OUR CLIENTS
தீவிரவாதத்திற்கு எதிராகத்தான் போர், மதத்திற்கு எதிராக அல்ல: சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு
தீவிரவாதத்திற்கு எதிராகத்தான் போர், மதத்திற்கு எதிராக அல்ல: சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு Posted on 02-Mar-2019 தீவிரவாதத்திற்கு எதிராகத்தான் போர், மதத்திற்கு எதிராக அல்ல: சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு

அபுதாபி, மார்ச் 2-

தீவிரவாதத்துக்கு எதிரான இந்த போர், எந்தவொரு மதத்துக்கும் எதிரானது அல்ல என இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அபுதாபியில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உட்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இஸ்லாமிய நாடுகளிடையே ஒத்துழைப்பு, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ்,”பிரதமர் நரேந்திர மோடி, 18.5 கோடி முஸ்லிம் சகோதர சகோதரிகள் உட்பட 130 கோடி இந்திய மக்களின் வாழ்த்துக்களுடன் நான் இங்கு வந்துள்ளேன். எங்கள் முஸ்லிம் சகோதர சகோதரிகள் பன்முகத்தன்மை கொண்டவர்கள். கடந்த 4 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாமல், மேற்காசியாவின் வளைகுடா பகுதியுடன் எங்கள் உறவு, செயல்பாடுகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வரலாறு திரும்புகிறது. நமது நாடுகளில் பலவும் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கருப்பு நாட்களை சந்தித்தவை.
சுதந்திரத்துக்கு பிறகு ஒற்றுமை, நீதி, மரியாதை, வளம் கொண்ட நாடாக மாறிவருகிறோம். தீவிரவாதம் பல்வேறு பெயர்களில் வலம் வருகின்றன. தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களுமே அமைதியை போதிக்கின்றன. இஸ்லாம் மதமும் அப்படி தான். கடவுள் என்பது ஒருவர் தான். ஆனால் பாதைகள் தான் வேறானவை. அல்லாவின் 99 பெயர்களும் அமைதியை மட்டுமே வெளிபடுத்துகின்றன. வன்முறைகளை போதிக்கவில்லை” என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முஹம்மது குரேஷி அரங்கத்துக்கு இன்று வராமல் புறக்கணித்ததால் அவருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கை காலியாக கிடந்தது.
சுஷ்மா ஸ்வராஜை சந்திப்பதை தவிர்க்கவும், தர்மசங்கடமான சூழல் ஏற்படாமல் இருக்கவுமே பாகிஸ்தான் தரப்பில் இருந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. எனினும், பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Label