OUR CLIENTS
பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கடும் கண்டனம்!
பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கடும் கண்டனம்! Posted on 15-Feb-2019 பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கடும் கண்டனம்!

வேலூர், பிப்.15-

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக கொடூர தாக்குதல் நடத்தியதிற்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களை கொடூரமாக தாக்கிய காவல் துறையினர் மீது துறைரீதியான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாலியல் சர்ச்சை புகாரில் சிக்கி கைதாகி சிறையில் உள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டார். இந்த சம்பவத்தை பத்திரிகையாளர்கள் படம் எடுக்கவோ செய்தி சேகரிக்கவோ கூடாது என்று காலையில் இருந்தே விருதுநகர் மாவட்ட காவல்துறை கடும் கெடுபிடிகளை மேற்கொண்டது. இந்நிலையில் தொடர்ந்து, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக கொடூரத் தாக்குதல்  நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சன் தொலைக்காட்சி செய்தியாளர் மணிகண்டன் உள்ளிட்ட சில பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். 
நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து காவல் துறை அராஜகமாக நடந்து கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செய்தியாளர்களை தடுக்கவோ, அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கவோ காவல் துறைக்கு எவ்வித உரிமையும் இல்லை. இப்படி சட்டத்தை மீறி எல்லை தாண்டி பயங்கரவாதிகள் போன்று காவல் துறை நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. 
இப்படி செய்தியாளர் களின் கடமையை தடுக்க காவல்துறை துடிப்பது ஏன்? இதற்கு பின்னணியில் யார் இயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. பேராசிரியை நிர்மலா தேவி பற்றிய செய்தி வெளியில் ஊடகங்களில் செய்தி வராத வண்ணம் தடுக்கும் முயற்சியில் காவல் துறை கராறாக நடந்து கொண்டது எல்லை மீறிய செயலாகும். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் என்ஜேயூ சார்பில் முறைப்படி புகார் கொடுக்கப்படும். பத்திரிகையாளர்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல. எவர் உத்தரவுக்கு பயந்து காவல்துறை ஏவல்துறையாக செயல்படுகிறது? என்ற கேள்விகளுக்கு காவல்துறைதான் பதில் தரவேண்டும். 
தொடர்ந்து தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமானதாக இருக்காது என்று தெரிவித்து கொள்கிறேன். பத்திரிகையாளர்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் காவல் துறை பதில் சொல்லியே ஆக வேண்டும்.
பத்திரிகையாளர்கள் என்ன சமூகவிரோதிகளா? சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டு வதுதான் பத்திரிகையின் வேலையாகும். இப்படி செய்தியாளர்களை கடமையை செய்விடாமல் தடுக்க காவல் துறைக்கு யார் அதிகாரம் வழங்கியது?. அத்துமீறி, எல்லை மீறி நடந்து கொண்ட காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய காவல் துறைத்தலைவர் ராஜேந்திரன் முன்வர வேண்டும். இந்த அதிரடி நடவடிக்கை மற்ற காவலர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். காவல்துறையே பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது வெட்ககேடான விஷயமாகும். 
காவல் துறையினர்தான் பத்திரிகையாளர்களை காப்பாற்ற வேண்டும். காவல் நிலையங்களில் காவல் துறை உங்கள் நண்பன் என்று ஏட்டளவில் எழுதி வைத்திருந்தால் மட்டும் போதாது, அதை நடைமுறையில் பின்பற்றி காவல் துறையினர் கண்ணியமாக நடந்து கொள்ள பழகி கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் என்பது இனி எங்கும் நடக்காதவாறு காவல் துறை தலைவர் ராஜேந்திரன் தமிழக காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பி பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று இதன் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன. இவ்வாறு நேஷ்னல் ஜர்னிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் நேற்று விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Label