OUR CLIENTS
கடைகளின் ஆக்கிரமிப்பால் திணறும் திருவள்ளூர் பேருந்து நிலையம்!
கடைகளின் ஆக்கிரமிப்பால் திணறும் திருவள்ளூர் பேருந்து நிலையம்! Posted on 13-Feb-2019 கடைகளின் ஆக்கிரமிப்பால் திணறும்  திருவள்ளூர் பேருந்து நிலையம்!

திருவள்ளூர், பிப்.13-

திருவள்ளூர் பேருந்து நிலையத்தை பல்வேறு கடைக்காரர்கள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதால் இட நெருக்கடி காரணமாக பயணிகள் சிக்கித் தவிக்கும் நிலையை மாற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 திருவள்ளூர் மாவட்ட தலைநகராகவும், முக்கிய ஆன்மிக தலமாகவும் விளங்குவதால் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நகரமாக விளங்கி வருகிறது. இதுபோன்று பள்ளி, கல்லூரிகள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் வந்த செல்லும் பயணிகளின் முக்கிய போக்குவரத்து மையமாக திருவள்ளூர் நகராட்சி பேருந்து நிலையம் திகழ்ந்து வருகிறது.
இப்பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, திருச்சி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி, கர்நாடகத் தலைநகர் பெங்களூரு, ஆந்திர மாநிலம் சத்தியவேடு, சித்தூர், நகரி, புத்தூர், ரேணிகுண்டா, திருப்பதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். அதேபோல் அப்பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பயணிகள் நாள்தோறும் பயன்படுத்தும் இடமாக இந்தப் பேருந்து நிலையம் உள்ளது.இங்கு ஆந்திரம், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நின்று, செல்கின்றன. நாள்தோறும் அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் போக்குவரத்து, தொடர்ந்து இரவு 11 மணி வரை 80-க்கும் மேற்பட்ட பேருந்துகள் 400 தடவைகளுக்கு மேல் சென்று, திரும்புகின்றன.
 பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 10 புறநகர் பேருந்துகளும், 10 நகரப் பேருந்துகளும், அதையொட்டி ஏரிக்கரை சாலையில் 10 பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சியால் பழக்கடை, தேநீர் கடை, பூக்கடைகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
அந்தக் கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள், தங்கள் கடைகளுக்கு முன்புறம் உள்ள பகுதிகளை ஆக்கிரமித்து செய்வது அல்லது தரை வாடகைக்கு விடுவது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். இந்த ஆக்கிரமிப்பால் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்காக பேருந்து ஏற வரும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது. அத்துடன், பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில், கடைக்காரர்கள் முன்பு நின்றால் "எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது' எனக் கூறி தகாத வார்த்தைகளை பேசுகின்றனர். இதனால் பயணிகள் முகம் சுளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 
நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் வந்து செல்லும் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் சுகாதார வளாக வசதி உள்ளது.  இந்த வளாகத்தில் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் வெளியூர் பேருந்து நிற்கும் பகுதி ஓரங்களை பலரும் சிறுநீர் கழிக்கும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து நிலையம் முழுவதையும் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி துர்நாற்றம் வீடுகிறது. இதனால் பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக பயணி ரங்கராஜன் என்பவர் கூறுகையில், "இப்பேருந்து நிலையத்தில் கடைக்காரர்கள் ஆக்கிர மித்துள்ளனர். இதனால் பேருந்துக்காக பயணிகள் சிறிது நேரம் கூட காத்திருக்க முடியாத நிலை உள்ளது.
அதேபோல், கடைக்காரர்கள் பேருந்து நிலையத்தில் பழங்கள் உள்ளிட்ட கழிவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டாமல் திறந்தவெளியில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பேருந்து நிலையத்தில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால், கடைகளுக்கு முன்புறம் ஆக்கிரமித்து தரை வாடகைக்கு விடப் பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.  அத்துடன் பயணிகளுக்கு நெரிசல் ஏற்படாத வகையில் முன்மாதிரி பேருந்து நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், பேருந்து நிலையத்தில் முழு சுகாதாரத்தை கடைப் பிடிக்கும் வகையில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுவதோடு சுண்ணாம்புத் தூளும் கொட்டப்படுகிறது என்று தெரிவித்தார்.

Label