OUR CLIENTS
புற்றுநோய் குறித்த ஓவிய கண்காட்சி!
புற்றுநோய் குறித்த ஓவிய கண்காட்சி! Posted on 08-Feb-2019 புற்றுநோய் குறித்த ஓவிய கண்காட்சி!

வேலூர், பிப்.8-

உலக புற்றுநோய் தினத்தையொட்டி புற்றுநோய் குறித்த ஓவிய கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தொடங்கி வைத்தார். 

வேலூர் பழைய பேருந்து நிலையம் நகர அரங்கத்தில் உலக புற்றுநோய் தினத்தையொட்டி அடுக்கம்பாறை புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் சமூக மருத்துவ துறை சார்பாக ஏற்பாடு செய்த அரசு மருத்துவ கல்லூரி செவிலிய மாணவிகள் புற்றுநோய்கள் குறித்த வரைந்த ஓவிய காண்காட்சியை தொடங்கி வைத்து ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி செவிலியர் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது: 
உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மேலும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்சிகள் பத்தாம் தேதி வரை நடத்தப்பட்டு விழிப்புணர்வுகள் சமுகத்தில் ஏற்படுத்தப் படுகிறது. இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் ஒரு கருத்தை மக்களிடையே முன்னிருத்தியுள்ளது. நான் புற்றுநோய்க்கு எதிராக பாடுபடுவேன். புற்றுநோயை ஒழிக்க முன்நிற்பேன் என்ற கருத்தை அனைவரும் ஏற்று புற்றுநோயை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாளுக்கு நாள் புற்றுநோய்களால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கு காரணம் மக்களின் வாழ்வியல் மாற்றமே ஆகும். இந்தியாவில் ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய், இரப்பை புற்றுநோய் பெருங்குடல் புற்றுநோய் மிகுதியாக உள்ளது. பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் கருப்பைவாய்ப்புற்றுநோய் மிகுதியாக உள்ளது. பெண்கள் ஏழு பேரில் ஒருவர் மார்பக புற்று நோய்க்கு ஆளாகின்றனர். புற்றுநோய் என்றால் இறப்புதான் என்று மக்கள் அஞ்சக்கூடாது. அதற்கு தகுந்த சிகிச்சையை ஆரம்ப காலகட்டத்திலேயே எடுத்துக்கொண்டால் பாதிப்புகளில் இருந்து மீளாலாம். மனித உறுப்புகளுக்குள்
தலை முதல் கால்வரை எந்த பகுதிகளிலும் புற்றுநோய் வரலாம். புற்றுநோய் குறித்த அறிகுறிகள் கண்டறியப் பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோத னைகளை செய்துகொள்ளலாம். 
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோயை கண்டறியும் கருவிகள் உள்ளன. மக்கள் தகுந்த நேரத்தில் அவற்றை பயன்படுத்தி உரிய சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு புற்று நோயிலிருந்து விடுபடலாம். வேலூர் மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்களிடையே நடத்தப்பட்ட இலவச பரிசோதனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை 2163 பேரில் 206 பேருக்கும், கர்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை 3160 பேரில் 311 பேருக்கு கண்டறியப்பட்டு இலவச சிகிச்சைகளை அரசு மருத்துவமனையில் பெற்று வருகின்றனர்.
முறையான உடலுழைப்பு,  உடற்பயிற்சி இல்லாததும், மது, புகையிலை பொருட்கள், மாசுகளாலும் மற்றும் உணவு பழக்கவழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமும் காரணமாவும். மரபணு மாற்றத்தால் ஏற்படும் புற்று நோய்களை தடுக்கமுடியாது. ஆனால் தவறான வாழ்வியல் முறையால் வரும் புற்றுநோய்க்கு சிகிச்சை மூலம் தடுக்கமுடிகிறது. பண்டைய கால மக்களின் உடலுழைப்பும் மற்றும் உணவு பழக்கவழக்கத்தால் பல்வேறு விதமான நோய்கள் மக்களிடையே ஏற்படவில்லை. 
ஆகவே மக்கள் தீய பழக்கங்களுக்கு ஆட்படாமல் சுய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். உடல் எடையை குறைத்தல், காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
புற்றுநோய்க்கான சிகிச்சைகள் உள்ளது. மேலும் மூன்று நிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சைகளை அளிக்க கதிரியக்க சிகிச்சை மையம் தேவையென அரசுக்கு அறிக்கையை மாவட்ட நிர்வாகம் மூலம் அளித்து பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் படும். மேலும் நோய்களால் சிகிச்சை களுக்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவர் களும் செவிலியர்களும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். இன்றைய தினத்தில் கலந்துக்கொண்டவர்கள் தங்கள் வீட்டின் அக்கம் பக்கம் உள்ளவர்களிடமும் உறவினர்களிடமும் புற்றுநோய் குறித்த விழிப் புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சாந்திமலர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.சுரேஷ், மருத்துவ கண் காணிப்பாளர் மரு.ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் மரு.இன்பராஜ், துணை முதல்வர் மரு.ஆதிகேசவன், துறைத் தலைவர் மரு.ரதிதிலகம், மரு.ஆனந்த், குழந்தைகள் பிரிவு துறைத்தலைவர் மரு.தேரணிராஜன் மற்றும் மருத்துவர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

Label