OUR CLIENTS
பண்ணை சுற்றுலா திட்டம் செயல்பாட்டிற்கு வருமா? விழிப்புணர்வு ஏற்படுத்த உடன் நடவடிக்கை தேவை!
பண்ணை சுற்றுலா திட்டம் செயல்பாட்டிற்கு வருமா? விழிப்புணர்வு ஏற்படுத்த உடன் நடவடிக்கை தேவை! Posted on 29-Jan-2019 பண்ணை சுற்றுலா திட்டம் செயல்பாட்டிற்கு வருமா? விழிப்புணர்வு ஏற்படுத்த உடன் நடவடிக்கை தேவை!

விருத்தாசலம், ஜன.29-

விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள பண்ணை சுற்றுலா திட்டம் குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்தி அதனை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் வி.ஆர்.ஐ., 3 வீரிய ரக முந்திரி, மா, பலா, கொய்யா, பப்பாளி, கத்தரி, மிளகாய், கேந்தி மற்றும் கீழாநெல்லி, முடக்கத்தான், தூதுவளை, வல்லாரை, பிரண்டை, துளசி, கற்றாழை, கற்பூரவள்ளி, நிலவேம்பு ஆகிய 9 வகையான மூலிகை செடிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அல்போன்சா, பங்கனபள்ளி, பெங்களூரா, செந்தூரா, காலப்பாடு, நீலம் என 6 வகையான மா கன்றுகள், லக்னோ 49, சிட்டிடார் வகை கொய்யா, பாலூர் 1 ரக பலா, ரெட் லேடி ரக பப்பாளி கன்றுகள் மென்தட்டு ஒட்டு, பக்க ஒட்டு, பதியம், குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் மானாவாரி நில மேம்பாட்டு திட்டம் மூலம் கன்றுகள் உற்பத்தி செய்து மானிய விலையிலும், நேரடியாகவும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் உள்ள 29 மாவட்டங்களில் 61 அரசு தோட்டக்கலை பண்ணைகளில் 23ம், 18 பூங்காக்களில் இரண்டிலும் பண்ணை சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக சென்னை, தஞ்சை, நீலகிரி, சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர் உட்பட 15 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணை இடம் பெற்றுள்ளது.இதன் மூலம் மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அரசு தோட்டக்கலை பண்ணைக்கு வருகை புரிந்து, தோட்டக்கலை பண்ணைகளின் செயல்பாடு, பயிர்சாகுபடி முறைகள், நாற்றுகள் உற்பத்தி மற்றும் இயற்கை சார்ந்த தோட்ட அமைப்பு ஆகியவற்றை கண்டு ரசிப்பதுடன், அவற்றை தெரிந்து கொள்ள முடியும்.
இத்திட்டத்தில் பெரியவர்களுக்கு 50 ரூபாய், சிறியவர்கள் மற்றும் மாணவர்களுக்கு 25 ரூபாய் நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில், பண்ணையின் அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் நாற்றங்கால் பகுதியில் செடிகள் உற்பத்தியை செயல்முறை விளக்கம் தருவதுடன், தோட்டக்கலை பயிர்களின் பயன்கள் எடுத்துரைக்கப்படும்.இறுதியாக, 10 ரூபாய் மதிப்புள்ள தோட்டக்கலை நடவு செடிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. 
ஆனால், இந்த திட்டம் குறித்து தோட்டக்கலை துறை சார்பில் கல்வித்துறைக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காததால், மாணவர்களிடம் கொண்டு செல்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவ, மாணவர்களை அழைத்து வர பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஏற்பாடு செய்யலாம். இது குறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறையும், கல்வித்துறையும் இணைந்து பண்ணை சுற்றுலா திட்டம் குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Label