OUR CLIENTS
அமேதியில் அதிநவீன துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலைக்கு மோடி அடிக்கல் நாட்டினார்
அமேதியில் அதிநவீன துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலைக்கு மோடி அடிக்கல் நாட்டினார் Posted on 04-Mar-2019 அமேதியில் அதிநவீன துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலைக்கு மோடி அடிக்கல் நாட்டினார்

லக்னோ, மார்ச் 04-

ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதியான அமேதியில் அதிநவீன துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அந்த தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளராக அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார்.
அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அமேதியில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. தனது பாராளுமன்ற தொகுதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்தி வருவதாக ராகுல் காந்தி அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதியான அமேதியில் ரஷியா நாட்டின் தொழில்நுட்ப கூட்டுறவுடன் அதிநவீன துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன் முன்னிலையில் அவர் அடிக்கல் நாட்டினார். 
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டை முன்னர் ஆட்சி செய்தவர்கள் நமது ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவத்துக்கான தேவைகள் மீது அக்கறை செலுத்தவில்லை. ரபேல் போர் விமானம் வாங்க பேரம்பேசி, பேரம்பேசி அந்த திட்டத்தையே அவர்கள் கிடப்பில் போட்டு விட்டனர் என்று குற்றம்சாட்டினார்.
இந்த தொழிற்சாலையில் அதிநவீன AK-203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும். அந்த துப்பாக்கிகளில் ‘மேட் இன் இந்தியா’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும். உள்நாட்டில் உற்பத்தியாகும் இந்த துப்பாக்கிகளை வைத்து நமது எதிரிகளையும், பயங்கரவாதிகள், நக்சலைட்களையும் இனி நமது வீரர்கள் வேட்டையாடுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இங்கு எங்களால் வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும், அமேதி மக்களின் இதயங்களை நாங்கள் வென்றிருக்கிறோம். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. செய்த பணிகளை காட்டிலும் அமேதியில் அதிக திட்டங்களை மத்திய மந்திரி ஸ்மிருதி நிறைவேற்றி வைத்துள்ளார்.
நாங்கள் செய்திருக்கும் பணிகளில் உங்களுக்கு திருப்தி இல்லையா? நாங்கள் உங்கள் மீது அக்கறை வைத்து உங்களது நல்வாழ்வுக்காக நேர்மையான முறையில் உழைக்கவில்லையா? நாங்கள் உங்களுக்கு ஏதாவது அநீதி செய்திருக்கிறோமா? என்பதை இங்குள்ள மக்கள்தான் கூற வேண்டும்.
எங்களுக்கு வாக்களித்தவர்கள் ஆகட்டும், வாக்களிக்காதவர்கள் ஆகட்டும். அனைவருமே எங்கள் மக்கள்தான். ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ (அனைருடனும்-அனைவருக்காகவும்) என்னும் எங்கள் அரசின் தாரகமந்திரத்தின் அர்த்தத்தை எங்கள் ஆட்சி பாகுபாடின்றி நிறைவேற்றி வருகிறது என்றும் மோடி தெரிவித்தார்.

Label