OUR CLIENTS
திருவண்ணாமலை - வேலூர் சாலையில் புதிய சுங்கச் சாவடி ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்த திட்டம்!
திருவண்ணாமலை - வேலூர் சாலையில் புதிய சுங்கச் சாவடி ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்த திட்டம்! Posted on 09-Feb-2019 திருவண்ணாமலை - வேலூர் சாலையில் புதிய  சுங்கச் சாவடி ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்த திட்டம்!

திருவண்ணாமலை, பிப்.9- 

திருவண்ணாமலை-வேலூர் சாலையில் புதிய சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது. எனவே வரும் ஏப்ரல் முதல் சுங்கம் வசூலிக்க திட்டமிட்டுள்ளனர். 

திருவண்ணாமலை  வேலூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவில் துர்க்கை நம்மியந்தல் கிராமத்தில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியது. எனவே திருவண்ணாமலை  வேலூர் நெடுஞ்சாலையை இருவழிச்சாலையாக மாற்றி தரம் உயர்த்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சாலையின் தரம் உயர்த்தவில்லை. சுங்கச்சாவடி மட்டும் அமைக்கப்பட்டது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த சுங்கச் சாவடியில் வாகனங்கள் மட்டும் தணிக்கை செய்யப்படும். சுங்கக் கட்டணம் வசூலிப்பதில்லை என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் அப்போது தெரிவித்தனர். சாலையின் தரம் உயரும்போதுதான் சாலை பராமரிப்புக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றனர். ஆனால் சுங்கச் சாவடி அமைக்கும் பணி முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் சுங்க வரி வசூல் விபரம் அடங்கிய தகவல் பலகை தற்போது திடீரென வைக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் திருவண்ணாமலை  வேலூர் சாலையில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டண வசூல் தொடங்கும் எனும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை சுங்கச் சாவடி எதுவும் இல்லை. குறிப்பாக சித்தூர் கடலூர் சாலை எனப்படும் என்எச் 234 சாலையில், சுங்கம் வசூலிக்கும் தரத்தில் சாலை மேம்படவில்லை. இருவழிச்சாலையும் கிடையாது. எனவே இந்த சாலையில் சுங்கம் வசூலிப்பதற்கான எந்த அவசியமும் இல்லை. அதோடு பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாகவே இந்த சாலை காட்சியளிக்கிறது. எனவே இந்த சாலையில் சுங்கம் வசூலிக்க முயன்றால் கடுமையான எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிகிறது. மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றன. 
இதுபோன்ற விழாக் காலங்களில் சுங்கச் சாவடி வசூல் மற்றும் தணிக்கை நடப்பது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். சுங்கச் சாவடி எனும் பெயரில் அடாவடியும், அத்துமீறல்களும் நடப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. எனவே சுங்கச் சாவடியை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். சுங்கம் வசூலிப்பது படிப்படியாக கைவிடப்படும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. ஆனால் தரமில்லாத நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அமைத்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Label