OUR CLIENTS
வேலூர், காட்பாடி பகுதியில் களையிழந்த ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா!
வேலூர், காட்பாடி பகுதியில் களையிழந்த ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா! Posted on 25-Feb-2019 வேலூர், காட்பாடி பகுதியில் களையிழந்த  ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா!

வேலூர், பிப்.25-

வேலூர், காட்பாடி பகுதியில் களையிழந்து காணப்பட்டது ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா. இதற்கு காரணம் நிர்வாகிகள் சுணக்கத்துடன் காணப்படுவதாக ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

வேலூர் மாவட்டத்தில் அதிமுக எழுச்சியோடு இருந்ததை பொதுமக்கள் கண்கூடாக கண்டுள்ளனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அதிமுக நிறுவனரும், மறைந்த பாரத ரத்னா புரட்சித்தலைவர், பொன்மனச் செல்வன் டாக்டர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா எழுச்சியோடும், வெகு விமரிசையாகவும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்தபோது முன்னாள் அதிமுக அமைச்சரும், வேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான டாக்டர் வி.எஸ்.விஜய் காலை முதல் மாலை வரை இடைவிடாது பிரியாணி விருந்து கொடுத்து அதிமுகவினர் மட்டுமன்றி பொதுமக்களையும் திக்குமுக்காடச் செய்தார். ஆனால் அவரே நேற்று நடந்த ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாள் விழாவை விமரிசையாக கொண்டாட மறந்ததின் பின்னணி என்ன என்பது புரியாத புதிராக உள்ளது. இதற்கு காரணம் ஜெயலலிதா தனக்கு மீண்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேலூர் தொகுதியில் வாய்ப்பு தரவில்லை என்பதா? அல்லது அமமுகவுக்கு சென்று மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியதாலா என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது. இவருக்கும், அமைச்சர் வீரமணிக்கும் இடையே ஏழாம் பொருத்தம் இருப்பதாக அதிமுகவினர் இடையே பேச்சு பரவலாக நீண்ட காலமாக அடிபடுகிறது. அமைச்சராக இருப்பவரிடம் முன்னாள் அமைச்சர் முரண்டு பிடித்ததாலும், முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த விஜய், வன்னியர் இனத்துடன் மோதியதாலும் இந்த நிலையை அவர் சந்திக்க வேண்டியுள்ளது என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஜெயலலிதா பிறந்த நாள் விழா வேலூரில் களையிழந்தது. பகுதி செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள் மற்றும் ஜெயலலிதாவால் பதவி சுகம் அடைந்தவர்கள் இன்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஒப்பந்தப் பணிகள் எடுத்து பல கோடிகளை சுருட்டியவர்கள் ஒருவரை கூட காணவில்லை. பெயரளவுக்கு ஒரு சிலர் அதாவது கடமைக்காக டிஜிட்டல் பேனர்கள் மட்டும் வைத்து விட்டு சென்றுள்ளனர். அதுவும் தங்கள் பெயரை  எந்த அணியில் தாங்கள் உள்ளோம் என்பதை காட்டும்படியாகவே அவைகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று எந்த விழா என்றாலும் எப்படி எம்ஜிஆர் படம் ஸ்டாம்ப் சைஸ் அளவில் இடம்பெறுகிறதோ அதே நிலைமை இன்று ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வேலூர் தொகுதியில் ஜெயலலிதாவால் பதவி சுகம் அனுபவித்தவர்கள் அந்த நன்றி விசுவசாசத்துக்கு கூட பிரமாண்டமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய மறந்து விட்டனரா அல்லது புறக்கணித்து விட்டார்களா என்பதே விடை தெரியாத கேள்வியாக ரத்தத்தின் ரத்தங்கள் மனதில் நெருடலாக இருந்து வருகிறது. அன்னதானம் இல்லை, நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தொகுதியில்தான் இந்த நிலை என்றால் காட்பாடி தொகுதியைப் பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டும். வேலூரை காட்டிலும் மிகவும் மோசமான நிலையில் விரல் விட்டு எண்ணும் அளவில் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு ஒன்றிரண்டு டிஜிட்டல் பேனர்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளா இப்படி உருண்டோடுகிறது என்று எண்ணும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இங்கும் வடக்கு, தெற்கு பகுதி செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள் இன்னும் பிற அணி நிர்வாகிகள் உள்ள பகுதி. வட்ட செயலாளர்கள் என்று ஆங்காங்கே இருந்தபோதும் ஜெயலலிதா பிறந்த நாள் களையிழந்து உற்சாகமின்றி நகர்ந்தது குறிப்பிடத்தக்கது. பதவி சுகம் அனுபவித்தவர்கள் பதவி கொடுத்த தலைவியை மறந்து விட்டனர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது காவிரி தாயே, சிங்கத்தலைவி, புரட்சித் தலைவி, தங்கத்தாரகை என்றெல்லாம் வர்ணித்து பிறந்த நாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். காட்பாடி ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார் பொறுப்பு வகித்தபோது மட்டுமே சித்தூர் பேருந்து நிலையத்தில் நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். காலையில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்றவற்றில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அத்துடன் காலை முதல் மாலை வரை பல நிகழ்ச்சிகள் இடைவிடாது நடைபெறும். ஆனால் அவர் மறைந்தார், அவருக்காக நடத்திய பிறந்தநாள் கொண்டாடட்டங்களும் சுவடு தெரியாமல் மறைந்துபோயின. நன்றி கெட்ட மானிடர்களாக உள்ளனர் என்று அம்மாவின் உண்மை விசுவாசிகள்  நெஞ்சம் பொறுக்க முடியாமல் சொல்லி சொல்லி புலம்பித் தீர்க்கின்றனர். அதாவது ஜெயலலிதாவை மறந்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் பின்னால் ஜால்ரா அடிக்க சென்று விட்டனர் என்று எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். காரியவாதிகளாக உள்ளவர்கள் எல்லாம் பொறுப்பு வகிக்கின்றனர். உண்மையான கட்சி தொண்டர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். இதுதான் காட்பாடியில் நிலவும் உண்மை நிலவரமாகும். அதிமுகவில் இருந்து விலகி அமமுக டிடிவி தினகரன் பின்னால் சென்றவர்கள் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளனர் என்று சொன்னால் அது மிகையாகாது. காட்பாடி நகரம் முழுவதும் அமமுக பேனர்கள் அலங்கரித்தன என்பது குறிப்பிடத்தக்கது. உணர்வு இல்லாமல் செயல்படும் அதிமுகவினரை இப்படி பதவி சுகத்துக்காக மட்டும் கொண்டு செயல்படுவவர்களை தெரியாமல் நியமித்து விட்டாரோ ஜெயலலிதா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இதே நிலை நீடித்தால் எம்ஜிஆர், ஜெயலலிதா அதிமுகவில்தான் இருந்தார்களா? என்று கேள்வி கேட்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுவிடுவார்கள் இந்த நிர்வாகிகள் என்றுதான் சொல்ல வேண்டும். அதிமுகவால் தாங்கள் சம்பாதித்த பணத்தை வாரியிறைக்க தயங்கும் நிலைக்கு அதிமுகவினர் வந்துவிட்டனர். நன்றி மறந்தவர்கள் நிர்வாகிகளாக இருக்கிறார்களே என்று அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் சொல்லி சொல்லி ஆதங்கப்படுகின்றனர். இதை அதிமுக தலைமை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Label