கணியம்பாடியில் வாகன தணிக்கையின் போது காவலர் எட்டி உதைத்து இளைஞர் நசுங்கி பலி! Posted on 09-Feb-2019
வேலூர், பிப்.9-
வேலூர் அடுத்த கணியம்பாடியில் வாகன தணிக்கையின் போது நிற்காமல் சென்றவரது பைக்கை காவலர் ஒருவர் எட்டி உதைத்ததால் நிலை தடுமாறிய அந்த இளைஞர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் கணியம்பாடியில் உள்ள தாலுகா காவல் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் செல்வோரை நிறுத்தி வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் அந்த வழியாக வந்தார். அந்த இளைஞரை தணிக்கை என்ற பெயரில் போலீசார் காவல் நிலையம் எதிரில் வாகனத்தை நிறுத்துமாறு சொல்லி அராஜக போக்குடன் போலீசாருக்கே உரித்தான மிடுக்குடன் வழி மறித்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர் அங்கு தனது வாகனத்தை நிறுத்தாமல் வேகமாகச் சென்றார். இதனால் அந்த இளைஞர் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக லத்தியால் கடுமையாக தாக்கியும், ஒரு காவலர் அந்த பைக்கை தனது காலால் எட்டி உதைத்து சட்டத்தை மீறியும், மனித உரிமையை மீறியும் நடந்து கொண்டார்கள் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதில் நிலைதடுமாறிய அந்த இளைஞர் தனது இருசக்கரவாகனத்துடன் பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான இளைஞர் வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்வரன் என்று தெரியவந்துள்ளது. காவலர் எட்டி உதைத்ததால்தான் விக்னேஷ்வரன் நிலை தடுமாறி கீழே விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக பலியானார் என்றும் லத்தியால் தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். அதனால் அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. மாநிலத்தில் பரவலாக வாகன தணிக்கை என்ற பெயரில் போலீசார் நடந்து கொள்ளும் விதம் கடுமையாகவே உள்ளது. போன உயிரை காவல் துறையால் மீண்டும் தர முடியுமா?. விலை மதிப்பில்லாதது மனித உயிர். வாகன தணிக்கைக்கு இன்று ஒரு இளைஞர் தனது இன்னுயிரை இழந்துள்ளார்.
இதற்கு காவல் துறையில் யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள். அதிகபட்சமாக அந்த காவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார். ஆனால் இறந்த விக்னேஷ்வரனின் குடும்பத்துக்கு யார் பதில் சொல்வது. இது ஈடுகட்ட முடியாத இழப்பு விக்கியின் குடும்பத்துக்கு என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது.
இதையடுத்து விக்னேஷ்வரனின் உறவினர்கள் கணியம்பாடியில் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபோன்று தவறு செய்யும் காவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறை முன்வர வேண்டும். குறிப்பாக அந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், காவல் துறை தலைவர் ராஜேந்திரன் இந்த காவலர் மீது என்னதான் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.