சவுதி இளவரசருக்கு தங்க துப்பாக்கி வழங்கிய பாகிஸ்தான் எம்.பி.க்கள் Posted on 20-Feb-2019
இஸ்லாமாபாத், பிப்.20-
பாகிஸ்தானுக்கு வருகை தந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பாகிஸ்தான் எம்பிக்கள் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியினை பரிசாக வழங்கினர்.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அவரது அழைப்பின் பேரில் சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, இருநாடுகளுக்கு இடையில் சுமார் 2 ஆயிரம் கோடி டாலர் அளவிலான 8 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
மேலும் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வியை சவுதி இளவரசர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிபர் ஆரிப் ஆல்வி, பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய ‘நிஷான் இ பாகிஸ்தான்’ விருதினை சவுதி இளவரசருக்கு வழங்கி கவுரவித்தார். அதன்பின்னர் பாகிஸ்தான் செனட் சபை உறுப்பினர்கள் சார்பில், தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று சவுதி இளவரசருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இது ஹெக்லர் அண்ட் கோச் எம்பி5கே ரக துப்பாக்கி ஆகும். இஸ்லாமாபாத்தில் இளவரசர் தங்கியிருந்த குடியிருப்புக்குச் சென்று பாகிஸ்தான் செனட் சபை தலைவர் சாதிக் சஞ்ரானி இந்த பரிசை வழங்கியுள்ளார்.