OUR CLIENTS
சகல வரம் தரும் ரத சப்தமி விரதம்
சகல வரம் தரும் ரத சப்தமி விரதம் Posted on 11-Feb-2019 சகல வரம் தரும் ரத சப்தமி விரதம்

வேலூர், பிப்.11-
சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’ ஆகும். இது சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது.  தை மாதத்தில் அமாவாசைக்கு பிறகான 7-வது நாள்  நாளை (12/02/2019) ரத சப்தமி  ஆகும். ரத சப்தமி விரதம் மேற்கொண்டால் சகல வரமும் பெற்று வாழலாம்

உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி. தை மாத வளர்பிறையில் ஏழாவது நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  சப்தம் என்றால் 7 என பொருள். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் துவக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரதசப்தமி என்று போற்றப்படுகிறது. அன்றையதினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராடவேண்டும். சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்யவேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம். சூரிய உதயத்தின்போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம். ரதசப்தமியன்று துவங்கும் தொழில்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்நாளில் செய்யப்படும் தானம், தருமங்களுக்கும் பலமடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

அழிவில்லாத குழந்தை 
காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள் அந்த நேரத்தில் ஒரு அந்தணர் வந்து உணவு கேட்டார். கணவருக்கு பரிமாறியபின்னர் மெதுவாக நடந்து அந்தணருக்கு உணவு எடுத்து வந்தாள் அதிதி. இதனால் கோபம் கொண்ட அந்தணர், தர்மத்தை புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தை பாதுகாப்பதற்காக மெதுவாக நடந்து வந்த அந்த கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபம் இட்டார்
அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி தன் கணவரிடம் நடந்தவற்றை விளக்கினாள். இதைக்கேட்ட காஷ்யப முனிவர், கவலைப்படாதே அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் நமக்கு கிடைப்பான் என்று வாக்களித்தார். அதன்படி ஒளி பொருந்திய புத்திரன் ஒருவன் அவர்களுக்கு கிடைத்தான். அவனே உலகைக் காக்கும் சூரியன். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.   

செல்வம் பெருகும்
இந்த விரதம் எளிமையானது. ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராடவேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.

 ரத சப்தமி திருவிழா 
ரத சப்தமி நாளில் தஞ்சை மாவட்டம் சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடைபெறும். ஏழு மலைகளைக் கொண்டதால் ஏழு குதிரைகள் போல இதனை நினைத்து இங்கு ரதசப்தமி விழா கொண்டாடுகின்றனர். இந்த நாளில் ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவது சிறப்பம்சமாகும்.ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பாவம் போக்கும் எருக்க இலை   
மகாபாரதப் போரில் வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். காலம் போய்க்கொண்டே இருக்கிறது பீஷ்மரின் உயிர் பிரியவில்லை. அப்பொழுது அவரைப் பார்க்க வந்த வேத வியாசரிடம், நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார் பீஷ்மர். அதற்கு வியாசர், "பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்று கூறினார்.

உடனே பீஷ்மருக்கு, சபை நடுவே பாஞ்சலியின் உடைகளை களைந்து துச்சாதனன் அவமானம் செய்தபோது அதை தடுக்காமல் இருந்தது மிகப்பெரிய தவறு செய்தது நினைவிற்கு வந்தது. இதற்கு விமோசனம் இல்லையா என்று கேட்டதற்கு, வியாசர், எப்பொழுது உன் பாவத்தை உணர்ந்தாயோ, அப்போது அகன்று விட்டாலும் அனைத்தையும் கண்டும் காணமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர். இதற்கு எருக்க இலையை காட்டிய வியாசர், அர்க்கம் என்றாரே சூரியன் என்று பொருள். எனவே இதனை தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்கஇலை.அதேபோல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்கஇலையால் அலங்கரிக்கிறேன் என்றார். உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார்.

புண்ணியம் கிடைக்கும் 
பீஷ்மருக்கு யாரும் இல்லாததால் நீத்தார் கடன் செய்வது குறித்து வியாசரிடம் வேண்டுகிறார் தர்மர். அதற்கு பதிலளித்த வியாசர், கவலைப்படாதே தர்மா, சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரதசப்தமி நாளில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்கடன் அளிக்கும் என்று கூறினார். ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்துக்கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதோடு, பீஷ்மருக்கு நீர்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும் என்று அருளினார்.

 

Label