OUR CLIENTS
2ஜி வழக்கில் பதிலளிக்க அவகாசம் கேட்டவர்கள்: 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட உத்தரவு
2ஜி வழக்கில் பதிலளிக்க அவகாசம் கேட்டவர்கள்: 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட உத்தரவு Posted on 08-Feb-2019 2ஜி வழக்கில் பதிலளிக்க அவகாசம் கேட்டவர்கள்: 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட உத்தரவு

புதுடெல்லி, பிப்.08-

2ஜி மேல் முறையீட்டு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டவர்களுக்கு அபராதமாக 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் மாறுபட்ட உத்தரவை அளித்தது.

இந்த உத்தரவைச் செயல்படுத்துவதாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிபதியிடம் உறுதி அளித்தனர். 
2ஜி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி உள்பட 14 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நாஜ்மி வஜீரி அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த சாஹித் உஸ்மான் பல்வா, குசேகான் நிறுவனத்தின் இயக்குநர் ராஜீவ் அகர்வால், டிபி ரியாலிட்டி நிறுவனம் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜய் அகர்வால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினர்.
அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்தக் கால அவகாசம் கோரிய ஒவ்வொரு எதிர்மனுதாரர்கள் சார்பிலும் ஒருவருக்கு 3 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும். ஆ. ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா 300 மரக்கன்றுகள், குசேகான் நிறுவனத்தின் நிறுவனர் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகிய இருவரும் சேர்ந்து மொத்தம் 500 மரக்கன்றுகள் நட வேண்டும். இந்த மரக்கன்றுகள் அனைத்தும் தெற்கு தில்லியில் வனப் பகுதியில் நட வேண்டும்.
இது தொடர்பாக வனப் பாதுகாவலரிடம் (தெற்கு) பிப்ரவரி 15-ஆம் தேதி தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த மரக்கன்றுகள் மூன்றரை ஆண்டுகள் வயதுடையதாகவும், குறைந்தது 6 அடி உயரம் கொண்டதாகவும், பாரம்பரிய  வகைகளைச் சேர்ந்தவையாகவும் இருக்க வேண்டும். மழைக் காலம் வரை மரக்கன்றுகளை பராமரிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதற்கு, சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அபராதமாக மரக்கன்றுகளை நட உத்தரவிடுவது சிறந்த முறை என்றார். பால்வா உள்ளிட்டோருக்கு ஆஜரான வழக்குரைஞர் விஜய் அகர்வால், மரக்கன்றுகளை நட உத்தரவிட்டிருப்பது புதுமையாக உள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்துவோம் என்றார்.

Label