OUR CLIENTS
பணம் வாங்கும் காணொலியில் சிக்கிய போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட்!
பணம் வாங்கும் காணொலியில் சிக்கிய போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட்! Posted on 05-Feb-2019 பணம் வாங்கும் காணொலியில் சிக்கிய  போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட்!

சென்னை, பிப்.5-

சென்னையில் போக்குவரத்து காவலரை சாலையில் தள்ளிவிட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீண்டும் லஞ்சப்புகார் காணொலியில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணிபுரியும் தர்மராஜ்(41) என்பவர் தனது தாயார் இறப்புக்கு திதி கொடுப்பதற்காக, அப்போது தேனாம்பேட்டை ஆய்வாளராக இருந்த ரவிச்சந்திரனிடம் விடுமுறை கேட்க, அவர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து விரக்தி அடைந்த தர்மராஜ், அத்தியாவசிய தேவைக்குக்கூட விடுமுறை கொடுக்க மறுக்கிறார் என்று வாக்கி-டாக்கி மூலம் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனால் தர்மராஜ் மீது கோபம் அடைந்த ஆய்வாளர் ரவிச்சந்திரன், சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தர்மராஜை பிடிப்பதாககூறி, அவரை கீழே தள்ளிவிட்டார்.  
கீழே விழுந்த தர்மராஜுக்கு தோள்பட்டை எலும்பில் முறிவும், கால் பெருவிரலில் முறிவும் ஏற்பட்டது. ஆனாலும் அவரை வலுக்கட்டாயமாக குற்றவாளியை பிடிப்பதுபோன்று பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் மது அருந்தியுள்ளதாக அறிக்கைப் பெற்று அவரை பணியிடை நீக்கமும் செய்ய வைத்தார் ஆய்வாளர் ரவிச்சந்திரன்.
போக்குவரத்து ஆய்வாளர் தள்ளிவிட்ட காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூகவலைதளங்களில் பரவியது.  இதனால் ஆய்வாளர் ரவிச்சந்திரனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து கூடுதல் ஆணையர் உத்தரவிட்டார். ரவிச்சந்திரன் செயலுக்கு மேலும் எதிர்ப்பு வலுக்கவே, தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தர்மராஜின் மனைவி ஸ்ரீதேவி தனது கணவரை கீழே தள்ளி கொல்ல முயன்றதாக ரவிச்சந்திரன் மீது புகார் அளித்து கொலை முயற்சி வழக்கில் கைது செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தார். புகார் அளிக்க அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு சென்ற தர்மராஜின் மனைவியிடம் 5 மணி நேரத்திற்கு பின்னரே புகாரின் மீதி சிஎஸ்ஆர் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட விபரங்களை பத்திரிகை செய்தி வாயிலாக அறிந்த மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை தாமே முன்வந்து வழக்காக எடுத்தது.
ஆய்வாளர் ரவிச்சந்திரன் காவலர் தர்மனை ஓடும் மோட்டார் சைக்கிளிலிருந்து தள்ளிவிட்டது மனித உரிமை மீறல் இல்லையா? இந்த சம்பவத்தில் அபிராமபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் புகார் அளிக்க வந்த பாதிக்கப்பட்ட தர்மராஜின் மனைவியிடம் புகாரை பெற்று சிஆர்பிசி 154 பிரிவின் கீழ் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?
இதுகுறித்து காவல் ஆணையரோ அல்லது அவருக்கு கீழ் உள்ள இணை ஆணையர் அந்தஸ்த்துக்கு குறையாத பணியில் உள்ள அதிகாரியை வைத்து விசாரணை நடத்தப்படவேண்டும், என உத்தரவிட்டது. இதையடுத்து ரவிச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே ரவிச்சந்திரன் மீண்டும் ஓடி டூட்டியில் அம்பத்தூர் போக்குவரத்து ஆய்வாளராக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை முதல் வாட்ஸ் அப் வலைதளங்களில் ஒரு காணொலி வைரலானது. அதை பதிவிட்ட நபர் அனைத்து கால் டாக்ஸி ஓட்டுனர்கள் கவனத்திற்கு போக்குவரத்து ஆய்வாளரின் அட்டகாசம் அம்பத்தூர் காவல் நிலைய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இவர் எங்களைப்போன்ற கால் டாக்சி ஓட்டுநர் லாரி ஓட்டுநர் பொதுவாக எல்லா ஓட்டுனர்களிடம் கட்டாயமாக பணத்தை லஞ்சமாக பெரும் வீடியோ தான் இது.
ஸ்வைப்  மிஷினில் தான் ஏடிஎம் கார்டு மூலம் பணம் செலுத்தி பணப்பரிவர்த்தனை இல்லாத முறையில் வழக்குப்  போடவேண்டும் என்று டிவி மற்றும் பேப்பரில் உயரதிகாரிகள் விளம்பரம் செய்தார்கள். காசு வாங்க கூடாது ஏடிஎம் கார்டு தேய்த்து பைன் கட்டணும்னு சொன்னீங்க, ஆனால் இந்த இன்ஸ்பெக்டர் என்ன செய்றாருன்னு இந்த வீடியோவை பாருங்க பொதுமக்களே ஸ்வைப் மெஷின் வைத்துக்கொண்டு கண்டக்டர் மாதிரி பை வச்சுகிட்டு  வேப்கோ கம்பெனி  அருகில் பணம் பெறுகிறார்.
ஒரு போலீஸ்காரரை வண்டியில் தள்ளிவிட்ட இன்ஸ்பெக்டர்தான் இந்த ரவிச்சந்திரன் இந்த சம்பவம் நடந்து கொஞ்ச நாள் கூட ஆகவில்லை. காவல்துறையில் சில நல்ல அதிகாரிகளும் சில நல்ல காவலர்களும் இருக்காங்க நாங்க எல்லாரையும் குறை சொல்ல விரும்பவில்லை ஆனால் இப்படிப் பட்டவர்களை அதிகாரிகள்  பார்த்து களை எடுத்திருந்தால் இது போல ஒரு சம்பவம் நடந்து இருக்காது என பதிவிட்டுள்ளனர். மேற்கண்ட காணொலி மற்றும் பதிவுகள் ஊடகங்களில் வெளியானது. காவல் ஆணையர் கவனத்திற்கும் இந்த விவகாரம் சென்றது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆய்வாளர் ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Label