OUR CLIENTS
டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில்: மோடி, எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்கள்
டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில்: மோடி, எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்கள் Posted on 09-Feb-2019 டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில்: மோடி, எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்கள்

சென்னை, பிப்.09-

டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள்.

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டார்.
அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 27-ந்தேதி மதுரை வந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு அங்கு நடந்த கூட்டத்திலும் தேர்தல் பிரசாரம் செய்தார்.
தற்போது பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 2-வது கட்டமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் வர இருக்கிறார். அவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மதியம் 2.35 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
அங்கிருந்து 2.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 3.05 மணிக்கு பெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்று சேருகிறார். பின்னர் 3.15 மணி அளவில் விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேருகிறார்.
திருப்பூர் பெருமாநல்லூரில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுக்கூட்ட மேடை அருகே மற்றொரு மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் அரசு திட்ட பணிகளை மோடி தொடங்கி வைக்கிறார்.
சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் இறுதி கட்ட வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை நாளை தொடங்கப்பட உள்ளது.
இந்த மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள். அதோடு அந்த வழித்தடத்தில் ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், ஐகோர்ட்டு, மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களையும் மோடி, எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து திறந்து வைக்க உள்ளனர்.
விழாவில் மத்திய மந்திரிகள் ஹர்தீப்சிங் புரி, பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார்கள்.
அதே நேரத்தில் சென்னையிலும் அதற்கான விழா நடைபெற உள்ளது. இதற்காக சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் பகுதியில் மேடை அமைக்கப்படுகிறது. விழாவில் மத்திய மந்திரி மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையே நாளை மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதன் மூலம் சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் திட்டப் பணிகள் முழுமை பெறுகிறது. ரூ.19 ஆயிரத்து 58 கோடி செலவில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
45 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த முதல் கட்ட மெட்ரோ ரெயில் பாதையில் சுரங்கப் பாதையில் 19 ரெயில் நிலையங்களும், உயர்மட்ட பாதையில் 13 ரெயில் நிலையங்களும் அமைந்துள்ளன.
சென்னை மெட்ரோ ரெயில் இறுதி வழித்தடத்தை தொடங்கி வைப்பதோடு மட்டுமின்றி பாம்பன் புதிய பாலம் கட்டும் பணிக்கும் பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். பரமக்குடி- தனுஷ்கோடி இடையே 4 வழிப்பாதை, ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
3.30 மணி அளவில் நலத்திட்டப் பணிகள் தொடக்க விழாவை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விழா முடிந்ததும் அதே பகுதியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், பொள்ளாச்சி, கரூர் ஆகிய 8 தொகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பேசுகிறார்.
இதில் பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். சுமார் 1 மணி நேரம் பிரதமர் மோடி அங்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி பங்கேற்கும் திருப்பூர் கூட்டத்தில் சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக தென் மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். கோவை - திருப்பூரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
திருப்பூர் பொதுக்கூட்ட மேடை அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டரை இறங்க வைத்து நேற்றும் இன்றும் ஒத்திகை நடத்தப்பட்டது.
பிரதமர் வருகையையொட்டி டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் 50 பேர் பெருமாநல்லூர் வந்துள்ளனர். அவர்கள் விழா மேடை, ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தமிழக கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் இன்று திருப்பூர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். டி.ஜி.பி. ராஜேந்திரன் இன்று மாலை திருப்பூர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார்.
பிரதமர் மோடி பேச உள்ள பொதுக்கூட்ட மேடை தேசிய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேடைக்கு வெளியே தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாளை மாலை திருப்பூர் கூட்டத்தை முடித்து விட்டு 4.20 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி புறப்படுகிறார். அவர் 4.55 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து சேருகிறார்.
மாலை 5.10 மணிக்கு தனி விமானத்தில் அவர் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டு செல்கிறார். அதுவரை அவருக்கு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3-வது கட்டமாக பிரதமர் மோடி மீண்டும் 24 அல்லது 27-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். அந்த சமயத்திலும் அவர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

Label