல் இன்னமும் கிடப்பிலேயே போட்டு வைத்துள்ளனர். இதை கண்காணித்து கேட்க வேண்டிய உயரதிகாரிகளும் ஒன்றா இரண்டா கடந்த 5 ஆண்டுகளுக்கும்  மேலாக கண்டும் காணாமல் அவர்களும் மெத்தனமாகவே செயல்படுகின்றனர். என்றுதான் இதற்கு ஒரு விடிவு பிறக்குமோ என்று வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏங்குகின்றனர். அந்த நிலைமைக்கு பொதுமக்களை தள்ளிவிட்டுள்ளனர் மாநகராட்சி அலுவலர்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். 
இந்த லட்சணத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் இணையதளம் இல்லாத மாநகராட்சி என்ற பெருமையை வேலூர் மாநகராட்சி பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது என்றே சொல்லலாம். விரைவில் இந்த இணையதளம் செயல்படுவதற்கு உண்டான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். 
1,மாநகராட்சி அதிகாரிகள் யார்- யார்? அவர்கள் பொறுப்பு என்ன?
2.என்ன பிரச்சனைக்கு... எந்த அதிகாரிகளை... எவ்வாறு தொடர்பு கொள்வது?
3.மாநகராட்சி திட்டங்கள் என்ன நிறைவேற்றியுள்ளது? அதன் தற்போதைநிலை என்ன?
4.திட்டங்களின் மதிப்பீடு தொகை எவ்வளவு?
5. பிறப்பு, இறப்புச் சான்றிதழ் எளிதாக பெற என்ன வழி?
6.சொத்து வரி, குடிநீர் வரி இணையதளத்தில் செலுத்த என்ன வழி?
7.நாங்களாக செலுத்த செல்லும் போது அலைகழிக்கப்படுவது ஏன்?
8.நாங்களாக வரி கணக்கிடுவது 
( TAX CALCULATER ) எப்படி?
என பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர்.  இது வெளிப்படை  தன்மையற்ற நிலையையே உணர்த்துகின்றன. ஊழலின் வெளிப்பாடுதன்மையாக இதனை பொதுமக்கள் பார்க்கின்றனர். எளிதாக இணையத்தில் வேலை முடிந்தால் மாநகராட்சி அலுவலர்களால் கையூட்டு பெறமுடியாது என்பதாலேயே இணையதளத்தை முடக்கி உள்ளனர் என்கின்றனர் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும்.
8 மாடிக்கு 5 மாடிக்கு மட்டும் படிகட்டுகள் போன்ற அவல நிலையில் உள்ள, மாநகராட்சியில் முறையான அனுமதியற்ற கட்டடங்கள் ஒரு அலசல் பார்வை தொடரும்....

Label