OUR CLIENTS
ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் முடக்கம்? எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஈரோடு மக்கள்!
ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் முடக்கம்? எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஈரோடு மக்கள்! Posted on 11-Feb-2019 ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் முடக்கம்? எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஈரோடு மக்கள்!

ஈரோடு, பிப்.11-

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் எப்போது நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் ஈரோடு மாநகர மக்கள் தவிக்கின்றனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வைராபாளையம், சூரியம்பாளையம், அக்ரஹாரம் உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து நீரேற்று நிலையங்கள் மூலமாக காவிரி குடிநீர் விநியோகம்  செய்யப்படுகிறது. இதில், 6 நீரேற்று நிலையங்கள் மாநகராட்சிக்கு சொந்தமானதுஆகும். நீரேற்று நிலையங்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமானது. ஈரோடு மாநகர மக்களுக்கு,  தினமும் தற்போது 54 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய மக்கள்தொகை எண்ணிக்கையின்படி 81 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்க வேண்டும்.  ஆனால், 27 மில்லியன் லிட்டர் தண்ணீர் குறைவாக விநியோகிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பவானி அடுத்துள்ள ஊராட்சிக்கோட்டை என்ற இடத்தில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து மாநகர  மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ரூ.484 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்கான பணிகள் கடந்தாண்டு தொடங்கி  நடைபெற்று வருகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஈரோடு மாநகர பகுதியில் வசிக்கும் 5 லட்சத்து 35 ஆயிரம் மக்களுக்கு 81 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படும். இத்திட்டத்திற்காக ஊராட்சிக்கோட்டையில் இருந்து ஈரோடு வஉசி பூங்கா வரை 23 கி.மீ தூரத்திற்கு சாலையோரங்களில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற ஜூலை மாதம்  திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும். ஆனால், இப்பணி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில்,  இன்னும் 10 கி.மீ தொலைவிற்கு குழாய் பதிக்கும் பணி நடைபெற வேண்டியுள்ளது. 
ஊராட்சிக்கோட்டை அருகே 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு  நிலையம், 52 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி, சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு மற்றும் வஉசி பூங்கா பகுதியில் 188 லட்சம் லிட்டர் கொள்ளளவு  கொண்ட தரைமட்ட தொட்டிகள் கட்டும்பணி முடிக்கப்படாமல் உள்ளது. இத்தரைமட்ட தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்ட பின் இதிலிருந்து 79 கி.மீ சுற்றளவுக்கு கிளை குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு 67 மேல்நிலை தொட்டிகளுக்கு கொண்டுசெல்லும் பணிகள் முடிக்கப்பட  வேண்டியுள்ளது. எனவே, இப்பணிகள் அனைத்தும் இன்னும் 4 மாதங்களுக்குள் முடிக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.     
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஆண்டு ஜூன் மாதம் இத்திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டது. தற்போது பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல்  அதிகம் உள்ள பகுதிகளில் பணிகளை இரவில் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும்,  வருகிற ஜூலை மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி அலுவலர்கள் கூறினர்.

Label