OUR CLIENTS
வேலூரில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க வரன்முறை அரசியல் கட்சியினருடன் எஸ்.பி. திடீர் கலந்தாய்வு!
வேலூரில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க வரன்முறை அரசியல் கட்சியினருடன் எஸ்.பி. திடீர் கலந்தாய்வு! Posted on 22-Feb-2019 வேலூரில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க வரன்முறை அரசியல் கட்சியினருடன் எஸ்.பி. திடீர் கலந்தாய்வு!

வேலூர், பிப்.22-

சாலை ஓரங்களில் விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் அமைப்பதை வரன்முறை செய்வது தொடர்பான அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலை ஓரங்களில் விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் அமைப்பதை வரன்முறை செய்வது தொடர்பான அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்ததாவது: சென்னை உயர்நீதிமன்ற வழக்கு நீதிப்பேராணை எண்.33819/2018-இன் 19.12.2018ஆம் நாளிட்ட தீர்ப்புரையில் தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறையினர் இந்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பல்வேறு தீர்ப்புரைகளில் சுட்டிக்காட்டப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் தொடர்புடைய அரசு விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும், கண்காணிக்கவும் வேண்டும் (அல்லது) தமிழ்நாடு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் இதர போக்குவரத்துகள் உள்ளிட்ட சாலையை பயன்படுத்துபவர்களை திசை திருப்பக் கூடிய மற்றும் பாதசாரிகளுக்கு தடையாக இருக்கக்கூடிய வகைகளில் பிரதான சாலைகளின் இருபுறங்கள், நடைபாதைகள், சாலைகளின் நடுவில், பெரிய சாலைகள் ஆகியவற்றில் எந்தவொரு டிஜிட்டல் பேனர்களை/ சுலோக பதாகைகளையோ எதிர்காலத்தில் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் நிறுவக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு டிஜிட்டல் பேனர்கள், சுலோக பதாகைகள் ஆகியவற்றை நிறுவ மாண்பமை நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும்வரையில் அனுமதி வழங்கக் கூடாது எனவும், மேற்படி சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின் அடிப்படையில் கீழ்கண்ட விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மனுதாரரும் டிஜிட்டல் பேனர்கள், சுலோக பதாகைகள், தட்டிகள் வைக்க தனியார் இடமானால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளிடமிருந்தோ அல்லது அரசு இடமானால் சம்பந்தப்பட்ட அரசு துறையினரிடமிருந்தோ ஆட்சேபணையில்லா சான்று பெற்றும் மற்றும் காவல் துறையினரின் தடையில்லா சான்று பெற்றும், அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட கூட்டு வரைபடத்துடன் படிவம் -1ல் அனுமதி கோரும் இரண்டு தினங்களுக்கு முன்பாக மனு செய்யவேண்டும். ஒவ்வொரு மனுதாரரும் படிவம் -1 உடன் அனுமதி கட்டணத்தை விதிமுறைகளின் படி செலுத்தியதற்கான சலான் நகல் இணைக்கப்படவேண்டும்.
10 அடிக்கும் குறைவான நடைபாதையை கொண்ட சாலையில் டிஜிட்டல் பேனர்கள், சுலோக பதாகைகள் ஆகியவற்றை நிறுவ அனுமதிக்கக்கூடாது. சாலை தனியாக நடைபாதையில்லாமல் இருப்பின் சாலை விளிம்புகளுக்கிடையே 10 அடி பாதசாரிகளுக்கானதாக கொண்டு பேனர்கள் வைப்பதை முறைப்படுத்த வேண்டும். 
கல்வி நிறுவனங்கள், மதவழிப்பாட்டு தலங்கள் மற்றும் மருத்துவமனைகள், சாலைகளின் முனைகள், 100 மீட்டர் அளவுக்குள் உள்ள சாலை சந்திப்புகள், அங்கீகரிக்கப்பட்ட நினைவு சின்னங்கள், சிலைகள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பிற இடங்களில் விளம்பரப்பலகைகள், மேலாக பதாகைகளை நிறுவக்கூடாது. மனுதாரர் அனைத்து விதிகளையும் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் அனுமதியில்லாத மற்றும் சட்ட விரோதமான டிஜிட்டல் பேனர்கள், சுலோக பதாகைகள் பற்றி அவை அமைக்கப்பட்டிருக்கும் எல்லைக்குட்பட்ட உள்ளாட்சி அலுவலர், காவல் ஆய்வாளருக்கு புகார் தெரிவிக்கலாம். விதிகளை மீறி நடந்துக்கொள்பவர்கள் மீது சட்டத்தின்படி ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது ரு.5000- அல்லது இரண்டும் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எந்தவொரு டிஜிட்டல் பேனர்கள், சுலோக பதாகைகளும் ஆறு தினங்களுக்கு மேல் முன் அனுமதி பெறாமல் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். அனுமதி பெற்று விளம்பரப் பலகைகள் வைக்கும் நபர் விளம்பரப்பலகையின் அடிப்புறத்தில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி எண், நாள், செல்லுபடியாகும் கால அளவு, விளம்பரப் பலகையின் அனுமதிக்கப்பட்ட அளவு ஆகியவற்றை குறிப்பிட்டு காட்ட வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டு காட்டப்படாவிட்டால் மேற்படி சட்டவிரோதமானதாக கொள்ளப்பட்டு, அப்புறப்படுத்தப்படும்.
மேலும், டிஜிட்டல் பேனரின் அடிப்புறத்தில் அச்சிட்ட அச்சகத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அனுமதியற்றதாகவும், சட்டவிரோதமானதாகவும் கொள்ளப்படும். அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் சுலோக அட்டைகள் வைப்பது தொடர்பான விதிமுறை மீறல்களுக்கு காவல் துறை மூலம் தகுந்த குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர்நீதி மன்றத்தால் தகுந்த வழிகாட்டுதல் வழங்கி இருப்பினும், நாளது தேதிவரையில் வேலூர் மாவட்டத்தில் மேற்படி பொருள் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பதால், இனிவரும் காலங்களில் தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பெரியசாமி, சார் ஆட்சியர்கள் (வேலூர்) மெகராஜ், (இராணிப்பேட்டை) இளம்பகவத், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் மற்றும் அரசியல் கட்சியினர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

Label