OUR CLIENTS
சென்னையில் கோடை வருவதற்குள் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்!
சென்னையில் கோடை வருவதற்குள் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்! Posted on 13-Feb-2019 சென்னையில் கோடை வருவதற்குள்  தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்!

சென்னை, பிப்.13-

சென்னையில் கோடை வருவதற்குள் தலைவிரித்தாடுகிறது குடிநீர் பஞ்சம். இதற்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடுமையான கோடை வர சராசரியாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், சென்னைவாசிகள் பலருக்கும் இந்த கஷ்டம் ஏற்கனவே வந்துவிட்டது.
முக்கியமாக, மேற்கு மாம்பலம், தி.நகர், ராயப்பேட்டை, சூளைமேடு, ஆலந்தூர், வேளச்சேரியின் சில பகுதிகள், வளசரவாக்கம், சேத்துப்பட்டு, கொடுங்கையூர், அடையாறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த பகுதிகளுக்கு தினந்தோறும் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது இப்பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் 480 - 550 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது.  தேவைக்கும், வழங்கலுக்குமான இந்த இடைவெளி, இன்னும் கோடைக்காலம் நெருங்க நெருங்க அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இதில் திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, மேற்கு வேளச்சேரி பகுதிகள் ஒரு வாரத்துக்கும் மேல் குடிநீர் இல்லாமல் சமாளிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
இதற்குத் தீர்வு காண தமிழக அரசு ஏதேனும் திட்டத்தைக் கையில் வைத்துள்ளதா? என்றால் இல்லை என்று அடித்து கூறலாம். அரசு வைத்திருக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், உடனடியாக இந்த பிரச்சனைக்கு சிக்கல் காண்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. அதாவது, மேலும் புதிய அணைக்கட்டுகளை உருவாக்குவது, கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகளை அமைக்கும் பணிகள் நத்தை வேதத்தில் நகர்ந்து வருகிறது.
திருவள்ளூரில் உள்ள தேர்வாய் கண்டிகை அணைக்கட்டை விரிவாக்கம் செய்யும் பணிகள் 2016ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக நிலங்களை கைப்பற்றும் பணிகள் நடந்து, வேலைகள் முடிந்து, மழை நீரை சேமிக்கும் பணிக்குத் தயாராக அடுத்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை வரைக் காத்திருக்க வேண்டும். நெம்மேலியில் அதிக அளவில் குடிநீரை சுத்திகரிக்கும் ஆலை கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆலை 2023ல்தான் செயல்படத் தொடங்கும் என்று மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு குடிநீர் சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணிகள் நீதிமன்ற வழக்கினால் தடைபட்டுள்ளது. குடிநீர் பஞ்சத்தைப் போக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மெட்ரோ குடிநீர் வாரியம் ரூ.122 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் முலம் 171 புதிய ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் 423 கைப்பம்புகள் அமைக்க, 300 லாரிகளை வாடகைக்கு எடுக்கவும்,1,294 குடிநீர் தொட்டிகளை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் கொண்டு வரும் டேங்கர் லாரிகள் பின்னால் பொதுமக்கள் தினமும் அல்லாட வேண்டியுள்ளது. ஒரு குடும்பத்தின் தேவையை அந்த டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து கொடுக்கப்படும் தண்ணீரால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மாறாக தண்ணீர் பஞ்சம்தான் தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்கும் இதே நிலைதான் என்றால் பார்த்து கொள்ளுங்கள். கேன் வாட்டர் வாங்கி பயன்படுத்த வசதியில்லாத குடும்பங்களின் நிலைமை அந்தோ பரிதாபம் என்றுதான் சொல்ல வேண்டும். சென்னையில் தற்போதே குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கோடை இன்னமும் ஆரம்பிக்காத போதே நிலைமை இப்படி என்றால் ஏப்ரல்,மே மாதங்களில் கடுமையாக குடிநீர் பஞ்சம் ஏற்படும் பேராபத்து நிகழும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பலவற்றுக்கு பட்ஜெட் போட்டு செயல்படுத்தும் அரசு சென்னை நகரவாசிகளின் குடிநீர் மற்றும் அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திட அதற்குண்டான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
தினமும் இதே பிரச்னையை சந்திக்க முடியாத நிலை இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டால் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என்றும், குடும்பத்தை நடத்துவதே பெரும் சிரமமாக உள்ளதாக இல்லத்தரசிகள் தரப்பில் கதை கதையாக கூறுகின்றனர். வெயிலில் டேங்கர் லாரியின் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக புகார்களை அடுக்கி கொண்டே போகின்றனர் தண்ணீருக்காக அல்லாடும் இல்லத்தரசிகள். கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதற்கு இது முன்னோட்டமாக இருக்கும் என்கின்றனர் அப்பாவி இல்லத்தரசிகள். இதற்கு விரைவில் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு தீர்வு காண முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label