OUR CLIENTS
திமுக கூட்டணி வெற்றி பெற்றால் மத்திய, மாநில அரசு பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தப்படும்& மு.க.ஸ்டாலின்!
திமுக கூட்டணி வெற்றி பெற்றால் மத்திய, மாநில அரசு பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தப்படும்& மு.க.ஸ்டாலின்! Posted on 25-Mar-2019 திமுக கூட்டணி வெற்றி பெற்றால் மத்திய, மாநில அரசு பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தப்படும்& மு.க.ஸ்டாலின்!

அரூர், மார்ச் 25-

 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றால் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

   தருமபுரி மாவட்டம் அரூரில் திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது : கடந்த காலங்களில் மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்த போது, தமிழகத்துக்கு எதையும் செய்யவில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 
நான் கேட்பதெல்லாம் திமுக என்ன செய்யவில்லை என்று தமிழக முதல்வரால் கூறமுடியுமா ? .  சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம், சேலம் ரயில்வே கோட்டம், சென்னை உள்ளிட்ட பெரும் நகரங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள், ரூ. 1550 கோடியில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை கொண்டு வந்தது திமுக ஆட்சியில் தான்.
ஆனால், இன்று மத்தியில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசு, கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவுகளை சிதைக்கும் நீட் தேர்வினை ரத்து செய்ததா, சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தியதா, கஜா புயல் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மத்திய அரசிடமிருந்து உரிய நிதிகள் கிடைத்தனவா, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு சார்பில் அமைக்கப்படும் மேகதாது அணைக்கட்டு திட்டத்தை ரத்த செய்ய தமிழக அரசு என்ன செய்தது என்ற கேள்விகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பதில் அளிக்க வேண்டும்.
சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை கடுமையாக எதிர்த்தது. தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இந்த திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். ஆனால், அதிமுக, பாஜக, பாமக கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து, எட்டு வழிச்சாலை திட்டத்தை பாமக எதிர்க்காதது ஏன் ?. பாமக வெளியிட்டுள்ள 10 அம்ச கோரிக்கையில் எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட்டது ஏன் என்பதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். அதிமுக, பாஜக, பாமக கூட்டணி என்பது பொருந்தாத, தமிழக மக்கள் விரும்பாத கூட்டணி ஆகும். 
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்றால், மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமையும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்  மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் உள்ள பணியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்ப திமுக சார்பில் வலியுறுத்தப்படும். 
அதேபோல் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ. 3 லட்சம் செலவில் தரமான வீடுகள் கட்டித்தரப்படும், சமையல் எரிவாயு உருளையின் விலைகள் குறைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களின் வேலை நாள் 100}ல் இருந்து 150 தினங்களாக உயர்த்தப்படும், மருந்து, மாத்திரைகளின் விலைகள் குறைக்கப்படும், ஒரு கோடி சாலைப் பணியாளர்கள் நியமனம், ஆட்டோ, டாக்சி தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த கோரிக்கைகள் அனைத்தையும் திமுக மத்திய அரசினை வலியுறுத்தி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அரூரில்  தொழில் பேட்டை  தொடங்கப்படும். தருமபுரி மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மேம்படுத்தப்படுவதுடன், அதில் பணிபுரியும் ஊழியர்கள் நலன்கள் காக்கப்படும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கிடப்பில் போடப்பட்டுள்ள துணை மின் நிலைய மின்சார உற்பத்தி பணிகள் விரைந்து முடிக்கப்படும். சித்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட அரசநத்தம், கலசப்பாடி மலை கிராமங்களுக்கு தார் சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.

Label