OUR CLIENTS
உழவர் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் வெளிவியாபாரிகள்!
உழவர் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் வெளிவியாபாரிகள்! Posted on 29-Jan-2019 உழவர் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் வெளிவியாபாரிகள்!

வேலூர், ஜன.29-

உழவர் சந்தைகளில் காய்கறி, பழ வியாபாரத்தில் வெளியாட்கள் ஆதிக்கம் செலுத்துவதால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாத அவல நிலை மாநிலம் நிலவுவதாக புகார்  எழுந்துள்ளது. 

நாட்டின் 60 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் உழவன் கணக்கு பார்த்தால் உழக்குக்கும் மிஞ்சாது என்ற பழமொழிக்கேற்ப அவனது உற்பத்தி  பொருளுக்கான நியாயமான விலை கிடைப்பதில் இன்னமும் தடங்கல்கள் உள்ளதை மறுக்க முடியாது. தற்போதைய உலகமய சூழலில் விளைநிலங்களை கபளீகரம் செய்து தனது மண்ணில் பாரம்பரியமாக விவசாயம் செய்து  வந்த உழவனை வேலைக்காரனாக ஆக்கும் வேலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்திலும் மெல்ல கால் பதிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி ஆள்பவர்களுக்கும், பிற அரசியல்  கட்சிகளுக்கும் அக்கறை உள்ளதா? என்பது நிச்சயம் கேள்விக்குறிதான்.
 இத்தகைய நெருக்கடியான சூழலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த 1999ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மாநிலமெங்கும் உழவர் சந்தைகள்  தொடங்கப்பட்டன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை இடைத்தரகர்கள் யாருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டது. கிராமங்களில் இருந்து நகரத்திற்கு விளைபொருட்களை  கொண்டு வர அரசு பஸ்கள் இலவச சேவையை வழங்கின. ஒவ்வொரு விவசாயிக்கும் கடைகள் ஒதுக்கப்பட்டது. மேலும், உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின்  புகைப்படம் கொண்ட அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. அவரை சார்ந்த குடும்பத்தினருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அடையாள அட்டை வைத்திருப்பவர்களை தவிர்த்து வெளிநபர்கள், மொத்த விலை  வியாபாரிகளுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
உழவர் சந்தையை நிர்வாகம் செய்து பராமரிக்கவும், விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் உற்பத்தி பொருட்களுக்கு  நியாயமான விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கான நியாயமான விலையை பெற்றனர். இதனால் தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகளுக்கு பெரும்  வரவேற்பு கிடைத்தது. ஆனால், திமுக ஆட்சியை தவிர்த்து அடுத்து வந்த ஆட்சியாளர்களால் உழவர் சந்தை திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. தொடக்க காலத்தில் இருந்த அதே உழவர் சந்தைகள் எவ்வித முன்னேற்றமும்  இல்லாமல் பெயரளவில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக தொடங்கப்பட்ட உழவர் சந்தை திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தவறியதால், தற்போது வெளியாட்களின் பிடியில் உழவர்  சந்தைகள் சிக்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காட்பாடி உழவர் சந்தையில் அதிகாரி இருப்பதே இல்லை. அவர் அன்றாடம் பணிக்கு வருகிறாரா என்ற சந்தேகம் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை கண்காணிக்கும் விற்பனை குழுவினரும் கண்டும் காணாமல் இருக்கின்றனர். உழவர் சந்தையில் புகார்கள் தெரிவிக்க புகார் புத்தகம் இல்லை. அதிகாரியின் செல்போன் எண், பெயர் விவரங்கள் கேட்டால் அங்குள்ள பாதுகாவலர் அதெல்லாம் தரமுடியாது என்று ஒருமையில் நுகர்வோரை எடுத்தெறிந்து பேசுகிறார். காட்பாடி உழவர் சந்தையில் நடக்கும் அராஜகத்துக்கு அளவே இல்லை. வியாபாரிகள் பொறுக்கியது போக மீதமுள்ள ஓட்டை உடைசல் காய்கனிகள்தான் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் இப்படி என்றால் மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் வெளியில் உள்ள ஓட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. 
உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு 19 ஆண்டுகளை கடந்தும் அவற்றின் வளர்ச்சிக்கு எவ்வித திட்டமும் தமிழக அரசால் தீட்டப்படவில்லை.  அன்றைய காலச்சூழலுக்கு ஏற்றார்போலவே இன்றும் இயங்கி வருகிறது. மாறாக உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கேட்டால் எதுவும் தருவதில்லை அங்கு பணியாற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள். அத்துடன் எடைக்கற்கள் எப்போது ஆய்வு செய்து முத்திரையிடப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. உழவர் சந்தை என்றால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தவே இந்த உழவர் சந்தை திறக்கப்பட்டது. ஆனால் அந்தளவுக்கு பல குறைபாடுகள் உழவர் சந்தையில் தலைவரித்து ஆடுகிறது. மாவட்ட ஆட்சியர் ராமன் இந்த உழவர் சந்தைக்கு ஒருமுறை நேரில் வந்து ஆய்வு செய்தால் உண்மை நிலை நன்கு தெரியும். மாவட்டத்தின் மூத்த குடிமகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்ளக்கூடாது. மக்களுக்கு ஓடி ஓடி சேவை செய்வதில் முதலிடம் வகித்தால் மட்டுமே அந்த பெயர் அவருக்கு பொருந்தும். மாவட்ட ஆட்சியரின் பாதங்கள் காட்பாடி உழவர் சந்தையில் படுகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label