OUR CLIENTS
மாவட்டத்தில் தலை தூக்கியுள்ள குடிநீர் பஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா?
மாவட்டத்தில் தலை தூக்கியுள்ள குடிநீர் பஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted on 13-Feb-2019 மாவட்டத்தில் தலை தூக்கியுள்ள குடிநீர் பஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா?

விழுப்புரம், பிப்.13-

விழுப்புரம் மாவட்டத்தில், தென்பெண்ணை, மணிமுக்தா, கோமுகி, வீடூர் அணைகளும்; 2000 ஏரிகள், 3000க்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன. மாவட்ட மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

இதற்காக கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த பகுதியில் நீர்வளம் உள்ள இடத்தில் போர்வெல் அமைத்து மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது.மாவட்டத்தில் தென் பெண்ணை ஆற்றுப்படுகை மட்டுமே நீர்வளம் மிகுந்த பகுதியாக உள்ளதால் இங்கிருந்து அதிக கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.பருவமழை காலங்களில் நீர் நிலைகள் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் ஏற்படுவதில்லை.
ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் ஏரிகளின் பெரும்பாலான நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.மேலும், குடியிருப்பு பகுதியை யொட்டியுள்ள ஏரி, குளங்களில் வீடுகள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகளுக்கு மழைநீரைக் கொண்டு சேர்க்கும் வரத்து வாய்க் கால்கள் பராமரிப்பின்றி தூர்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் ஏரி, குளங்களின் நீர்ப்பிடிப்பு பரப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.கடந்த ஆண்டு பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால் மாவட்டத்தில் உள்ள அணைகள் எதுவும் நிரம்பாமல் மைதானம் போல் காணப்படுகிறது. ஏரி, குளங்கள் வறண்டு கிடப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை.
இதன் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடியிருப்புக்களுக்கு குடிநீர் வழங்கும் ஆதாரங்கள் போதிய தண்ணீரை சப்ளை செய்யாததால் மேல்நிலை தொட்டி நிரம்ப முடியாமல் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் குடிநீரை தேடி அலையும் நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீர் நிலைகளில் குட்டையாக தேங்கியுள்ள தண்ணீரும் வேகமாக வறண்டு வருகிறது.
நாளுக்கு நாள் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. கோடையில் தடையின்றி குடிநீர் வழங்கு வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Label