OUR CLIENTS
வேலூர் பாலாற்றில் பலவித கோளாறு ஆற்றின் புனிதத்தை கெடுக்கும் மாநகராட்சி!
வேலூர் பாலாற்றில் பலவித கோளாறு ஆற்றின் புனிதத்தை கெடுக்கும் மாநகராட்சி! Posted on 01-Feb-2019 வேலூர் பாலாற்றில் பலவித கோளாறு ஆற்றின் புனிதத்தை கெடுக்கும் மாநகராட்சி!

வேலூர், பிப்.1-

வேலூர் பாலாற்றில் பலவித கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் புனிதத்தை கெடுக்கும் வகையில் வேலூர் மாநகராட்சி வரிந்து கட்டிக் கொண்டு குப்பைகளை கொட்டி நாசமாக்கி வருவது தொடர்கதையாகி வருகிறது. 

வேலூர் மாவட்டம், வேலூரையடுத்த சதுப்பேரி கிராமத்தினருகே பல ஆண்டுகளாக குப்பைகளை கொட்டிய வேலூர் மாநகராட்சியை கண்டித்து பல கட்ட போராட்டங்களை நடத்தியதை மாநகர மக்கள் நன்கு அறிவார்கள். இந்நிலையில் தொடர்ந்து அங்கு குப்பை கொட்டுவது நிரந்தரமாக தடை செய்யப்பட்டது. மேலும் மாநகர் பகுதியில் ஆங்காங்கே சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த பகுதிகளிலேயே மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்து கொட்டுவதற்கு பொதுமக்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டது. அதன்படியே பொதுமக்களும் குப்பைகளை பிரித்து அளிக்கின்றனர். ஆனால் குப்பைகளை சேகரிக்கும மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அதை முறையாக அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்குகளை பயன்படுத்தாமல் கேட்பாரற்றுகிடக்கும் பாலாற்றின் கரையோரம் கொட்டத் தொடங்கிவிட்டனர். பாலாற்றின் தென்கரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. 
அதன் எதிரே வடகரைப்பகுதி நீளத்துக்கும் குப்பைகளை கொட்டி ஸ்மார்ட் சிட்டியை அலங்கரித்து வருகின்றனர் மாநகராட்சி ஊழியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நிலையில் நேற்று பட்டப்பகலில் பாலாற்றங்கரையில் குப்பைக்குவியலை தீவைத்து எரியூட்டி அந்த பகுதியில் பெரும் தீ மூட்டம் ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளிக்க செய்தனர் மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் வந்த துப்புரவு பணியாளர்கள். இப்பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு பாலாற்றின் கரையோரம் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. கல்லூரி மாணவர்கள், பள்ளி செல்லும் சிறார்கள் காலை, மாலை நேரங்களில் விளையாட முடியாமல் இங்குள்ள புகைமூட்டம் மற்றும் துர்நாற்றத்தால் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். கடந்த ஆண்டு இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதி மக்கள் அவ்வப்போது இனம்புரியா காய்ச்சலால் அவதிப்படுகின்றனர்.
பாலாற்றுப்பகுதியில் குப்பைகளை கொட்டக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்து அதற்கான அறிவிப்பை பாலாற்றின் கரையருகே வைக்கப்பட்டுள்ள நிலையில் பாலாற்றின் கரையோரப்பகுதியில் மலைபோல குப்பைக்கழிவுகளை கொட்டி பாலாற்றின் தூய்மையை  அடியோடு கெடுக்கும் பணியை மாநகராட்சியின் துப்புரவுப்பணியாளர்கள் செய்து வருகிறார்கள். மாலை மற்றும் இரவு நேரங்களில் பாலாற்றின் மையப் பகுதிகளுக்கே சென்று குப்பைகளை கொட்டவும், இறந்துபோன நாய், ஆடு, மாடுகள் மற்றும் இறைச்சிக்கழிவுகளை வீசிச்செல்லவும் செய்கின்றனர்.
பொதுமக்கள் வீடுகளில் கொடுக்கும் குப்பைகளை மட்டுமே சேகரித்து வந்தால் மாநகராட்சியின் குப்பைகிடங்கின் உள்ளேயே கொட்டி பிரித்து அழிக்கலாம். ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் குறிப்பாக டிரைவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள்  சிலர் தனியார் ஓட்டல்கள், லாட்ஜூகள், தனியார் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் சேரும் குப்பைகளை அகற்ற  இவர்கள் தனிப்பட்ட முறையில் பணத்தைப்பெற்றுக்கொண்டு பொதுமக்களின் வரிப்பணத்தில், மக்கள்நலனுக்காக செயல்படவேண்டிய மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனங்களையும், மாநகராட்சிப் பணியாளர்களையும் சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்து கின்றனர். 
மேலும் திருமண மண்டபத்தின் கழிவுகளை கொட்டும் மாநகராட்சி வாகனத்தின் எண்: டி.என்.23 சிஎம் 1462 டிரைவரிடம் ஆற்றில் குப்பை கொட்டுவது சரியா என கேட்டதற்கு இப்படித்தான் செய்வோம் எங்களை எதுவும் செய்ய முடியாது என கோபமாக அந்த வண்டியை நம் மீது ஏற்றுவதுபோல் ஓட்டிச்சென்றார். பாலாறு எவ்வளவு தூய்மையாக இருந்திருந்தால் அப்பெயரைப் பெற்றிருக்கும்? வேலூரைச் சேர்ந்தவர்களுக்கு பாலாற்றின் அருமை நன்கு தெரியும், அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு இயற்கை வளங்களை அழிக்கும் மாபாதகச்செயலை புரியும் இவர்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத்து ஏனோ?. பக்கத்து மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில் பாயும் கெடிலம், தென்பெண்ணையாறு ஆறுகளை தெய்வம்போன்று பாவிக்கின்றனர் அம்மாவட்ட மக்கள். ஆறு என்றால் மணல் மற்றும் நாணல் மட்டுமே பார்க்க முடிகிறது. 
ஆனால் வேலூர் மாவட்டத்திலோ நிலைமையோ தலைகீழாக உள்ளது. மணல் திருட்டு ஒருபுறம் என்றால் பாலாற்றை பாழாக்கும் வகையில் குப்பைகளை கொட்டுவது, சாக்கடை கழிவுகளை பைப் லைன் அமைத்து பாலாற்றில் கலக்கச் செய்வது என்று மனிதாபிமானமே இல்லாமல் சமூக விரோதிகள் போன்று செயல்படுகின்றனர் பல இதயம் இல்லாதவர்கள். இப்படி இருந்தால் பாலாற்றை எப்படி காப்பாற்றுவது, மீட்பது?. இப்படி பாலாற்றில் உள்ள பலவித கோளாறுகளை மாநகராட்சி நிர்வாகம் நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. குப்பைகளை கொட்டி துர்நாற்றம் வீசச் செய்யாமல் இருந்தால் போதும் என்று தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இனிமேலாவது வருங்கால சந்ததிகளை கவனத்தில் கொண்டு பாலாற்றை பாதுகாக்கும் நடவடிக்கையில் வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label