OUR CLIENTS
அயோத்தி விவகாரம் மத்தியஸ்தர் மூலம் மீண்டும் சமரச முயற்சி உச்சநீதிமன்றம் அறிவிப்பு
அயோத்தி விவகாரம் மத்தியஸ்தர் மூலம் மீண்டும் சமரச முயற்சி உச்சநீதிமன்றம் அறிவிப்பு Posted on 26-Feb-2019 அயோத்தி விவகாரம்   மத்தியஸ்தர் மூலம் மீண்டும் சமரச முயற்சி  உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி, பிப்.26-

அயோத்தியா ராமஜென்ம பூமி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 3 தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் சார்பில் மத்தியஸ்தர் நியமிப்பது தொடர்பாக மார்ச் 5ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

அயோத்தியாவில் ராமஜென்ம பூமி எனப்படும் சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்றது.  விசாரணையின் முடிவில் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 8 வாரங்களுக்கு பின் நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர். 
இதற்கிடையில் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் 6 வாரங்களுக்குள் மொழிபெயர்க்கப்பட்டு சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை மனுதாரர்கள் பரிசீலித்து 8 வாரங்களுக்கு பின் தங்கள் ஆட்சேபணைகளை முன்வைக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் அயோத்தியா ராமஜென்ம பூமி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு எட்டப்படுவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை கண்டறிய விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மிகவும் சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய ஒரு சதவீதம் வாய்ப்பிருந்தாலும் அதை முயற்சித்து பார்க்க விரும்புவதாக அரசியல் சாசன அமர்வு கூறியது. எனவே ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நீதிமன்றம் சார்பில் மத்தியஸ்தர் நியமிப்பது தொடர்பாக வரும் மார்ச் 5ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் அறிவித்தனர்.
நீதிபதிகளின் இந்த முடிவுக்கு சில முஸ்லிம் தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் ராம் லாலா விராஜ்மான் உள்ளிட்ட சில இந்து தரப்பினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.  இதற்கு முன் மத்தியஸ்தர் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளன என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். மீண்டும் மத்தியஸ்தர் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என தெரிவித்தனர்.   முஸ்லிம் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானும் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி முன்பு மத்தியஸ்தர் ஒருவரை நியமித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் வெற்றி பெறவில்லை என்பதை குறிப்பிட்டார். 
இதற்கு பதிலளித்த நீதிபதிகள் ‘‘பல வருடங்களாக நீடிக்கும் இந்த வழக்கு வெறும் நிலத்திற்கான உரிமை கோரும் விவகாரம் என நினைக்கிறீர்களா? நிலத்திற்காக மட்டுமே உரிமை கோரும் வழக்கு என்றால் அதை பற்றி நீதிமன்றத்தால் முடிவெடுக்க முடியும்’’
ஆனால் சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தால் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மனகசப்புகளை சீர்செய்து உறவுகளை மேம்படுத்த உச்சநீதிமன்றம் விரும்புகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Label