OUR CLIENTS
வேலூர் தொகுதியில் சொகுசு வேட்பாளர்கள் உங்கள் ஓட்டு முதலியாருக்கா? வன்னியருக்கா?
வேலூர் தொகுதியில் சொகுசு வேட்பாளர்கள் உங்கள் ஓட்டு முதலியாருக்கா? வன்னியருக்கா? Posted on 16-Mar-2019 வேலூர் தொகுதியில் சொகுசு வேட்பாளர்கள் உங்கள் ஓட்டு முதலியாருக்கா? வன்னியருக்கா?

வேலூர், மார்ச் 16-

வேலூர் தொகுதியில் சொகுசு வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்க ஆயத்தமாகியுள்ளனர். வேட்பாளர்களை பார்த்து வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் பணிகளும், வாக்காளர்களும் சுறுசுறுப்பின்றி காணப்படுகின்றனர். உங்கள் ஓட்டு வன்னியருக்கா? முதலியாருக்கா? என்ற கேள்வியும் வாக்காளர்களிடையே எழுந்துள்ளது. 
வேலூர் மாவட்டத்தில் வேலூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகும். வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் களம் இறங்குகிறார். திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் களம் இறங்குகிறார். இவர்கள் இருவரும் சாதிய ரீதியிலும், தற்போது வாழ்க்கை முறையிலும் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் ஆவார்கள். ஏ.சி.சண்முகம் தொழிலதிபர். கதிர் ஆனந்த் கல்வியாளர். சாதிய ரீதியில் ஏ.சி.சண்முகம் முதலியார் வகுப்பைச் சார்ந்தவர். கதிர் ஆனந்த் வன்னியர் வகுப்பைச் சார்ந்தவர். இவர்கள் இருவரையுமே தேர்தல் நடந்த முடிந்துவிட்டால் பார்ப்பதே மிகவும் அரிது. தேர்தல் முடியும் வரை வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு புதுப்புது வாக்குறுதிகளை கலர் கலராக வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஏ.சி.சண்முகம், நான் வேலூரிலேயே வீடு ஒன்றை கட்டப்போகிறேன். எனது 4 சட்டசபை தொகுதிகளிலும் தனித்தனியே அலுவலகம் அமைத்து ஆட்களை அமர்த்தி மக்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வேன். ஆண்டுதோறும் தொகுதிக்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். இந்த தேர்தலில் ரஜினிகாந்த்தின் ஆசி எனக்கு உண்டு என்று தெரிவித்தார். அத்துடன் கடந்த தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றேன் என்றார். 

ஆக மொத்தம் ஏ.சி.சண்முகம் மிகப் பெரிய தொழிலதிபர் ஆவார். இவர் வெற்றி பெற்றுவிட்டால் இவரை தொகுதி மக்கள் பார்ப்பதே அரிதாகிவிடும். அத்துடன் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே  தொகுதிக்குள் சுற்றுப்பயணம் வருவேன் என்று அவரே தெரிவித்துள்ளார். இதிலிருந்து வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தேர்தல் என்பதால் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டுவேட்டையாட வேண்டும். பின்னர் வழக்கம்போல சொகுசு வாழ்க்கைதான். குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியில் வரமாட்டமார் என்றும், மக்கள் அவரை பார்ப்பது என்பது இயலாத காரியம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர் தொகுதியில் இருப்பதை காட்டிலும் சென்னையில்தான் முகாமிட்டு காணப்படுவார். ஆதலால் தொகுதி வாக்காளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள் என்று அரசியல் நோக்கர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இவரை வாக்களித்து எம்பியாக தேர்வு செய்தால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக மாறிவிடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 
சரி இவர்தான் இப்படி என்றால் திமுக பொருளாளரும், காட்பாடி தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்தை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளனர். இவர் திமுகவில் உறுப்பினராக மட்டுமே உள்ளார். தந்தையின் நிழலில் கட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆனால் கட்சியில் இதுநாள் வரை எந்தவித பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவில்லை. அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், மத்திய மாவட்ட செயலாளராகவும், எம்எல்ஏவாகவும் வந்ததால் தனது மகனை எம்பியாக கொண்டு வந்துவிட வேண்டும் என்று இந்த வேகம் காட்டுகிறார் துரைமுருகன். மண்ணின் மைந்தன் என்று துரைமுருகனை சொல்லிக் கொள்ளும் திமுகவினர் அரசியலில் அரிச்சுவடி தெரியாத கதிர்ஆனந்த்தை தேர்தலில் களம் இறக்கியுள்ளனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சாதிய ரீதியாக இவர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் முதலியார் வாக்குகள் அதிகம் காணப்படுகிறது. இவர் ஏ.சி.சண்முகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும். கதிர்ஆனந்தோ தான் நடத்தும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரிக்கு செல்வது, வீட்டுக்கு வருவது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கட்சி பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் என்றால் கடந்த 3 ஆண்டுகளாக வந்து கலந்து கொள்கிறார். தந்தையின் செல்வாக்கில் தனயன் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகியுள்ளார். துரைமுருகனோ தனது வீட்டுக்கு பின்னால் கட்டப்பட்டுள்ள எம்எம்ஏ அலுவலகத்துக்கு இதுநாள் வரை வந்ததே இல்லை. இவரது வழித்தோன்றல் எப்படி இருப்பார் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 
சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் கதிர்ஆனந்த் அதாவது குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பவர் தேர்தல் முடியும் வரை வேண்டுமானால் வெளியில் வந்து வெயிலில் வாடி வதங்கி ஓட்டு கேட்பார். தேர்தல் முடிந்துவிட்டால் இவரை பார்ப்பதும் மிக மிக கடினமாகும். சமான்ய மக்களால் இவரை அவ்வளவு எளிதில் சந்தித்து விட முடியாது. திமுகவினரே கால் கடுக்க பல மணி நேரம் காத்திருந்து துரைமுருகனை சந்திக்கும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. கதிர்ஆனந்த்துக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்ததால் பல உடன்பிறப்புகள் நாம் எத்தனை ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து கொண்டிருக்கிறோம். நமக்கெல்லாம் தலைமை ஒரு வாய்ப்பு வழங்குவது இல்லை. இப்படி வாரிசுகள் வருவதால் நாங்கள் கடைசி வரை அப்படியே கட்சிப்பணியாற்றி விட்டு மண்ணோடு மண்ணாக மக்க வேண்டுமா? என்று காட்டமாக கேள்வி எழுப்பியதோடு பல திமுக உடன்பிறப்புகள் திடீர் போர்க்கொடியும் தூக்கியுள்ளனர். முகவரி இல்லாதவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சீட்டு வழங்கியுள்ளார். கதிர்ஆனந்த் கட்சிக்காக என்னென்ன போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். எத்தனை முறை சிறை சென்றுள்ளார். இந்த விவரங்களை திமுக தலைமை கழகம் ஏன் சீர்தூக்கி பார்க்கவில்லை. திமுக பொருளாளர் மகன் என்பதால் சீட் கொடுத்துவிட்டனர் என்று சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆக மொத்தம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இப்படி சொகுசு வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டு பாவம் அப்பாவி பொதுமக்கள் அல்லல்படப் போகிறார்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் முடிவை தேர்தலில் வாக்காளர்கள் செலுத்தும் வாக்குகள் மட்டுமே விடை சொல்லும். ஆதலால் வாக்காளர்களே உங்கள் வாக்கு வன்னியருக்கா? முதலியாருக்கா? என்பதை யோசித்து முடிவு செய்யுங்கள் என்று சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Label