OUR CLIENTS
வேலூர் மாவட்டத்தில் தரமற்ற குடிநீர் கேன்கள், பாக்கெட்டுகள் விற்பனை!
வேலூர் மாவட்டத்தில் தரமற்ற குடிநீர் கேன்கள், பாக்கெட்டுகள் விற்பனை! Posted on 09-Mar-2019 வேலூர் மாவட்டத்தில் தரமற்ற குடிநீர் கேன்கள், பாக்கெட்டுகள் விற்பனை!

வேலூர், மார்ச் 9-

வேலூர் மாவட்டத்தில் தரமற்ற குடிநீர் கேன்களை தாராளமாக பல நிறுவனங்கள் தாராளமாக விற்பனை செய்து வருகின்றன. இதை தடுக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளனர்.

 வேலூர் மாவட்டத்தில் தரமற்ற குடிநீர் கேன்களை விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வேலூரில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால் குடிநீர் கேன்கள் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இதை பயன்படுத்தி போலி குடிநீர் கேன் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக வேலூர் மாவட்ட குடிநீர் கேன் உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 65 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையங்களிலிருந்து வெளியே வரும் குடிநீர் கேன்களில் தயாரித்த தேதியும், காலாவதி தேதியும் குறிப்பிட வேண்டும். முறையாக அனுமதி பெற்றே குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட லேபிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருவரின் பெயரில் அனுமதி பெற்றுவிட்டு வேறு ஒருவர் பயன்படுத்த கூடாது. இதன் மூலம் போலி குடிநீர் கேன் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது.
குறிப்பாக ஆந்திராவில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு குடிநீர் கேன்கள் விற்பனைக்கு கொண்டுவரும் போதும் அதற்கான ரசீது பெற்றுக் கொண்டும், அதற்கான சான்றிதழ் ஜெராக்ஸ் வாகனத்தில் இருக்க வேண்டும். வெளிமாநிலத்தில் குடிநீர் கேன்களின் விலை சற்று குறைவாக கிடைப்பதால் அங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. அது பதிவு செய்யப்பட்ட சுத்தகரிக்கப்பட்ட குடிநீரா என்பதை முதலில் அறிந்து அதை வாங்க வேண்டும். மேலும் ஒவ்வொரு உரிமையாளரும் தங்களது குடிநீர் கேன்களில் வேறு நிறுவனத்தின் லேபிள் இடம் பெற அனுமதிக்கூடாது. கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படும். மேலும் சுத்திகரிக்கப்படாத போலி குடிநீர் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதியின்றி குடிநீர் கொண்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்தும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் நடைமுறையில் அப்படி கேன்கள் விற்பனை செய்யப்படவில்லை. கோடை தொடங்கியதும் கேன்களின் விற்பனை மும்மடங்காக உயர்ந்துள்ளது. அந்த கேன்கள் அழிக்கப்பட வேண்டியவற்றை கூட மீண்டும் தண்ணீர் அடைத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் பலே கில்லாடி வியாபாரிகள். பொதுமக்களை ஏமாளிகளாக நினைத்து விட்டனர் இந்த கேன் வியாபாரிகள். பல நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு கேன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. உண்மையில் அந்த நிறுவனத்தின் தண்ணீர்தானா என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பல இடங்களில் சாலையோரம் குடிநீர் குழாய்களில் வரும் தண்ணீரை அடைத்து மினரல் வாட்டர் கேன்கள் என்று விற்பனை செய்து வருகின்றனர்.
 வாட்டர் பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்டும் இதுநாள் வரை அமோகமாக காட்பாடி, வள்ளிமலை ரோட்டில் பள்ளிக்குப்பம் கேட் வரையில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர் தில்லாலங்கடி வியாபாரிகள். இதை ஒருநாள் கூட மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்ததாக எந்த ஒரு தகவலும் இல்லை. 
சோதனை செய்யாமல் வாய்ச்சொல்லில் வீரனடி என்பது போன்று வெற்று அறிக்கை விட்டுக் கொண்டு இருப்பதால் என்ன பயன் அளிக்கப் போகிறது. அரசு ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தடை செய்து உத்தரவிட்டது. அந்த ஒரு வாரம் மட்டும் ஜனவரி மாதம் சோதனை நடந்தது. அதற்கு பிறகு இதுநாள் வரை எந்த சோதனையும் நடந்ததாக தகவல்கள் ஏதும் இல்லை என்றே சொல்லலாம். 
பிளாஸ்டிக் கேன்களில் நீண்ட நாட்களாக தண்ணீர் அடைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்வதால் இதை வாங்கி உபயோகிக்கும் நுகர்வோருக்கு வயிற்று உபாதைகள், குடல் வால்வு வளருதல் போன்ற கொடிய நோய்கள் உருவாக வாய்ப்பு ஏற்படுகிறது. இது தெரிந்தும் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டிய அதிகாரிகள் நமக்கென்ன என்று அமைதி காப்பது எதற்கு என்றுதான் தெரியவில்லை. அதாவது பொதுநலம் குறைந்து சுயநலம் அதிகரிக்க தொடங்கிவிட்டதை இது காண்பிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதிகாரிகளை பார்த்தால் வியாபாரிகள் அஞ்சி நடுங்க வேண்டும். ஆனால் பயமின்றி வியாபாரிகள் இருப்பதன் பின்னணியில் ÔபÕ வைட்டமின் புகுந்து விளையாடுவதுதான் என்று வெட்டவெளிச்சமாக தெரியவருகிறது. 
அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை என்று தொடங்குகிறார்களோ அன்றுதான் நுகர்வோர் காப்பாற்றப்படுவார்கள். தில்லு முல்லு செய்து தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபடும் சில வியாபாரிகளின் கொட்டமும அடங்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற போலி மினரல் வாட்டர் கேன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் மாவட்ட நிர்வாகமும் இதில் தனிக்கவனம் செலுத்தவேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Label