OUR CLIENTS
வேலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
வேலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! Posted on 04-Mar-2019 வேலூர் மாவட்டத்தில் குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

வேலூர், மார்ச் 4-

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 அடி வரை நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து, மாநில நில மற்றும் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக 3,280 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,559 ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, தேனி, தூத்துக்குடி ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 
வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதில், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்துடன் இந்தாண்டு பிப்ரவரி மாதம் ஒப்பிடும்போது 10 அடி வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.இதுகுறித்து நில மற்றும் நீர்வள ஆதார பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்தாண்டு பருவமழை பொய்த்தாலும், நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்ததாலும் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் 19 அடியில் கிடைத்த நிலத்தடி நீர், இந்தாண்டு பிரப்வரி மாத ஆய்வின் போது 29.5 அடியில் கிடைக்கிறது. 
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாத ஆய்வில் 12 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் மட்டம், இந்தாண்டு பிப்ரவரி மாதம் 25 அடியில் கிடைக்கிறது.கடந்தாண்டு எதிர்பார்த்த அளவு வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. மேலும் கோடைகாலம் தொடங்க உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு பின்னணியில் மழை இல்லாததது ஒரு காரணம் அல்ல, நிலத்தடி நீரை மினரல் வாட்டர் தயாரிப்பு என்று சொல்லிக் கொண்டு நிலத்தடி நீரை உறிஞ்சி 1 லிட்டர் நன்னீருக்காக 3 லிட்டர் நீர் வீணாக வெளியேற்றப்படுகிறது. இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மௌனம் காக்கின்றனர். அதாவது டேங்கர் லாரிகள், டிராக்டர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வியாபாரம் செய்கின்றனர். இதனால் நிலம் வைத்துள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற பிரச்னைகள் இருப்பது அதிகாரிகளுக்கு  தெரிந்தும் கண்டும் காணாமல் இருக்கின்றனர். இதற்கு பின்னணியில் 'ப'வைட்டமின் வேலை செய்கிறது என்ற அப்பட்டமான தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் வேளாண் துறையினர் என்னதான் பணியாற்றுகின்றனர் என்பது தெரியவில்லை. குடிப்பதற்கே தண்ணீர் பஞ்சம் ஏற்படும் பேராபத்து நம்மை தேடி வந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Label