OUR CLIENTS
வேலூரில் ஒப்பந்த சாலைப்பணியாளர்களை வெயிலில் வாட்டி வதைக்கும் நிறுவனம்!
வேலூரில் ஒப்பந்த சாலைப்பணியாளர்களை வெயிலில் வாட்டி வதைக்கும் நிறுவனம்! Posted on 16-Mar-2019 வேலூரில் ஒப்பந்த சாலைப்பணியாளர்களை வெயிலில் வாட்டி வதைக்கும் நிறுவனம்!

வேலூர், மார்ச் 16-

வேலூர் என்றாலே வெய்யிலூர் என்பது அனைவரும் அறிந்ததே. மனிதனை கொன்றுவிடும் அளவுக்கு கொடும் வெயில் கோடைக்கு முன்பே மண்டையை பிளக்கத் தொடங்கிவிட்டது. மக்கள் காலையிலேயே தங்களது பணிகளை முடித்துக்கொண்டு நிழலில் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்குமாறும் வானொலி, தொலைக்காட்சிகள், பண்பலை வானொலி, நாளிதழ்கள் வாயிலாக மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் வேலூரில் வெயில் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே  மே, ஜூன் மாத வெயிலைப்போல் காய்ச்சி எடுக்கிறது. இதனால் பொதுமக்கள் வாடி வதங்குகின்றனர். இது அன்றாட நிகழ்வாகவே மாறிவிட்டது. இன்னும் 3 நாட்கள், 4 நாட்கள் வெயிலின் தாக்கம் இருக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் தினமும் அதே நிலைதான் தொடர்கிறது.
மோர், பழரசம், தர்பூசனி, ஆப்பிள், கிர்னி, மாதுளை, சாத்துக்குடி, சப்போட்டா, திராட்சை பழங்கள் உள்ளிட்ட கோடைக்கு உகந்த உணவுகள் உட்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். காரணம் சன்-ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத்தால் மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் 11 மணிக்குமேல் மாலை 4 மணி வரை வெயிலில் தலைகாட்ட வேண்டாம் என பல மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். இது ஒருபுறமிருக்க சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் எல் அண்ட் டி நிறுவனத்திடம் சப்- காண்ட்ராக்ட் எடுத்துள்ள வேலூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தன்னிடம் வேலை செய்யும் பணியாளர்களை கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள பரபரப்பான தார் சாலையில் கடும் வெயிலில் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
 அவர்களது பணியானது சாலையில் சேரும் குப்பைகள், மணல் ஆகியவற்றை அகற்றும் பணிதான். துப்புரவு பணியாளர்களை சராசரி மனிதர்களாக கூட அந்த நிறுவனம் நடத்தவில்லை. அவர்களுக்கு அடிப்படை வசதிகள் அறவே செய்து தரவில்லை. தினமும் நெருப்பில் வாட்டுவது போல் அந்த ஏழை மக்களை வாட்டி எடுக்கும் அந்த தனியார்நிறுவனத்தை  வேலூர் மாவட்ட தொழிலாளர் நல அலுவலர்தான் விசாரித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அவர்களது உடல்நலனையும், மனநலனையும் உறுதி செய்ய வேண்டும். சுட்டெரிக்கும் கடும் வெயிலில் சிறிதுநேரம் கூட ஓய்வின்றி  உழைக்கும்  ஏழைத்தொழிலாளர்களுக்கு வேலை நேரத்தில் அணிய கையுறை, கண்ணாடி, காலணி, முகக்கவசம் (மாஸ்க்) போன்ற பாதுகாப்பு விஷயங்கள் எதுவுமே இல்லாமல் சாலையில் உள்ள உடைந்த கண்ணாடித் துகள்கள், இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை சிரமத்துடன் அகற்றிவருகின்றனர். 
மேலும்  எலுமிச்சம் பழச்சாறு, நீர் மோர் போன்ற நீர்ச்சத்து பானங்கள் வழங்க வேண்டியது அவசியம். ஆனால் நாம் கூறியதில் எந்த வசதியுமே செய்து தராமல் அவர்களுக்கு ரூ.250 மற்றும் ரூ.280 மட்டுமே தினக்கூலியாக வழங்கப்படுகிறது.  இதுகுறித்து அந்த ஒப்பந்தத்தை எடுத்துள்ள வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியதில் எங்களுக்கு எதுவும் தெரியாது, எல்லாம் உரிமையாளரிடம்தான் கேட்க வேண்டும் என்ற பதில் அளித்தனர். உரிமையாளரின் தொடர்பு எண்ணை தருமாறு கேட்டால் அதை தர அந்த தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர்.  சொற்ப காசுக்கு அன்றாடம் வெயிலிலும், வெப்பக்காற்றிலும் வாடி வதங்கும் இவர்களின் நிலையை மாற்றவேண்டிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் இந்த ஏழை கூலித்தொழிலாளிகள் வாழ்வு வளம் பெறும். தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து லாபம் கிடைக்கச் செய்வதை விட இந்த ஏழைத் தொழிலாளிகளுக்கு நேரடியாக வேலையைக் கொடுத்தால் தினக்கூலிப்பணம் முழுவதுமாக தொழிலாளர்களுக்கே கிடைக்கும் அதிகாரிகள் மனது வைத்தால் எதுவும் நடக்கும். அதிகாரிகள் நடவடிக்கையையும், இதுபோன்ற கொத்தடிமை தொழிலாளர்களையும் மாவட்ட நிர்வாகம் காப்பாற்றப் போகிறதா? அப்படியே விட்டுவிடப் போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label