OUR CLIENTS
மத்திய பட்ஜெட் சலுகை - தமிழ்நாட்டில் 73 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும்
மத்திய பட்ஜெட் சலுகை - தமிழ்நாட்டில் 73 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும் Posted on 02-Feb-2019 மத்திய பட்ஜெட் சலுகை - தமிழ்நாட்டில் 73 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும்

சென்னை, பிப்.02-

சிறு-குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தமிழகத்தில் 73 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 

பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்தி அடையச் செய்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.
ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு அனைத்துத் துறைகளிலும் சலுகை மேல் சலுகைகள் வாரி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டாலும், இடைக்கால பட்ஜெட் மிகவும் சிறப்பாக அமைந்து இருப்பதாக மாற்றுக் கட்சியினரும் கருதுகிறார்கள்.
விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், வேலைக்கு செல்லும் நடுத்தர வகுப்பு மக்கள், மீனவர்கள், சினிமா தொழிலாளர்கள், ராணுவ வீரர்கள் என்று அனைத்துத் துறையினரும் இடைக்கால பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளால் பயனடையும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், புதிய திட்ட அறிவிப்புகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்ற பாராட்டைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் விவசாயிகள் கடன் பிரச்சினை, இயற்கை பேரிடர் பிரச்சினைகளில் சிக்கி தவிப்பதாக கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை கொடுப்போம்” என்று கூறி வந்தார். அந்த பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று இடைக்கால பட்ஜெட்டில் பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று பட்ஜெட்டை தாக்கல் செய்த பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின்படி 5 ஏக்கருக்கும் அதாவது 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்து இருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக ரூ.6 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். ஒவ்வொரு தவணையின் போதும் அதாவது 4 மாதங்களுக்கு ஒரு தடவை சிறு-குறு விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் கிடைக்கும்.
இந்த திட்டத்துக்காக நடப்பு நிதி ஆண்டிலேயே 20 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த நிதியாண்டில் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மை மேம்பாட்டுக்காக ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 981 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா” திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் கணக்கிடப்பட்டுள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு நேரிடையாக இந்த உதவி சென்று சேரும். அந்த வகையில் தமிழ்நாட்டில் 73 லட்சத்து 40 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெறுவார்கள்.
தமிழகத்தில் 2015-16-ம் ஆண்டு நடத்தப்பட்ட வேளாண் கணக்கெடுப்புப்படி 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்து இருப்பவர்கள் 73.4 லட்சம் பேர் என்று தெரியவந்துள்ளது. இதில் 62 லட்சத்து 24 ஆயிரம் விவசாயிகள் 1 ஹெக்டேர் வரை மற்றும் அதற்கும் குறைவான நிலம் வைத்துள்ளனர். 11 லட்சத்து 19 ஆயிரம் விவசாயிகளிடம் 1 முதல் 2 ஹெக்டேர் வரை நிலம் உள்ளது.
தமிழ்நாட்டில் விவசாய நிலப்பரப்புகள் ஏற்கனவே டிஜிட்டல் வகையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் 1 ஹெக்டேர் மற்றும் அதற்கும் குறைவான விவசாய நிலம் வைத்திருப்பவர்களில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள். 70 ஆயிரம் பேர் பழங்குடி இனமக்கள். 54 லட்சத்து 81 ஆயிரம் பேர் மற்றவர்கள் ஆவார்கள்.
அதுபோல 2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் வைத்து இருப்பவர்களில் 94 ஆயிரம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள். 17 ஆயிரம் பேர் பழங்குடி இன மக்கள். 10 லட்சத்து 8 ஆயிரம் பேர் மற்றவர்கள் ஆவார்கள்.
இந்த சிறு-குறு விவசாயிகளின் விவசாய நில விவரமும், வங்கிக்கணக்கும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டில் 73 லட்சம் விவசாயிகள் எளிதில் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் முதல் 4 மாதங்களுக்கான முதல் தவணை தொகை அடுத்த மாதத்துக்குள் (மார்ச்) விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
இதை கருத்தில் கொண்டே நடப்பு நிதி ஆண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. எனவே அடுத்த மாதம் (மார்ச்) நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக்கணக்குகளில் போடப்பட்டு விடும்.
இரண்டாவது தவணை வரும் ஜூலை மாதம் கிடைக்கும். இந்த உதவித்தொகை ஏழை-எளிய விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் கை கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இது தவிர இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 2 சதவீத வட்டி தள்ளுபடி, கடனை முறையாக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி ஆகிய அறிவிப்புகளும் லட்சக்கணக்கான விவசாயிகளின் கை இருப்பு பணத்தை மிச்சப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Label