OUR CLIENTS
பாதுகாப்பற்ற சூழலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம்!
பாதுகாப்பற்ற சூழலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம்! Posted on 29-Jan-2019 பாதுகாப்பற்ற சூழலில் வட்டாரப்  போக்குவரத்து அலுவலக வளாகம்!

திருவள்ளூர், ஜன.29-

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளதால், அங்கு நிறுத்தி வைக்கும் வாகனங்களின் உதிரி பாகங்கள் களவு போவதாக வாகன உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் மறுபுறத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், நாள்தோறும் புதிய வாகனங்களின் பதிவு எண் பெறுவதற்கும், வாகன ஓட்டுநர் உரிமம், பயிற்சி உரிமம் மற்றும் வாகனங்களை புதுப்பித்து சான்றுகள் பெறுவதற்கும் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 
இங்கு, இருசக்கர, இலகுரக, கனரக வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி உள்ளது. இதனால், சாலை விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்குதல், மணல் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் இந்த அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதேபோல் 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
இரவு நேரங்களில் சமூக விரோதிகள் வளாகத்துக்குள் புகுந்து, வாகனங்களில் உள்ள இயந்திரம், டயர், பேட்டரி போன்ற உதிரிபாகங்களைத் திருடிச் செல்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் வாகன உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த அலுவலகத்துக்கு நான்கு புறமும் சுற்றுச்சுவர் அமைக்கப்படாததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த வளாகத்தின் இருபுறமும் விளைநிலங்கள் உள்ளன. இதை சமூக விரோதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அலுவலக வளாகத்துக்குள் புகுந்து, வாகனங்களின் உதிரி பாகங்களைத் திருடிச் செல்வதாகவும் வாகன உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
விதிமுறை மீறல் காரணமாக இரவு நேரங்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு அதன் ஓட்டுநர்களே பாதுகாவலர்களாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்த ஓட்டுநர்கள் அலுவலக வாயிற்காவலர் தூங்கும் நேரத்தில் வாகனங்களை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விடுகின்றனர். இதேபோல், கடந்த வாரம் இரவு நேரத்தில் ஒரு ஆம்னி பேருந்தும், சரக்கு லாரியும் காணாமல் போயுள்ளன. அலுவலக வளாகத்தில் சுற்றுச்சுவர் இல்லாததும், கண்காணிப்பு கேமரா இல்லாததும்தான் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்குக் காரணம் என வாகன உரிமையாளர்கள் கூறுகின்றனர். 
இதுபோன்ற வாகனங்களைக் கண்காணிக்க வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். அத்துடன், சுற்றுச் சுவர் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Label