OUR CLIENTS
நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள வர்த்தக நிறுவனங்கள்! மெத்தனப் போக்கில் மண்டல அலுவலர்கள்!
நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள வர்த்தக நிறுவனங்கள்! மெத்தனப் போக்கில் மண்டல அலுவலர்கள்! Posted on 13-Feb-2019 நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள வர்த்தக நிறுவனங்கள்! மெத்தனப் போக்கில் மண்டல அலுவலர்கள்!

வேலூர், பிப்.13-

வேலூரில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்கள் நீர்நிலைகளை நிரந்தரமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் எழுப்பியுள்ளன. இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி ஆணையர், மண்டல அலுவலர்கள் கண்டும் காணாமல் மெத்தனமாக செயல்படும் சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. 

வேலூர் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இதற்கு காரணம் சென்னையை அடுத்துள்ள மாநகராட்சி பகுதி வேலூர் ஆகும். இதனால் சென்னையில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்கள் தற்போது வேலூரிலும் தங்களது கிளைகளை ஆரம்பித்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் சில வர்த்தக நிறுவனங்கள் பல மாடி கட்டடங்கள் கொண்டதாக கட்டப்பட்டு செயல்படுகின்றன. இப்படி பல அடுக்குமாடி கட்டடங்கள் கட்ட வேலூரில் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் சில பெரிய வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து இப்படி பிரமாண்ட கட்டடங்களை கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால் வேலூர் வரைபடத்தை எடுத்து பார்த்தால் உண்மை நிலை விவரமாக தெரியும். 
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வருவாய் துறை வைத்துள்ள மாநகர வரைபடம், மாநகராட்சி வைத்துள்ள வரைபடங்களை பார்த்தால் அன்றைய நிலை எப்படி இருந்தது, இன்றைய நிலையில் அதே குறிப்பிட்ட இடம் இப்போது எப்படி உள்ளது என்பதை வெட்டவெளிச்சமாக காண்பிக்கும். நிலைமை இப்படி இருக்கையில் மாநகராட்சி நிர்வாகம் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் அமைதி காத்து வருகிறது. இதற்கு பின்னணியில் "ப" வைட்டமின்தான் காரணம்.  மாநகராட்சி ஆணையர், மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டே மறைமுக ஒப்புதல் அளித்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முறையான மண் பரிசோதனை செய்வதும் இல்லை, நீர்நிலைகளை முற்றிலுமாக தூர்த்தும் கட்டடம் கட்டப்பட்டடுள்ளது.  அதுமட்டுமின்றி கால்வாய்களில் ராட்சத விளம்பர பதாகைகளும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் கால்வாய் நீரால் அடிப்பகுதி துருபிடித்து உள்ளதால் விபரீதம் நடைபெறவும் வாய்ப்புள்ளது. அதிகப்படியான ராட்சத விளம்பர பதாகைகளால் போக்குவரத்து பார்வை மறைக்கபடுகிறது. இதனால் விபத்து நடைபெறுவதற்கும், சாலை தெளிவுப்பார்வை (Road Visibility) இல்லாததால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.  
இதுபோன்று அத்துமீறியவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை, அதாவது உயர்நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றி வேலூர் மாநகராட்சி ஆணையர், மண்டல அலுவலர்கள் நடந்து கொள்ளவில்லை. இப்படி வரைபடத்தில் உள்ளவாறு இருந்த இடங்களை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்தவற்றை ஏன் இதுநாள் வரையில் மீட்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிக்கிறது. ஏனென்றால் அந்த வர்த்தக நிறுவனங்கள் வாரியிறைத்த பணத்தில் திளைத்த மாநகராட்சி அலுவலர்கள் திருடனை தேள் கொட்டியது போன்று சத்தம் போடாமல் அமைதி காத்து வருகின்றனர். 
வேலூர் மாநகராட்சியின் நிர்வாகம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் குப்பையை கிளறியது போன்றுதான் இருக்கும். அதாவது கிளற கிளற குப்பைதான் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி அரசு சொத்துக்களை மீட்பது யார்? என்ற கேள்வி வேலூரில் எழுந்துள்ளது. பாலாறை மீட்போம் என்று ஒரு குழு உள்ளது. ஆனால் வேலூர் மாநகராட்சி பகுதிக்குள் உள்ள நீர்நிலைகளை அதாவது வாய்க்கால், கானாறு போன்றவற்றை நிரந்தரமாக தூர்க்கப்பட்டதை மீட்கப் போவது யார்? எந்த குழு? என்று இன்றுவரை விடை தெரியாமல் உள்ளது. 
வருவாய்த்துறையாவது மாநகராட்சி செய்யாத பணிகளை செய்ய முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், மாநகர் நல விரும்பிகள் உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி ஆக்கிரமிப்பு செய்த இடங்களை மீண்டும் மீட்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை மாநகரின் வளர்ச்சி மீது அக்கரை கொண்ட சமூக ஆர்வலர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் இதுபோன்ற பொதுபிரச்னையில் தலையிட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி ஆக்கிரமிப்பு செய்த இடங்களை கண்டறிந்து மீண்டும் மீட்டெடுக்க முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், மாநகர பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label