OUR CLIENTS
வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் துறையினர் ஆன்லைன் உணவு டெலிவரி பனியன் அணிந்து செல்வோரை சோதிக்காதது ஏன்?
வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் துறையினர் ஆன்லைன் உணவு டெலிவரி பனியன் அணிந்து செல்வோரை சோதிக்காதது ஏன்? Posted on 21-Feb-2019 வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் துறையினர் ஆன்லைன் உணவு டெலிவரி பனியன் அணிந்து செல்வோரை சோதிக்காதது ஏன்?

வேலூர், பிப்.21-

வேலூரில் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல் துறையினர் ஆன்லைன் உணவு டெலிவரி யூனிபார்ம் பனியன் அணிந்து செல்வோரை ஒரு நாளும் நிறுத்தி சோதிக்காதது பெருத்த சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லை பகுதிகளை அடக்கியுள்ளது. இதனால் வாகன தணிக்கை செய்து வருகின்றனர் காவல் துறையினர். அவர்களது பணி பாராட்டுக்குரியது. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இரவில் கண்விழித்து கடும் பனி, மழை எதையும் பொருட்படுத்தாமல் காவல் துறையினர் கடமையை செய்து வருகின்றனர். ஆனால் உள்ளூர் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களை காட்டிலும் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றும் ஆயுதப்படை பிரிவு போலீஸ்காரர்கள்தான் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் மிரட்டி பணம் வசூலித்து வருகின்றனர். இது ஒருபுறம் நட்டநடு ரோட்டில் நடந்து வருகிறது. இதை கண்கூடாக தினமும் பார்க்கலாம். அத்துடன் நெல் அறுக்கும் அறுவடை இயந்திரங்கள் சென்றால் போதும் கண்கொத்தி பாம்பு போல பார்த்து அந்த வாகனங்களை விரட்டிச் சென்று வசூல் வேட்டை நடத்துகின்றனர். காய்கனி லோடு ஏற்றிச் செல்லும் வாகனங்களும் இவர்கள் கழுகு பார்வையில் இருந்து தப்புவதில்லை என்றே கூறலாம்.
நிலைமை இப்படி இருப்பதற்கு காரணம் காவல் துறையில் உள்ள உயரதிகாரிகள் பல கூட்டங்களை காவல் துறையினருக்காக நடத்துகின்றனர். ஆனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்க கூடாது என்று ஒரு கூட்டத்தில் கூட காவல் துறை உயரதிகாரிகள் வலியுறுத்தி சொல்லியது இல்லை என்றே காவல் துறையில் பணியாற்றுவோர் கூலாக கூறுகின்றனர். இத்துடன் இரவு நடைபெறும் வாகன தணிக்கையின் போது பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை கூட வாகன தணிக்கைக்கு சில நேரங்களில் உட்படுத்தப்படுகின்றன. அதேபோன்று போலீஸ், காவல், வழக்குரைஞர், ஆர்மி, எக்ஸ் ஆர்மி, மருத்துவர், பொறியாளர், நீதிமன்றம், ரயில்வே என்று பல வகையான ஸ்டிக்கர்கள் ஒட்டிக் கொண்டு வாகனங்கள் உலா வருகின்றன. இவர்கள் உண்மையில் அந்தந்த துறைகளில் பணியாற்றுகின்றனரா? அவர்களது அடையாள அட்டைகளை காவல் துறையினர் ஒருநாளும் வாங்கி பார்ப்பதே இல்லை. ஆர்சி புத்தகம் உள்ளதா?, இன்சூரன்ஸ் உள்ளதா?, ஓட்டுநர் உரிமம் உள்ளதா? என்று கேட்கிறார்களே தவிர வேறெதையும் கேட்பது இல்லை. இல்லையென்றால் பணம் கொடு என்று வாகனத்தின் சாவியை பறித்து கொண்டு பேரம் பேசுகின்றனர். இதுதான் அன்றாடம் நடைபெறும் வாகன தணிக்கையின் உண்மையான கள நிலவரமாகும். 
ஆனால் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றும் தூக்கு தூக்கிகள் நள்ளிரவு 12 மணி வரையில் முதுகில் ஒரு பெரிய பெட்டியை சுமந்தபடி ஆன்லைன் உணவு டெலிவரி யூனிபார்ம் டி ஷர்ட் அணிந்தபடி மாநகரில் வலம் வருகின்றனர். இவர்கள் மீது ஒரு போலீசாருக்கு கூட சந்தேகம் வரவில்லையே என்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது. 
அவர்கள் அந்த பெட்டியில் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பதை காவல் துறையில் பணியாற்றும் ஒருவர் கூட இதுநாள் வரையில் அலசி ஆராய்ந்து பார்த்ததே இல்லை. ஆன்லைன் உணவு டெலிவரி யூனிபார்ம் பனியனை அணிந்து கொண்டு பல இளைஞர்கள் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆன்லைன் உணவு டெலிவரி  நிறுவனத்தில் பணியாற்றாதவர்கள் கூட அந்த லேபிளை பயன்படுத்தி கொண்டு எளிதில் இதுபோன்ற கடத்தல் பணிகளில் ஈடுபடுகிறார்களாம். அவர்களை நன்கு உற்றுநோக்கினாலே போதும் உண்மையானவர்கள், போலியானவர்களை அடையாளம் காணலாம். பொதுமக்களுக்கே தெரியும்போது போலீசாருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
ஸ்காட்லாந்து போலீசாருக்கு அடுத்தபடியாக உலக அளவில் தமிழ்நாட்டு போலீசார் பெயர் பெற்றுள்ளனர். இந்த விஷயத்திலும் துப்பு துலக்காமல் போய்விடுவார்களா என்ன?. வாகன தணிக்கை மட்டுமன்றி இரவு ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபடுகின்றனர். இரவு 11 மணிக்கு மாநகர பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஹோட்டல்கள் அடைக்கப்பட்டு விடுகிறது. இந்த ஆன்லைன் உணவு டெலிவரி யூனிபார்ம் உணவு கொண்டு செல்லும் தூக்கு தூக்கிகள் நள்ளிரவு 12 மணிக்கு மேலும் உலா வருவதை வேடிக்கை பார்ப்பதை போலீசார் வழக்கமாக கொண்டுள்ளனர். அது ஏன் என்ற சந்தேகத்தை மேலும் பொதுமக்களிடம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுபோன்ற இளைஞர்கள் ஆன்லைன் உணவு டெலிவரி  நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போதை பொருட்கள் கடத்துவது, திருடுவது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனரா? என்ற சந்தேகம் மேலும் வலுக்கத் தொடங்கியுள்ளது.  இவர்களை காவல் துறையினர் நெருக்கமாக கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. காவல் துறையினரின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label