OUR CLIENTS
ரஃபேல்: பிரதமர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகிவிட்டது
ரஃபேல்: பிரதமர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகிவிட்டது Posted on 09-Feb-2019 ரஃபேல்: பிரதமர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகிவிட்டது

புதுடெல்லி, பிப்.09-

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சகத்தைத் தவிர பிரதமர் அலுவலகமும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரபல ஆங்கில நாளிதழில் கட்டுரை வெளியான நிலையில், அதனை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரத்தில், பிரதமர் மீதான தனது குற்றச்சாட்டுகள் தற்போது உறுதியாகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய விமான படைக்கு பிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய பாஜக அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சாதகமாக பிரதமர் மோடி செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழில் வெள்ளிக்கிழமை ஒரு கட்டுரை வெளியானது. அதில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், பிரான்ஸ் அரசு அதிகாரியுடன் பிரதமர் அலுவலகமும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையை சுட்டிக்காட்டி, செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நமது நாட்டின் ஆயுதப் படையைச் சேர்ந்த ஒவ்வொருவரிடமும் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். உங்களிடமிருந்து ரூ.30,000 கோடியைத் திருடி, தனது நண்பரான அனில் அம்பானியிடம் மோடி கொடுத்துவிட்டார். 
ரஃபேல் ஒப்பந்தத்தில், பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் பேச்சுவார்த்தையை வலுவிழக்கச் செய்யும் வகையில் பிரதமர் அலுவலகமும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த விவரங்கள் அடங்கிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் குறிப்பும் அக்கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தினார். மேலும், அந்த குறிப்பையும் அவர் செய்தியாளர்களிடம் வாசித்துக் காட்டினார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராகுல், வதேரா, ப.சிதம்பரம் என யாருக்கு எதிராக வேண்டுமானாலும் சட்டத்தை பயன்படுத்த அரசால் முடியும். அதேசமயம், ரஃபேல் விவகாரத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் அரசு பதிலளிக்க வேண்டும் என்றார்.
அதிர்ச்சியளிக்கிறது: முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி கூறுகையில், பாதுகாப்புத் துறை சார்ந்த பேச்சுவார்த்தைகளில், பாதுகாப்புத் துறை அமைச்சகம் மட்டுமே ஈடுபடும். ஆனால், ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகமும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் மட்டும் பிரதமர் அலுவலகம் தனி ஆர்வம் காட்டியது ஏன் என்று கேள்வியெழுப்பினார்.
தேச பாதுகாப்புக்கு பாதிப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பெரும் தொழிலதிபர்கள் பயனடைவதற்காக, விமானப் படை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தை மத்திய அரசு வலுவிழக்க செய்துவிட்டது. பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் கஜானாவுக்கு ஏற்பட்ட இழப்புக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில், பல்வேறு உண்மைகளை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறைத்துவிட்டது என்று யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
ஒமர் விமர்சனம்: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு எதுவுமே தெரியாது என்பது இதிலிருந்து தெளிவாகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களுக்கு பாஜக என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
ராகுலின் மற்றுமொரு  பொய்: பாஜக பதிலடி
ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகத்துக்கு நேரடி தொடர்பு உள்ளதாக ராகுல் கூறியுள்ள குற்றச்சாட்டு, அவரது மற்றுமொரு பொய் என்று பாஜக தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என விரும்பும் சில வெளிநாட்டு சக்திகளின் துண்டுதலின்பேரில் ராகுல் செயல்பட்டு வருகிறார். அதற்காக தனது பொய் உற்பத்தி ஆலையிலிருந்து பொய்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டில் ரஃபேல் ஒப்பந்தத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு இறுதி செய்தது. எனினும், தங்களுக்கு கமிஷன் தொகை எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை. காங்கிரஸ் அரசில் கமிஷன் தொகை வழங்காமல் எதுவும் நடைபெறாது. பிரதமர் மோடி, நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளிப்பார் என்பது மக்களுக்கு தெரியும். அதேசமயம், காங்கிரஸ் ஊழல் கட்சி என்பதும் மக்களுக்கு தெரியும் என்றார் ஜாவடேகர்.

Label