OUR CLIENTS
பழுதடைந்த சுகாதார நிலையம் மூடல் சிகிச்சை பெற கர்ப்பிணிகள் அவதி!
பழுதடைந்த சுகாதார நிலையம் மூடல் சிகிச்சை பெற கர்ப்பிணிகள் அவதி! Posted on 09-Feb-2019 பழுதடைந்த சுகாதார நிலையம் மூடல் சிகிச்சை பெற கர்ப்பிணிகள் அவதி!

திருவள்ளூர், பிப்.9-

கும்மிடிப்பூண்டியை அடுத்த மங்காவரம் பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் மங்காவரம், அப்பாவரம், ராஜாபாளையம், நத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2010-இல் இந்த துணை சுகாதார நிலைய கட்டடத்தின் மேற்கூரையும், உள்பக்க சுவரும் விரிசல் அடைந்து சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து, இந்த கட்டடத்தை சீரமைக்கக் கோரி இங்கு பணி புரிந்த சுகாதாரத் துறையினர் உயர் அதிகாரிகளிடம்  பரிந்துரை செய்தனர். ஆனால் இதை கண்டுகொள்ளப்படவில்லை, பாதுகாப்பு கருதி இந்த சுகாதார நிலையம் மூடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 8 வருடங்களாக இப்பகுதி மக்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் 8 கி.மீ. தொலைவில் உள்ள கும்மிடிப்பூண்டி அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். இதர நோயாளிகள் அவ்வளவு தொலைவு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், அவர்களது கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. தற்போது இந்த துணை சுகாதார நிலையம் புதர் மண்டிக் காணப்படுகிறது. இதுகுறித்து மங்காவரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ராமலிங்கம் கூறியது: 10-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் இந்த துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுகாதார நிலையம் மூடப்பட்டதால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
குறிப்பாக இரவு நேரத்தில் எவ்வித வாகன வசதியும் இல்லை. இதனால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து கிராம சபைக் கூட்டங்களில் கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்றார்.  இதுகுறித்து கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் கூறியது: சேதமுற்ற துணை சுகாதார நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து  சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
அரசின் நிதி ஒதுக்கீட்டுக்குப் பிறகு இந்த கட்டடம் சீரமைக்கப்பட்டு, சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் எனத்  தெரிவித்தார்.     

Label