OUR CLIENTS
ராமநாதபுரத்தில் போட்டி உறுதி - பா.ஜனதாவை வீழ்த்த கமல்ஹாசன் அதிரடி வியூகம்
ராமநாதபுரத்தில் போட்டி உறுதி - பா.ஜனதாவை வீழ்த்த கமல்ஹாசன் அதிரடி வியூகம் Posted on 18-Mar-2019 ராமநாதபுரத்தில் போட்டி உறுதி - பா.ஜனதாவை வீழ்த்த கமல்ஹாசன் அதிரடி வியூகம்

சென்னை, மார்ச் 18-

ராமநாதபுரத்தில் போட்டியிடுவது உறுதியான நிலையில் அந்த தொகுதியில் பாரதிய ஜனதாவை வீழ்த்த கமல்ஹாசன் வியூகம் அமைத்து வருகிறார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் காண்கிறது. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்றோடு முடிவடைந்த நிலையில் இன்றும் நாளையும் கமல்ஹாசன் தலைமையில் வேட்பாளர் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கமல் கட்சி சார்பில் போட்டியிட இருப்பவர்கள் பற்றி பல்வேறு யூகங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கமல்ஹாசன் தென் சென்னையிலோ ராமநாதபுரத்திலோ களம் இறங்கலாம் என்றும் கமீலா நாசர் மத்திய சென்னையிலும் துணைத் தலைவர் மகேந்திரன் பொள்ளாச்சியிலும் களம் இறக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின.
மத்திய சென்னை பகுதிகளில் கமீலா நாசருக்கு ஓட்டு கேட்டு போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. கமல்ஹாசனுக்காக ராமநாதபுரம் பகுதியில் கட்சி சார்பில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது. வேட்பாளர் தேர்வு பற்றி தலைமை நிர்வாகிகள் கூறும்போது:-
வேட்பாளர் பட்டியல் எப்படி இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் பல்வேறு ஆலோசனைகள் நடத்தி வருகிறார். அவர் எடுத்துள்ள முடிவுகளில் மிகவும் முக்கியமான ஒன்று பா.ஜனதாவுக்கு கடுமையான போட்டி கொடுத்து அவர்களை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பது. இதற்காக அந்த கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கும் பிரபலங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளார்.
பா.ஜனதா கன்னியாகுமரி, சிவகங்கை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. எனவே இந்த 5 தொகுதிகளிலும் கட்சியில் உள்ள பிரபலங்களை களம் இறக்க இருக்கிறோம்.
ராமநாதபுரத்தில் கமல்ஹாசன் போட்டியிடுவது உறுதி. கோயம்புத்தூரில் துணைத்தலைவர் மகேந்திரன் களம் காண்பார். மற்ற தொகுதிகளில் ஸ்ரீபிரியா, கமீலா நாசர், சினேகன், சுகா, கு.ஞானசம்பந்தம், கோவை சரளா இவர்களில் 3 பேர் களம் இறங்குவார்கள்.
கமல் கட்சியில் இணையாத அதே நேரத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற பிரபலங்களுடனும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. எனவே நாளை மறுநாள் வெளியாகும் பட்டியலில் சில ஆச்சரியங்கள் இருக்கலாம். ஆனால் பா,ஜனதாவை இங்கே நோட்டாவுக்கு அடுத்த இடத்துக்கு நிச்சயம் கொண்டு செல்வோம்.
பா.ஜனதா மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கமல் கட்சி தொடங்கியதே அ.தி.மு.க அமைச்சர்களை எதிர்த்து தான். ஆனால் சமீப காலமாக பா.ஜனதா தலைவர்கள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். டார்ச் லைட் சின்னம் கிடைத்ததை பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார். பதிலுக்கு கமலும் நோட்டாவால் தொலைந்து போன பா.ஜனதாவை டார்ச் லைட் வைத்து தேடப்போகிறேன் என்றார்.
இது தொடர்பாக எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது பணத்திற்காக பிழைப்பிற்காக அழுது புலம்பி மண்டியிட்டு வெட்டுகளை ஏற்ற முதுகெலும்பு இல்லாத நத்தை நாடாளும் பா.ஜனதாவை நக்கலடிப்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இவரைத் தேட வேண்டியிருக்கும்“ என பதிவிட்டார். இதுபோன்ற மோதல்களால் கமல் பா.ஜனதாவை வீழ்த்தியே தீருவேன் என்று தீவிரம் காட்டுகிறார்’.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கமல் ராமநாதபுரத்தில் போட்டியிடுவது உறுதியான நிலையில் அந்த தொகுதியில் கமல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். குறிப்பாக குடிநீர் பிரச்சினையை கையில் எடுத்து தொகுதி முழுக்க இலவசமாக குடிநீர் விநியோகம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து அந்த மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது:-
எப்போதுமே தமிழ் நாட்டின் தண்ணியில்லாக்காடு என்றால் அது ராமநாதபுரம் மாவட்டம்தான். அந்த அளவுக்கு தண்ணீர் பிரச்சினை. கட்சி ஆரம்பிக்கும்போதே, ‘உங்கள் ஊரில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன, ஒரு பட்டியல் கொடுங்கள், அதை சரி செய்ய முயலுங்கள்” என்று கமல் சொன்னார். அதன்படி நாங்கள் இந்த 6 மாதமாக இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறோம்.
பரமக்குடி தாலுகாவில் சோமநாதபுரம், வெங்கடேஷ்வரா காலனி, குலவிப்பட்டி மற்றும் அண்டக்குடி உள்ளிட்ட 25 கிராமங்களுக்கும் மூன்று நாளுக்கு ஒரு முறை தண்ணீர் லாரி கொண்டு சென்று அவர்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வருகின்றோம்.
இந்த 6 மாதத்தில் மாவட்டம் முழுவதும் இந்த பணி விரிவடைந்துள்ளது. இது கண்டிப்பாக வாக்குகளாக மாறும். கமல் இங்கு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். இதனை தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Label