OUR CLIENTS
வேலூர் மீன் மார்க்கெட்டில் முத்திரையிடப்படாத 54 மின்னணு தராசுகள் அதிரடியாக பறிமுதல்!
வேலூர் மீன் மார்க்கெட்டில் முத்திரையிடப்படாத 54 மின்னணு தராசுகள் அதிரடியாக பறிமுதல்! Posted on 16-Feb-2019 வேலூர் மீன் மார்க்கெட்டில் முத்திரையிடப்படாத 54 மின்னணு தராசுகள் அதிரடியாக பறிமுதல்!

வேலூர், பிப்.16-

வேலூர் மீன்மார்க்கெட்டில் முத்திரையிடப்படாத 54 மின்னணி தராசுகளை தொழிலாளர் துறையினர் அதிரடியாக நேற்றுமுன்தினம் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மீன்மார்க்கெட்டில் முத்திரையிடப்படாத எடை தராசுகளை வைத்து கொண்டு நுகர்வோரை ஏமாற்றி வியாபாரிகள் தொடர்ந்து கொள்ளை லாபம் பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி காலச்சக்கரம் நாளிதழில் காட்பாடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில் உள்ள அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் அழுகிய மீன்கள் விற்பனை செய்து வந்தது மற்றும் நுகர்வோரை ஏமாற்றி சில்லரை தராமல் அநாகரீமான வார்த்தைகளால் திட்டி வந்தது தொடர்பாக விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து உணவு கட்டுப்பாட்டு அலுவலர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து அந்த அப்து பிரதர்ஸ் மீன் அங்காடிக்கு நோட்டீஸ் வழங்கி, 5 கிலோ அழுகிய மீன்களையும் பறிமுதல் செய்து அழித்தார். 
இதன் எதிரொலியாக தொழிலாளர் துறையினர் விழித்து கொண்டு பணி செய்ய ஆரம்பித்தனர்.
இதனால் வேலூர் அசரத் மக்கானில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான மீன் அங்காடியில் நேற்று முன்தினம் மின்னணு தராசுகளை பரிசோதனை செய்தனர். அதில் 54 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் உத்தரவின் பேரில், தொழிலாளர் கூடுதல் ஆணையர் யாஸ்மின்பேகம், தமிழ்நாடு சட்டமுறை எடையளவு கட்டுப்பாடு அதிகாரி குமரன் ஆகியோரின் அறிவுரையின்படி, வேலூர் தொழிலாளர் இணை ஆணையர் மாதவன் உத்தரவின்பேரில், வேலூர் சட்டமுறை எடையளவு துணை கட்டுப்பாட்டு அலுவலரும், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரைமணாளன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று முன்தினம் வேலூர் அசரத் மக்கான் பகுதியில் செயல்படும் மாநகராட்சி மீன் அங்காடியில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் விதிகள் 2011ன் கீழ் தராசுகள் உரிய காலத்தில் முத்திரையிடப்பட்டுள்ளதா? என்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். 
இதில் உரிய காலத்தில் முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள், மேசை தராசுகள், விட்ட தராசுகள் மற்றும் எடை கற்கள் என்று மொத்தம் 54 தராசுகள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தொடர்ந்து வியாபாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு நுகர்வோருக்கு எடைகுறைவு ஏற்படாமல் இருக்க உரிய காலத்தில் மறுபரிசீலனை செய்து முத்திரையிடப்பட்ட தராசுகள் மற்றும் எடைகற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர். இவ்வாறு அந்த பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வளவு நாட்கள் நுகர்வோரை ஏமாற்றிய வியாபாரிகள் மீது கடும் நடவடிககையை தொழிலாளர் துறை எடுக்க வேண்டும். கொள்ளை லாபம் பார்த்து கொழித்துள்ளனர் மீன் வியாபாரிகள் என்று சொன்னால் அது மிகையாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இதுபோன்ற பரிசோதனைகளை அடிக்கடி ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் நடத்த வேண்டும் என்று இதுநாள் வரையில் வியாபாரிகளால் ஏமாற்றப்பட்ட நுகர்வோர் தரப்பில் ஒட்டுமொத்த கோரிக்கையாக விடுத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகமும் சுகாதார ஆய்வாளரும் இந்த மீன் மார்க்கெட்டில் சோதனை நடத்தி நுகர்வோரை காப்பாற்ற முன்வர வேண்டும். அதாவது மீன் என்ற பெயரில் கருவாடுகளை விற்பனை செய்த பணத்தை வாரி குவிக்கின்றனர் மீன் வியாபாரிகள் என்பதுதான் உண்மையாகும். இதை எந்த மீன் வியாபாரியும் மறுக்க முடியாது. 
நுகர்வோரை ஏமாளிகளாக நினைத்து கொண்டு தைரியமாக பஜாரில் வியாபாரம் செய்கின்றனர் என்றால் இவர்களுக்கு பின்புலமாக இருப்பவர்கள் யார்? என்பதை கண்டறிய வேண்டும். இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்ட 54 வியாபாரிகள் மீதும் தயவு தாட்சண்யமின்றி சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மீண்டும் அவர்கள் தொழில் நடத்த சான்றிதழ் அளிப்பதை நிறுத்த வேண்டும். புதியவர்களுக்கு முறையாக தொழில் நடத்த ஆர்வம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு கண்கட்டி வித்தை காண்பித்து பகல் கொள்ளையடித்து கொண்டுள்ள இதுபோன்ற மீன்வியாபாரிகள் மீது சட்டநடவடிக்கையை தயங்காமல் தொழிலாளர் துறையினர் எடுக்க வேண்டும். இது வெறும் கண் துடைப்புக்காக நடந்த பரிசோதனையாக இருக்க கூடாது என்பதுதான் நுகர்வோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தொழிலாளர் துறையினரின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label