OUR CLIENTS
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடைத்தரகராக செயல்படுகிறார் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடைத்தரகராக செயல்படுகிறார் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு Posted on 13-Feb-2019 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடைத்தரகராக செயல்படுகிறார் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி, பிப்.13-

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறும் குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடைத்தரகராக ராகுல் காந்தி செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளது.


முன்னதாக, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனர் அனில் அம்பானிக்கு பிரதமர் மோடி இடைத்தரகராக செயல்பட்டுள்ளார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பே அனில் அம்பானிக்கு அனைத்து தகவல்களையும் பிரதமர் மோடி அளித்துள்ளார் என்றும், அது குறித்த மின்னஞ்சல்களை தான் பார்த்ததாகவும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:
ராகுல் காந்தி பார்த்த மின்னஞ்சல்கள் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பானவை அல்ல; அவை ஹெலிகாப்டர் ஒப்பந்தம் குறித்தவை. ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி கூறும் குற்றச்சாட்டுகள் பொறுப்பற்றவை மற்றும் வெட்கக்கேடானவை.
விமானங்கள் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடைத்தரகராக ராகுல் காந்தி செயல்படுகிறார். ராகுல் காந்தி பார்வையிட்ட ஏர்பஸ் நிறுவனத்தின் மீது ஏற்கெனவே சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி ராகுலுக்கு எவ்வாறு கிடைத்தது. அவருக்கு அதை யார் வழங்குகிறார்கள்?
பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் கூறுகிறேன் என்று ராகுல் காந்தி அவர் முகத்திலேயே சேற்றை வாறி இறைத்துக் கொள்கிறார். அவர் கூறுவது அனைத்தும் பொய் என்பதை நாங்கள் விரைவில் நிரூபிப்போம்.  
ராகுல் காந்தியின் குடும்பத்தினர் நாட்டின் மொத்த சொத்தையும் அபகரித்தனர். ஆட்சியில் இருக்கும்போது நில அபகரிப்பு செய்து பணம் பெற்றனர். தற்போது பணத்துக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடைத்தரகராக செயல்படுகின்றனர் என்று கூறினார்.
மூழ்கும் குடும்ப ஆட்சியை காக்கவே பொய்கள்: மூழ்கிக் கொண்டிருக்கும் குடும்ப ஆட்சியைக் காப்பதற்காகவே ரஃபேல் விவகாரத்தில் தினமும் ஒரு பொய்யை காங்கிரஸ் கூறுகிறது என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி(சிஏஜி) ராஜீவ் மெஹரிஷிக்கு தொடர்பு இருந்ததாகவும், அவர் ரஃபேல் ஒப்பந்தத்தை தணிக்கை செய்யக்கூடாது என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியது. 
அதற்கு பதிலளித்து  ஜேட்லி முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதவாது:
ரஃபேல் ஒப்பந்தத்தின் மூலமாக பொதுமக்களின் கோடிக்கணக்கான பணம் சேமிக்கப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தம் குறித்து தினமும் ஒரு பொய்யை காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. மூழ்கிக் கொண்டிருக்கும் குடும்ப அரசியலை காப்பதற்காக இன்னும் எத்தனை பொய்களை நீங்கள்(காங்கிரஸ்) கூறிக்கொண்டே இருப்பீர்கள்? 
பொய்யுரைக்கும் காங்கிரஸ் கட்சியின் இந்த பழக்கம் மற்ற கட்சிகளுக்கும் பரவி, அனைவரும் இணைந்து மகாபொய்கூட்டணியை அமைக்க முயல்கின்றனர். 
ராஜீவ் மெஹரிஷி நிதித்துறை செயலராக இருந்தபோது, ரஃபேல் ஒப்பந்தம் குறித்த எந்த ஆவணங்களையும் அவர் பார்வையிடவில்லை. இதை எவ்வித பயமின்றி நான் கூறுகிறேன். 
இதற்கு முன்னரும் இதே குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 
முதலில் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்கியதாக கூறினார்கள். அதையடுத்து பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு என்றார்கள். எவ்வித ஆதாரமின்றி தற்போது புதிதாக ஒப்பந்தத்தில் சிஏஜி(முன்னாள் நிதித்துறை செயலர்) தலையீடு இருந்ததாக கூறுகிறார்கள். 
1970-களின் தொடக்கத்தில் ஏற்பட்ட அடிமை எண்ணம் அக்கட்சி தலைவர்களிடம் இன்றும் மாறாமல் உள்ளது. கட்சி தலைமைக்கு எதிராக பேசினால் அரசியலில் இருக்க முடியாது என்பதற்காக, கட்சி தலைமை எத்தனை பொய் கூறினாலும் அதை சரியென்று பேசுகின்றனர் என்று ஜேட்லி கூறியுள்ளார்.

Label